m முஸ்லிம் சமுதாயத்தில் மஸ்லக் தொடர்பான சர்ச்சைகள், விவாதங்கள் இன்றும் நீடிக்கின்றனவே! இன்றும் அனல் பறக்கும் விவாதங்களும் சூடான சர்ச்கைகளும்தாம் புகழ்பெற்ற மார்க்க மதரஸாக்கள் வெளியிடுகின்ற பத்திரிகைகளை ஆக்கிரமித்திருக்-கின்றனவே! (இன்று நாட்டில் பத்திரிகை வெளி-யிடாத மதரஸாவே இல்லை என்கிற அளவுக்கு மதர-ஸாக்கள் அனைத்தும் பத்திரிகைகளை வெளியிட்-டுக்கொண்டிருக்கின்றன) கடந்த 25 ஆண்டுகளில் இந்தச் சமுதாயம் மிகக் கடுமையான நெருக்கடிகளை-யும் மிகப்பெரும் பிரச்னைகளையும் சந்தித்து நிற்-கின்றது. என்றாலும் மஸ்லக் தொடர்பான சர்ச்சை-களுக்கும் சண்டைகளுக்கும் தான் முடிவே இல்லாத நிலைமையைப் பார்க்கின்றோம். நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலைமை? இதற்கு யார்தான் பொறுப்பு? இந்த நிலைமையை எப்படித்தான் மாற்றுவது? ஒரு மார்க்க அறிஞர் என்கிற நிலையில் உங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்களேன்.
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்று நாம் சந்தித்து நிற்கின்ற முக்கியமான முரண்பாட்டை நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் ஃபிக்ஹு தொடர்பான விவகாரங்களிலும், மஸ்லக் தொடர்பானவற்றிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தக் கருத்துவேறுபாடுகள் இந்தியத் துணைகண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) முற்றிப்போய் கடுமையாகியிருப்பதைப் போன்ற நிலைமையை உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது.
இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த மஸ்லக்குகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் இவற்றையே சமுதாயத்தின் முக்கியமான பிரச்னையாகப் புரிந்துவைத்திருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இவற்றையே உண்மையான மார்க்கமாகவும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் தம்முடைய மஸ்லக்குக்கு ஆதரவாக வாதிடுவதை மார்க்கத்திற்குச் செய்கின்ற மிகப்பெரும் சேவையாகவும் இவர்கள் நினைக்கின்றார்கள். மஸ்லக்குகளின் உயிர்நாடியே இந்தப் பிரச்னைகள்தாம் என்று இவர்கள் நினைக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. இதனால் இவர்கள் எதிராளியின் மஸ்லக்கை சகித்துக்கொள்வதற்கு எந்த நிலையிலும் முன் வர மாட்டார்கள்.
இது தொடர்பாக இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
முதலாவதாக மஸ்லக் தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகள் மார்க்கம், ஷரீஅத் தொடர்பான கொள்கை சார்ந்த கருத்துவேறுபாடுகள் கிடையாது. அதற்கு மாறாக இந்தக் கருத்துவேறுபாடுகள் அனைத்தும் சில சட்டங்கள், பிரச்னைகள் தொடர்பானவையே. அந்தச் சட்டங்கள், பிரச்னைகள் குறித்து ஷரீஅத்தின் நிலைப்பாட்டை அறிய முற்படும்போது ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகள்தாம் இவை. இந்தப் பிரச்னைகளோ மார்க்கத்தின் அடிப்படைகளுடன் தொடர்புள்ள பிரச்னைகள் அன்று. அதற்கு மாறாக அவை கிளைப் பிரச்னைகளாக, பகுதிப் பிரச்னைகளாகத்தான் இருக்கின்றன. குர்ஆனும் நபிவழியும்தாம் இறுதி ஆதாரங்கள் என அனைத்து மஸ்லக்குகளைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். அதன்படித்தான் செயல்படுகின்றோம் என்றே அனைவரும் வாதிடுகின்றார்கள். ஆனால் சில சட்டங்கள், பிரச்னைகள் தொடர்பாக அவற்றுக்குச் சான்றாக முன்வைக்கப்படுகின்ற சான்றுகள் குறித்துதாம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. எந்தவொரு மஸ்லக்கையும் ஆதாரமற்றது என்று சொல்லிவிட முடியாது. அனைத்துமே தமக்கென ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தச் சான்றுகளை மையப்படுத்தித்தான் வாதங்களும் சர்ச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சான்றுகளின் அடிப்படையில் எந்தப் பிரச்னையில் எந்த மஸ்லக்குக்கு முன்னுரிமை இருக்கின்றது என்கிற கோணத்தில்தான் விவாதம் நடக்கின்றது. இதனை நெஞ்சத்தில் பசுமையாக வைத்திருந்தால் கருத்துவேறுபாட்டில் கடுமையோ, தீவிரமோ ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
இந்த மஸ்லக்குகள் தொடர்பாக சர்ச்சைகள், வாதவிவாதங்களில் மூழ்கிப்போவதால் தீனின் உண்மையான நோக்கம், அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவை அமுங்கிப் போகின்றன; இறைவனுடனும் இறைத்தூதருடனும் தொடர்பும் பற்றும் மழுங்கிப் போகின்றன; நடத்தையிலும் எண்ணத்திலும் உயர்ந்தோங்க வேண்டும் என்கிற ஆசையும் கைரே உம்மத்தாக இருக்கின்றோம் என்கிற எண்ணத்தெளிவும், தன்னுடைய வெற்றிக்காகவும் உலகின் வெற்றிக்காகவும் அந்த மார்க்கத்திற்காக சுறுசுறுப்பாக செயல்பட்டாக வேண்டும் என்கிற கடமையுணர்வும் மறந்துபோகின்றன; இன்றைய காலத்தில் இஸ்லாம்தான் ஒரே மாற்றாக இருக்கின்றது என்கிற உண்மையும் இதுபோன்ற அடிப்படையான விவகாரங்களும் பார்வையிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் விலகிப்போய்விடுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற விஷயங்கள் நம்முடைய பேச்சிலும் விவாதத்திலும் இடம்பெறாமலே போய்விடுகின்றன.
மார்க்கத்தைப் பற்றிய சரியான கருத்தோட்டமும் தற்போதைய நிலைமைகளில் அது நம்மிடம் வேண்டுவன எவை என்பவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நம்முடைய நெஞ்சங்களில் இருக்குமேயானால், இந்தக் கிளைப் பிரச்னைகளிலும் சின்னச் சின்ன சர்ச்சைகளிலும் நாம் சிக்கிக்கொள்ளவே மாட்டோம். மற்றவர்கள் செய்கின்ற இஜ்திஹாதையும் செயல்முறையையும் மகிழ்ச்சியுடன் சகித்துக்கொள்வோம். தொடக்கக்காலத்தில் நபித்தோழர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அவர்களுக்கிடையிலும் சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் அந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்துக்கொண்டே அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றார்கள். மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்கின்ற பணியிலும் மார்க்கத்தை மேலோங்கச் செய்கின்ற போராட்டத்திலும் தோளோடு தோள் நின்று பங்கேற்றார்கள். அந்த அழகிய முன்மாதிரியை ஏற்றுச் செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் இந்த மஸ்லக் பற்றிய பிரச்னைகளே இல்லை என மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கின்றேன். மஸ்லக் பற்றிய கருத்து வேறுபாடுகளின் தீவிரத்தையும் கடுமையையும் கட்டுப்படுத்துவதில் ஜமாஅத் பெருமளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் ஒரு வகையில் அவற்றை முற்றாக ஒழித்துவிட்டிருக்கின்றது என்றே சொல்வேன். ஜமாஅத் அன்பர்களில் வெவ்வேறு மஸ்லக்குகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் யார் எந்த மஸ்லக்கைப் பின்பற்றுகின்றார் என்கிற அளவிலும் கூட ஜமாஅத் அன்பர்கள் விசாரித்துக்கொள்வதுமில்லை; அது பற்றிய சர்ச்சையே மூள்வதில்லை. இகாமத்தே தீன் - தீனை நிலைநாட்டுதல் என்கிற உயர்ந்த, சிறந்த குறிக்கோள் ஜமாஅத் ஊழியர்களை ஓரணியில் நிற்க வைத்திருக்கின்றது. இதே போன்று ஜமாஅத்துடன் தொடர்புடைய மார்க்க மதரஸாக்கள், நிறுவனங்களிலும் கூட ஃபிக்ஹு நிலைப்பாடுகள் பற்றி விவாதம் நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று எவர் மீதும் எந்தவோர் மஸ்லக்கும் திணிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, தாமாக நிலைப்பாடு ஒன்றை எடுத்துக்கொள்வதற்கு எல்லாருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது.
m நம்முடைய நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பாலும் நெருக்கமாக வாழ்கின்றார்கள். நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி இதே நிலைமை தான் என்றாலும் அண்மைக்காலமாக முஸ்லிம்களில் பெரும் எண்ணிக்கையினர் மாநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பதைப் பார்க்க முடிகின்றது. இவர்களுக்கும் பொதுவான முஸ்லிம்களுக்கும் தொடர்போ, உறவோ இருப்பதில்லை. தொழுகை வசதியின்றி, பள்ளிவாசல் இன்றி இவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் பெருநாள் தொழுகைகளுக்கும் இரமளான் மாதத்து தராவீஹ் தொழுகைகளுக்கும் கூட இவர்கள் வெகுதொலைவு பயணிக்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள். தனித்து வாழ்வதால் இவர்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதற்கும் இஸ்லாமிய அச்சில் பயிற்சி கொடுப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகின்றது. கிராமங்களிலும் இவ்வாறு ஓரிரு குடும்பங்களோ அல்லது நான்கைந்து குடும்பங்களோ மட்டும் முஸ்லிம்களாக இருக்கின்ற சூழலில் அந்தக் கிராமத்து முஸ்லிம்களும் மேற்படி சிக்கல்களுக்கு ஆளாகின்றார்கள். இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி வாழ்வதிலும், இஸ்லாமியப் பாரம்பர்யங்களைப் பின்பற்றுவதிலும் சிரமத்துக்கு ஆளாகின்றார்கள். இந்த முஸ்லிம் குடும்பங்களை முஸ்லிம் குடியிருப்புகளுடன் பிணைப்பதற்கு உங்களுடைய பார்வையில் எத்தகைய வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: ஒரு முக்கியமான பிரச்னையை நீங்கள் எடுத்துரைத்திருக்கின்றீர்கள்.
பொதுவாக பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை குடியிருப்பு வசதிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கின்ற பகுதிகளில் ஸ்லம் ஏரியா எனச் சொல்லப்படுகின்ற பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் விரல் விட்டு எண்ணி விடுகின்ற அளவுக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் மார்க்கத்தைப் பேணி வாழ்வதே பெரும் பாடாகிவிடுகின்றது. மார்க்கத்தின் கட்டளைகளும் அது விதிக்கின்ற பொறுப்புகளும் ஒரு பக்கம் இருக்க, இவர்கள் வாழ்கின்ற சூழல் இவர்களை நேரெதிர் திசையில் இழுக்கின்றது. மிகவும் இக்கட்டான நிலைமைதான்.
இவர்கள் தொடர்பாக நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம்? நான்கு களங்களில் கவனம் செலுத்துவது அவசியம் என்று எனக்குத் தோன்றுகின்றது.
- முதலாவதாக, நாடு முழுவதும் இவ்வாறு முஸ்லிம் குடியிருப்புகளை விட்டு விலகி தனித்தும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி வாழ்கின்ற முஸ்லிம்கள் குறித்து சர்வே எடுக்க வேண்டும். இவ்வாறு சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களின் மார்க்கத் தொடர்பு எந்த நிலைமையில் இருக்கின்றது? முஸ்லிம் குடியிருப்புகளை விட்டு விலகி வாழ்வதால் ஏற்படுகின்ற பாதகமான நிலைமையை இவர்கள் எப்படி எதிர்கொள்கின்றார்கள்? என்கிற ரீதியில் ஆய்வு நடத்த வேண்டும். என்னைப் பொருத்த வரை எல்லா இடங்களிலும் நிலைமை ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன். இஸ்லாத்தின்படி வாழ்வதற்கு இவர்களில் பலரும் பலவிதமான முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும். இவர்களை சீர்திருத்துவதற்கான திட்டம்வகுக்கும்போது அந்த முயற்சிகளும் அனுபவங்களும் பெரிதும் உதவியாக இருக்கும்.
- இத்தகைய இடங்களில் தங்கியிருந்து மார்க்க சேவையாற்றுகின்ற வகையில் முஅல்லிம்கள், ஆசிரியர்கள், இமாம்கள், அழைப்பாளர்கள் போன்றவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். இவர்கள் இந்த இடங்களில் தங்கியிருந்து மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் தேவையான அடிப்படைக் கல்வியையும் போதிப்பார்கள். இத்தகைய இடங்களில் வாழ்கின்ற மக்களின் மார்க்கத் தொடர்பை வலுப்படுத்துவதற்கு முயல வேண்டும். இதற்கான செலவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
- அடுத்து இந்தக் குடியிருப்புவாசிகளுக்கு அவர்களின் தேவைகளுக்கேற்ப அவர்களுடைய மொழியில் மார்க்கத்தின் அடிப்படைகளை விவரிக்கின்ற நூல்களை வழங்க வேண்டும். குர்ஆன், நபிமொழி, அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாறு ஆகியவற்றையும் நவீன மனங்களைத் திருப்திப்படுத்துகின்ற ஆக்கங்களையும் கொண்டதாக இந்த நூலககங்கள் இருத்தல் வேண்டும். இத்தகைய நூல்கள் இன்று நாட்டின் அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் புதியதாக நூல்களும் எழுதப்படல் வேண்டும்.
- இது தொடர்பாக இன்னொன்றையும் செய்யலாம். இவர்களின் பிள்ளைகளுக்காக இஸ்லாத்தைப் போதிக்கின்ற மதரஸாக்களை நிறுவி நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அடுத்த தலைமுறையை மார்க்கத்தின் நிழலில் கொண்டு வருவதற்கு இத்தகைய முயற்சி இன்றியமையாததாகும். இதற்காக மார்க்க மதரஸாக்களின் உதவியையும் பெறலாம். இது மிகப் பெரிய வேலை. இதற்காக முஸ்லிம் அமைப்புகளும் சமுதாயத்தின் நலன்களில் அக்கறை கொண்டிருக்கின்ற புரவலர்களும் ஒன்றுசேர்ந்து நீண்டக்காலத் திட்டம் வகுத்து செயல்பட்டாக வேண்டும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் தனது பங்கை ஆற்றும்.
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நீங்கள் குறிப்பிட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புளும் நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன. இவை அனைத்தும் சிறிய, பெரிய அளவில் தம்மால் இயன்றதைச் செய்து வருகின்றன. சில தனிமனிதர்களும் இந்தச் சவால்களில் ஆர்வம் கொண்டு தம்மால் முடிந்ததைச் செய்து வருகின்றார்கள். ஆனால் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள், நிறுவனங்கள், தனிமனிதர்கள் ஆகியோருக்கிடையில் எந்தவகையான தொடர்போ, இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடோ இல்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம் அமைப்புகள் ஒவ்வொன்றும் தத்தமது பாணியில் தம்மால் முடிந்ததைச் செய்து வருகின்றன. நீங்கள் குறிப்பிட்டுள்ள படி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளையும் இயக்கங்களையும் கொண்ட கூட்டமைப்புதான் அகில இந்திய முஸ்லிம் முஷாவரத். இந்தக் கூட்டமைப்பைக் கொண்டு நாம் பிரச்னைகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு தீர்ப்பதற்கு முயலலாம். கடந்த காலத்தில் இத்தகைய முயற்சிகள் பல முறை நடந்திருக்கின்றன. இந்தக் கூட்டமைப்பை வலுப்படுத்துவது நம் எல்லார் மீதும் இருக்கின்ற பொறுப்பாகும்.
m முஸ்லிம் தனியார் சட்டம் இன்று மிக முக்கியமான பிரச்னையாக இருக்கின்றது. ஒருவகையில் அதனை நம் மீது திணிக்கப்பட்ட, திடீரென முளைத்துவிட்ட அதிரடி பிரச்னையாகவும் சொல்லலாம். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்துடன் தொடக்கத்திலிருந்தே ஜமாஅத் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கின்றது. அது நிறுவப்படுவதிலும் ஜமாஅத் முக்கியமான பங்காற்றியது. நீங்களும் அதன் துணைத் தலைவராக இருக்கின்றீர்கள். முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கின்றதா? எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது? தற்போதைய நிலைமை என்ன?
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்னையை அசாதாரணமான பிரச்னை என்றோ ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் திடீரென முளைத்துவிட்ட அதிரடி பிரச்னையாகவோ சொல்லி விட முடியாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் தத்தமது தனியார் சட்டங்களின்படிச் செயல்படுகின்ற சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சுதந்திரத்தையும் உரிமையையும் தக்க வைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டியது அவசியமாகின்றது.
சில சமயம் நாட்டின் நீதிமன்றங்கள் தருகின்ற சில தீர்ப்புகள் முஸ்லிம் தனியார் சட்டத்துடன் மோதுகின்றவையாக அமைந்துவிடுகின்றன. அல்லது இந்த நீதிமன்றங்கள் தருகின்ற சில விளக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு நேர் எதிரானவையாக அமைந்துவிடுகின்றன. இந்தத் தீர்ப்புகளை எதிர்க்கத் தவறினால் இந்தத் தீர்ப்புகளும் இந்தத் தீர்ப்புகளில் இடம் பெற்றுவிட்ட தவறான விளக்கங்களும் வருங்காலத்தில் தவறான முன்னுதாரணங்களாக அமைந்துபோகின்ற ஆபத்து இருக்கின்றது. பிறகு சிறுகச் சிறுக ஷரீஅத்தின் பல்வேறு அம்சங்கள் மீது கை வைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்துவிட நேரிடலாம்.
இதே போன்று நாட்டில் பல்வேறு மதத்தவர்களுக்கு தனித்தனி தனியார் சட்டங்கள் எதற்கு? அனைத்தையும் ஒழித்துவிட்டு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரலாமே என்றும் அவ்வப்போது குரல் எழுப்பப்படுவதுண்டு. நாட்டின் உச்ச நீதிமன்றமும் தன் பங்குக்கு இது குறித்து அரசின் கவனத்தை அவ்வப்போது ஈர்த்து வருவதுமுண்டு. முஸ்லிம்களின் விருப்பத்துடன்தான் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றே இன்று வரை அரசாங்கம் சொல்லி வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் விருப்பம் என்று சொல்லி இவர்கள் எத்தகைய நடவடிக்கையை எப்போது எடுப்பார்கள் என்று எதுவும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.
அதே சமயம் இங்கு இன்னொன்றையும் அழுத்தம்திருத்தமாக, ஆணித்தரமாக தெளிவுபடுத்திவிடுவதும் அவசியமாகின்றது. அதாவது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விரும்பினாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தம்முடைய விருப்பங்களின் அடிப்படையில் எத்தகைய திருத்தத்தையும் கொண்டு வர முடியாது. அந்த உரிமை அவர்களுக்கு இல்லை; எவருக்கும் இல்லை.
இந்தப் பிரச்னையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பாராட்டத்தக்க முறையில் செயலாற்றி வருகின்றது. பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், இயக்கங்கள், தனி மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதற்கு இருந்துவருகின்றது.
என்றாலும்இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அது மிகவும் கவனிக்கத்தக்க பிரச்னையும் கூட. அண்மைக்காலமாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தனது வட்டத்துக்கு வெளியே இருக்கின்ற பிரச்னைகளையும் எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. பல்வேறு பிரச்னைகளில் அது மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளது. இந்த அக்கறையும் ஆர்வமும் இனி வருங்காலத்தில் அதற்கு நன்மையோ இலாபமோ அளிக்காது என்பதுதான் எனது கவலையெல்லாம்.
உங்களுக்கு ஒன்று நினைவிருக்கும். பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்டவுடன் ராபிதா கமிட்டி, ஆக்ஷன் கமிட்டி, பாபரி மஸ்ஜித் கமிட்டி ஆகிய மூன்று கமிட்டிகள் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்களுக்குள் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் பணியில் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை. இந்த நிலையில் சமுதாயத்தின் முக்கியமான பிரச்னை என்பதால் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்த விவகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என யோசனை சொல்லப்பட்டது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற முக்கியமான பிரச்னை என்பதால் இந்த விவகாரத்தை வாரியம் எடுத்துக் கொண்டது.
ஆனால் இது எங்குப் போய் முடிந்ததெனில் இன்று முஸ்லிம்களின் கட்டாயக் கல்வி, வக்ஃப் சொத்துகள் பற்றிய பிரச்னைகள் போன்றவற்றையும் வாரியம் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. இத்தனைக்கும் இந்தப் பிரச்னைகளை ஏற்கனவே சில முஸ்லிம் அமைப்புகள் ஆண்டு வந்துள்ளன; துடிப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. இப்போது நிலைமை என்னவெனில் இந்த விவகாரத்தில் அந்த அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை! இதன் விளைவாக வாரியத்துடனான அந்த அமைப்புகளின் தொடர்பும் உறவும் பலவீனமடைகின்ற ஆபத்து மூண்டுள்ளது. தங்களுடைய பணிகளில் வாரியம் தலையிடுவதாக அந்த அமைப்பினர் நினைப்பதற்கும் வாய்ப்வு இருக்கின்றது.
இதே போன்று சமூக சீர்திருத்தப் பணிகளிலும் வாரியம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இந்த வேலையில் முஸ்லிம் அமைப்புகள் அனைத்துமே தொடக்கத்திலிருந்தே ஈடுபட்டு வருகின்றன. மார்க்க மதரஸாக்களும் தனி மனிதர்களும்கூட இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் தனியார் சட்ட வாரியமோ இது தொடர்பாக அந்த அமைப்புகளைத் தொடர்பு கொள்வதுமில்லை. அந்த அமைப்புகளும் இந்த விவகாரத்தில் வாரியத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.
சமுதாயத்தின் அமைப்புகளால் தீர்த்துக்கொள்ளத்தக்க பிரச்னைகளையும் வாரியம் வலிந்து தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகத் தோன்றுகின்றது. இதன் இயல்பான விளைவாக அந்த அமைப்புகளுக்கும் வாரியத்துக்கும் இடையில் இடைவெளி விழலாம். அதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தனது செயல்பாடுகளை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பானவற்றில் மட்டும் குவித்து வைத்திருப்பதே நல்லது. அதுதான் அதற்கு வலு சேர்க்கும். அந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் முஸ்லிம் அமைப்புகள் அதற்கு முழு மனநிறைவுடன் ஒத்துழைப்பும் ஆதரவும் அளிப்பர்.
m இன்று நாட்டில் ஊழல் ஒழிப்பு மிகப்பெரும் பிரச்னையாக பேருருவம் எடுத்துள்ளது. மிகப் பெரும் மக்கள் பிரச்னையாகவும் இது வளர்ந்துள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தமான விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் அரங்கிலும் சட்டம் இயற்றுதல் தொடர்பாகவும் நடந்து வருகின்ற முயற்சிகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நமது நாட்டில் ஊழலும் இலஞ்சமும் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. ஆனால் இப்போது பயங்கரமான அளவில் பேருருவம் எடுத்திருப்பதைப் போன்று இதற்கு முன் எப்போதும் நடந்தது கிடையாது.
இது நம் நாட்டின் அரசியல், பொது வாழ்வு ஆகியவற்றின் நாடி நரம்புகளிலெல்லாம் இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றது.
இந்த நாட்டில் இலஞ்சம் கொடுத்து எந்தவொரு வேலையையும் சாதித்து விட முடியும்; இலஞ்சம் கொடுக்காமல் ஆகுமான உரிமையைக் கூடப் பெற முடியாது. இந்த உண்மைநிலையை இந்த நாட்டு குடிமக்கள் அனைவருமே நன்கு அறிந்திருக்கின்றார்கள்.
இப்போது இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்காக இங்கே மக்கள் எழுந்திருக்கின்றார்கள். பாடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் முயற்சிகளை நாங்கள் மனமார வரவேற்கின்றோம்.
ஆனால் வெறுமனே சட்டம் இயற்றுவதால் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துவிட முடியாது என்றே நாங்கள் கருதுகின்றோம். அதற்கு மாறாக இலஞ்சமும் ஊழலும் புதுப்புது வேடங்களைப் பூண்டு வந்துகொண்டே இருக்கும்.
இந்தத் தீமைகளை ஒழிப்பதற்கு இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவதாக, நாடெங்கிலும் சமூகம் முழுவதிலும் இலஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிரான சூழலை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இலஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் மன்னிக்க முடியாதக் குற்றமாக நினைக்க வேண்டும். இந்தச் சமூகச் சூழல் எந்த அளவுக்கு உக்கிரமாக இருக்க வேண்டுமெனில் இலஞ்சமாகப் பணத்தைக் கொடுப்பதற்கோ, வாங்குவதற்கோ எவருக்குமே தைரியம் இருக்கக் கூடாது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக இத்தகைய இறுக்கமான சூழலை ஏற்படுத்தாத வரையில் வெறுமனே சிலரைக் கைது செய்து சிறையில் அடைப்பதாலோ, சிலர் மீது வழக்குத் தொடர்வதாலோ இந்தத் தீமையை ஒழிக்கவே முடியாது. இத்தகைய சமூகச் சூழலை ஏற்படுத்துவதற்காக எவருமே எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் வருத்தம் தருகின்ற செய்தி.
இரண்டாவதாக தனி மனிதர்களிலும் சமூகத்திலும் இறையச்சமும் மறுமையில் இவ்வுலகச் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையும் நிலை பெற வேண்டும். இலஞ்சம் வாங்குகின்ற ஒவ்வொரு மனிதனும் நாளை மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்குமே...! அப்போது இந்தச் செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றோம் என்று எண்ணி மனம் பதைக்க வேண்டும். இலஞ்சம் கொடுக்கின்றவனும் எந்தத் தகாத செயலுக்காக அல்லது முறைகேட்டுக்காக இலஞ்சம் கொடுக்கின்றானோ அந்தத் தகாத செயல் குறித்தும் முறைகேடு குறித்தும் நாளை மறுமை நாளில் இறைவன் விசாரித்தால் என்ன பதில் சொல்வது, அவன் தருகின்ற தண்டனையை எப்படிச் சகிப்பது என்கிற ரீதியில் யோசிக்க வேண்டும். இதுதான் இந்தப் பிரச்னைக்குச் சரியான தீர்வாகும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இத்தகைய மனோபாவத்தை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய சிந்தனைத் தெளிவை நெஞ்சங்களில் அழுத்தமாகப் பதியச் செய்வதற்கும்தான் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.
தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat.Translated by T Azeez Luthfullah.
1 comment:
Great information! I appreciate that you have put it in this simple and more understandable form. Honestly, my head hurts from all the technical terms that the government and insurance companies put in print.
Post a Comment