Pages

Showing posts with label Tazkiya. Show all posts
Showing posts with label Tazkiya. Show all posts

Thursday, September 13, 2012

இதயத் தூய்மை : எம். ஐ. அப்துல் அஜீஸ்



பயிற்சிக்கும் தர்பியத்துக்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றது. தகுதி படைத்த மனிதர்களை வார்த்தெடுப்பதுதான் தர்பியத்தின் முதன்மை நோக்கமாகும்.

நடப்பு மீக்காத்துக்காக (ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2015 வரையிலான காலக்கட்டம்) வகுக்கப்பட்டுள்ள நான்காண்டு செயல்திட்டத்தில் இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்ற பணிக்கு (தத்ஹீரே கல்ப்) முதன்மை முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது.

நம்மை நாமே சுய மதிப்பீடு செய்யும்போது நாம் இதில் பின்தங்கி இருக்கின்றோம் என்கிற உணர்வு மேலிட வேண்டும். அதுதான் தர்பியத்துக்கான முதல் படி ஆகும். தனி மனிதர்களின் தர்பியத்துடன் ஒட்டுமொத்த ஜமாஅத்தின் தர்பியத்தின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும்.
தர்பியத் என்றால் என்ன? இதயத்தைச் செம்மைப்படுத்துவதற்குப் பெயர்தான் பயிற்சி, தஸ்கியா, தர்பியா!

இதயத்தின் பல்வேறு நிலைமைகளைக் குறித்து குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. நல்ல இதயம் எப்படி இருக்கும் என்பதையும் குர்ஆன் விவரித்-துள்ளது. கெட்ட இதயம் எத்தகையதாக இருக்கும் என்பதையும் குர்ஆன் சுட்டிக்காட்டியுள்ளது.

தீய செயல்களின் காரணமாக இதயங்கள் கறை படிந்து போகும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது:
“மாறாக உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் இதயங்களில் படிந்துவிட்டிருக்கின்றது” (திருக்குர்ஆன் 83;14)
எவர்கள் வரம்புமீறுகின்றார்களோ அவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விடும்.  அவர்கள் வழிகாட்டுதல் பெற மாட்டார்கள்.
“இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம்” (திருக்குர்ஆன் 10;74)
இறுகிப்போன இதயங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.


“படிப்பினை தருகின்ற சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுக்கள் பொங்கி எழுகின்றன. இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்-டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை” (திருக்குர்ஆன் 2;74)
இதே போன்று குருடாகிப்போன இதயங்கள் என்றும் குர்ஆன் இவர்களைக் கண்டிக்கின்றது.
“பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்-திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக் கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே. உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை. ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகின்றன” (திருக்குர்ஆன் 22;46)
நயவஞ்சக நடத்தைக்கு வித்திடுவதும் இதயம்தான். நோயுற்ற இதயம் என குர்ஆன் எச்சரிக்கின்றது.
“எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 2;10)
சிந்தித்துணராத இதயங்களைக் கொண்டவர்களை அலட்சியம் தொற்றிக் கொள்ளும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது.
“அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்-வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்-பதில்லை. அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்-பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.” (திருக்குர்ஆன் 7;179)
வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்துகொள்வதால்தான் இதயத்தை நோய் தொற்றிக் கொள்கின்றது என்றும் குர்ஆன் எச்சரிக்கின்றது.


“எனவே, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறு செய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும்” (திருக்குர்ஆன் 9;77)
இறைவனை நினைவு கூர்கின்ற இதயங்களை மென்மையான, மிருதுவான இதயங்கள் எனக் குர்ஆன் வர்ணிக்கின்றது.
“அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கின்றது. பின்னர் அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன” (திருக்குர்ஆன் 39;23)
அல்லாஹ்வை நினைவுகூர்வதில்தான் மன நிம்மதி இருக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.

“மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன” (திருக்குர்ஆன் 13; 28, 29)
இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு பரிவும் கருணையும் நிறைந்த இதயம் கிடைக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது .

“மேலும், எவர்கள் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களின் உள்ளங்களில் நாம் பரிவையும் கருணையையும் ஏற்படுத்தினோம்” (திருக்குர்ஆன் 57;27)
 தூய்மையான உள்ளங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.




“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திட மாட்டா. ஆனால் எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர” (திருக்குர்ஆன் 26; 88, 89)
அல்லாஹ்வின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உருகிவிடுகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.


“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?” (திருக்குர்ஆன் 57;16)

இறைநினைவால் நடுநடுங்கிப்போகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகிறது.



“மேலும், (நபியே) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக. அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால் அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன.” (திருக்குர்ஆன் 22; 34, 35)
 அல்லாஹ்வின் பக்கம் அதிகமாக மீளுகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார்.” (திருக்குர்ஆன் 50;33)
இதயங்களைத் தூய்மைப்படுத்துகின்ற பணி இறைத்தூதர்கள் செய்த பணி ஆகும். இதயத் தூய்மை இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. இரண்டும் முக்கியமானவை. இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை ; (1) நோய்கள், பலவீனங்கள், குறைகள் ஆகியவற்றை நீக்குதல். (2) நன்மைகள், நலங்கள், நிறைகள் ஆகியவற்றை செழித்தோங்கச் செய்தல்.

எந்தவிதமான கசடோ, குப்பையோ, களங்கமோ இல்லாத இதயம்தான் தேவை.

எத்தகைய ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இம்மிளவுகூட வளைந்து கொடுக்காத, தயங்காத, தடுமாறாத வீரஞ்செறிந்த இதயம்தான் தேவை.

எந்தவிதமான சந்தேகத்துக்கும் சஞ்சலத்திற்கும் உள்ளாகாத, தடுமாறாத உள்ளம்தான் தேவை.

பொய், பகட்டு, வஞ்சகம் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை பெற்ற தூய்மையான இதயம்தான் தேவை.

இதயத்தூய்மைக்கு அடிப்படைகளாக இரண்டைச் சொல்லலாம். இந்த இரண்டையும் வளர்த்துக் கொள்வதில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.

முதலாவதாக, அல்லாஹ்வின் மீது அன்பு. அல்லாஹ்வின் மீது அதீத அன்பு செலுத்துகின்றவர்களாய், படைத்தவனின் மீது பேரன்பு கொண்டவர்களாய், கருணை மிக்க இறைவனின் மீது பற்று வைத்திருப்பவர்களாய் நாம் இருக்க வேண்டும். “அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள்” என்கிற உன்னத நிலையை அடைய வேண்டும். அந்த அளவுக்கு ஆழமானதாகவும் வலுவானதாகவும் இறைத்தொடர்பு இருத்தல் வேண்டும்.

இரண்டாவதாக, நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மறுமைக்கே முன்னுரிமை தருதல் வேண்டும். உலக இலாபங்களைவிட மறுமை இன்பங்களுக்கே முன் னுரிமை தருகின்ற மனப்பக்குவம் நமக்கு இருத்தல் வேண்டும். அற்பமான, குறுகிய கால உலக இன்பங்களை விட நீடித்த, நிலையான, முடிவே இல்லாத மறுமை நலன்களுக்கு முன்னுரிமை தருகின்றவர்களாய் நாம் மாற வேண்டும்.

உலகத்தை விட மறுமைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தருகின்ற இந்தப் பண்பை நாம் வளர்த்துக்கொள்ளாவிட்டால் நாம் தாஃகூத்துக்கு அடிமையாகிப் போவோம்.

மறுமையைவிட இந்த உலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆபத்தில் முடியும். இத்தகைய மனிதர்கள் மீது இறைவனின் கோபம் உண்டாகும். அவர்களைப் பயங்கர வேதனை சூழ்ந்துகொள்ளும்.

எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களக்கு மாபெரும் வேதனையும் இருக்கின்றது. இதற்குக் காரணம் இவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதுதான். (திருக்குர்ஆன் 16 ; 106)

இதயத்தைப் பாதிக்கின்ற நான்கு பலவீனங்கள்

நான்கு பலவீனங்கள் இதயத்தைப் பாதிக்கும். அவற்றைக் குறித்து விழிப்புடன் இருந்து அவற்றிலிருந்து விலகி இருத்தல் அவசியமாகும். இதயத்தூய்மை குறித்து கவலைப்படுகிற அனைவரும் இந்தப் பலவீனங்களைத் துறப்பது குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

1) டென்ஷன். இதுதான் முதல் பலவீனம். டென்ஷன் அடைதல் இதயத்தைப் பாதிக்கும். எப்போதும் எந்நேரமும் எதைக்குறித்தாவது டென்ஷன் அடைவது. பிரச்னைகளை நினைத்து நினைத்து பதற்றமடைவது. பணிகளை எண்ணிப் பார்த்தும் செய்ய வேண்டிய பணிகளை நினைத்துப் பார்த்தும் டென்ஷன் அடைதல். இவையெல்லாமே இதயத்தைத் தூய்மைப்படுத்துவதிலிருந்து நம்முடைய கவனத்தைச் சிதறச் செய்துவிடும்.

2) பிஸியாக இருப்பது. எப்போதும் பிஸியாக இருப்பதும் ஆபத்தானதே. எப்போதும் தொழில், வணிகம், பணி, பணம் என்று ஆலாய்ப் பறப்பது. எந்நேரமும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது. அந்த ஒற்றை இலக்குடன் இருபத்தினான்கு மணி நேரமும் பிஸியாக இருப்பது. ஒருவர் காலையில் 6.30 மணிக்கு கடையைத் திறப்பார். இரவு 11.30 மணி வரை கடையே கதி எனக் கிடக்கின்றார் எனில், எப்போதும் பிஸியாக இருக்கின்றார் எனில் அதனால் என்ன நன்மை? காலையில் 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 வரை உழைத்தால்தான் வெற்றியா? வேறு எதற்கும் நேரம் இல்லாத வகையில் பிஸியாக இருப்பது இதயத்தூய்மையிலிருந்து கவனத்தைத் திருப்பி விடும்.

3) சுய பச்சாதாபம் கொண்டு வருந்துதல். இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். ஒருவர் எந்நேரமும் தன்னைச் சூழ்ந்துள்ள தொல்லைகள் குறித்தும், தான் சந்தித்து நிற்கின்ற பிரச்னைகள் குறித்தும், தன்னுடைய கஷ்டங்கள் குறித்தும் நினைத்து நினைத்து வருந்துகின்றார் எனில் அவருடைய இதயம் தொல்லைகளாலும் பிரச்னைகளாலும் கஷ்டங்களாலும் நிறைந்துவிடும். பிறகு இதயத்தூய்மைக்கு ஏது வாய்ப்பும் நேரமும்?

4) ஆசை. ஆசை. ஆசை. அதிகமாக ஆசைப்படுதல். இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். நிறைவேறாத ஆசைகளாலும், கனியாத ஏக்கங்களாலும், மோசம் போன எதிர்பார்ப்புகளாலும் சின்ன சின்ன ஆசைகளாலும் பெரிய பெரிய ஆசைகளாலும் விருப்பங்களாலும் ஒருவருடைய இதயம் நிறைந்திருக்கின்றது எனில், இதயத்தூய்மைக்கு வழி ஏது?

இதயத்தூய்மைக்கான ஐந்து வழிமுறைகள்.

1) முதலாவதாக அல்லாஹ் ஏவியதைச் செய்ய வேண்டும். அல்லாஹ் தடுத்தவற்றிலி ருந்து முற்றாக விலகி இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஹராமானவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருத்தல் வேண்டும்.

அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘ஒருவர் பாவம் செய்கின்ற போது சின்னதாக கரும்புள்ளி ஒன்று பதிந்துவிடுகின்றது. அவர் அதிலிருந்து மீளாமல் மீண்டும் மீண்டும் பாவம் செய்து அதிலேயே திளைத்திருப்பாரெனில் அந்தக் கரும்புள்ளி அடர்த்தியாக அவருடைய இதயம் முழுவதையும் சூழ்ந்துகொள்கின்றது’.

எனவே அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஹராமான சம்பாதியத்திலிருந்து விலகி இருத்தல் வேண்டும். ஹராமான வருமானத்தாலும் ஹராமான உணவுப் பொருள்களை விழுங்குவதாலும் இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஹராமான வருமானமும் உணவும் மனிதனின் நிம்மதியைப் பறிக்கக் கூடியவையாகும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கின்றது. ஜமாஅத்தின் அமைப்புச்சட்டத்தில் ஜமாஅத் உறுப்பினரின் பொறுப்புகளாக எட்டு பொறுப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மூன்று பொறுப்புகள் ஹராமான வருமானத்திலிருந்து விலகி இருப்பது தொடர்பானைவையாகும்.
(3)    ஷரீஅத்தில் ‘மாஸீயத்தே ஃபாஹிஷாஹ்’* எனும் பிரிவுக்குள் வரும் வரு-மான வழிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அதனை விட்டுவிட வேண்டும்; அதனால் எவ்வளவு இழப்பு ஏற்படினும் சரியே! மேலும் சம்பாத்தியத்-தில் இப்படிப்பட்ட வருமா-னத்தின் ஒரு பகுதி கலந்து விட்டது என்றால், அந்தப் பகுதியை விட்டும் சம்பாத்தியத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
(4)     ஹராமான (விலக்கப்பட்ட, சட்டத்துக்குப் புறம்பான) முறையில் ஈட்டப்-பட்ட பணம் அல்லது சொத்து அவருடைய கைவசமிருப்பின். அதனைக் கைகழுவி விட வேண்டும். ஆனால், அந்தச் சொத்தோ பணமோ பிரித்தறிய முடியாத அளவுக்கு மொத்த சம்பாத்தியத்தில் இரண்டறக் கலந்து விட்டிருந்-தால், இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
(5)    மற்றவருக்குச் சொந்தமான அல்லது மற்ற-வருக்குச் சேர வேண்டிய சொத்திலிருந்தோ பணத்-திலிருந்தோ ஒரு பகுதியையோ அல்லது பல பகுதி-களையோ பறித்து அவற்றை அவர் தம்முடைய சொத்திலோ பணத்திலோ சேர்த்துக் கொண்டிருந்-தால்  உடனடியாக அவர் அவற்றைத் தனியாகப் பிரித்-தெடுத்து அவற்றை அவற்றுக்கு உரியவரி-டம் திருப்பிக் கொடுத்து விட வேண்-டும்.  உரிமை-யாளர் யார் எனத் தெரியும்போதும் அவரிட-மிருந்து பறிக்கப்பட்ட சொத்து அல்லது பணம் இன்னதுதான் எனத் தெளிவாக அடையாளம்  காண முடிகிற போதும்தான் இவ்வாறு உரியதை உரியவரிடம் திருப்பிக் கொடுப்பது சாத்தியமா-கும். இல்லையெனில் இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புச் சட்டம் பாகம் 2; பிரிவு 8 (3,4,5)

அண்ணல் நபிகளார்(ஸல்) ஹராமான சம்பாத்தியத்தின் பாதிப்பை நபிமொழி ஒன்றில் விவரித்துள்ளார். ‘ஒருவர் நீண்ட தொலைவு பயணம் செய்து வருகின்றார். இறைவனைத் தொழுகின்றார். இறைவனை நினைவுகூர்கின்றார். மனம் உருக அழுது அரற்றி இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். ஆனால் அவர் அணிந்திருக்கின்ற ஆடை ஹராமான சம்பாத்தியத்தி-லிருந்து பெறப்பட்டது. அவர் உண்ட உணவு ஹராமான சம்பாத்தியத்திலிருந்து பெறப்பட்-டது எனில் அவருடைய முறையீடு எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?.’

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் தஸ்கியத்துன் னஃப்ஸ் இதயத் தூய்மை என்பது இதயத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது வாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவியதாகும்.

2) அடுத்ததாக, குர்ஆனுடன் தொடர்பு ஆழமானதாகவும் வலுவானதாகவும் அமைய வேண்டும். நாள்தோறும் குர்ஆன் ஓத வேண்டும். பொருள் புரிந்து வாசிக்க வேண்டும். குர்ஆன் தருகின்ற செய்தியை உள்வாங்கிக் கொள்வதற்காக முயல வேண்டும்.

குர்ஆனுக்கு அபாரமானதோர் சக்தி உண்டு. அதுதான் இதயத்தையே மாற்றிவிடுகின்ற, புரட்டிப்போட்டுவிடுகின்ற சக்தி. இதயத்தையே செம்மைப்படுத்திவிடுகின்ற ஆற்றல் குர்ஆனுக்கு உண்டு.

எனவே எப்பாடுபட்டாவது நாள்தோறும் குர்ஆன் ஓதுவதற்கும் அதனைப் புரிந்து கொள்வதற்கும் அதன் மொழிபெயர்ப்பையும் விளக்கவுரையையும் வாசிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நேரத்தைப் பிழிந்தெடுத்து குர்ஆனை ஓதுவதில் செலவிட வேண்டும்.

3) அடுத்ததாக இஹ்திஸாப். இதயத்தூய்மைக்கு இஹ்திஸாபே நல்மருந்து. சுய மதிப்பீடும் சுய ஆய்வும் முக்கியமானவை. உளத்தூய்மையுடன் அன்றாடம் இரவு படுக்கப் போகு முன் இஹ்திஸாப் செய்ய வேண்டும்.

உமர்(ரலி) கலீஃபாவாக ஆட்சி செலுத்துகின்ற காலம் அது.

கலீஃபா உமருக்கு ஒரு பழக்கம். தன்னுடைய இரவுப் பொழுதுகளை மூன்று பகுதிகளாய்ப் பிரித்து ஒன்றை மக்கள் குறை தீர்ப்பதற்கும் அடுத்ததை இறை வழிபாட்டுக்கும் மூன்றாவதை ஓய்வுக்கும் ஒதுக்கி வந்தார் உமர்(ரலி).

இரவில் மக்கள் குறைகளை நேரடியாக அறிந்துகொள்வதற்கும் குறைகளைத் தீர்ப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நகர்வலம் போவதையும் வழக்கமாய் வைத்திருந்தார் கலீஃபா உமர்(ரலி).

இவ்வாறு ஒரு நாள் இரவு வேளையில் நகர்வலம் கிளம்பிய போது அஸ்லம்(ரலி) என்கிற நபித்தோழரையும் தம்முடன் அழைத்துச் சென்றார் உமர்(ரலி). இருவரும் மதீனத்து வீதிகளில் சுற்றித் திரிந்து விட்டு மஸ்ஜிதுன் னபவியை அடைந்தனர். ஒய்வு எடுத்துவிட்டு இரவின் கடைசிப் பகுதியை இறைவழிபாட்டில் கழிக்கத் திட்டமிட்டிருந்தனர்.

களைத்துப் போயிருந்த அஸ்லம் படுத்த மாத்திரத்தில் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த அஸ்லம் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’
‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’
‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’
என யாரோ கடுமையான குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

விருட்டென்று எழுந்தார் அஸ்லம். அமீருல் முஃமினினை இந்த இரவு வேளையில் திட்டுபவர் யாரோ என அறிந்து கொள்ளவும் ஒரே வீச்சில் அவரைப் பிடித்துவிட வேண்டும் என்கிற ஆசையிலும் அஸ்லம் பாய்ந்தார்.

ஆனால்-

அவர் கண்ட காட்சி அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.

‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’
‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’
‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’
எனக் கடுமையான குரலில் விமர்சித்துக் கொண்டிருந்தது உமர்(ரலி) அவர்களே தாம்.

அந்த அகால வேளையில் மதீனத்து மாநகரமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆட்சியாளர் உமர்(ரலி) தன்னைத்தானே சுயமதிப்பீடும் ஆய்வும் செய்து கொண்டிருந்த காட்சியைத்தான் அஸ்லம்(ரலி) கண்டார்.

இதே போன்று ரோம சாம்ராஜ்யம் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு பெரும் அளவில் பொற்குவியல்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தன.

அந்தப் பொற்குவியலைப் பார்த்து உமர்(ரலி) கர்ஜிப்பார்; “ஒருபோதும் உன்னால் என்னை ஏமாற்றிவிட முடியாது. என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை மாற்றிவிடுகின்ற ஆற்றல் உனக்குக் கிடையாது. என்னுடைய வாழ்வு போய்க் கொண்டிருக்கின்ற திசையை மாற்றிவிடுகின்ற சக்தி உனக்கு இல்லை. இந்தப் பொற் குவியலால் எனக்குள் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தி விட முடியாது.’
இந்த மாதிரியான இஹ்திஸாப் - சுய மதிப்பீடுதான் நமக்குத் தேவை.

4) வழிபாடுகளில் கவனம் வேண்டும். மூன்றாவதாக, வழிபாடுகளில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நாம் நிறைய பணிகளில் ஈடுபடுகின்றோம். தனிப்பட்ட அளவிலும் கூட்டு முறையிலும் நாம் நிறைய நற்செயல்களைச் செய்கிறோம். என்றால் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இறுதியில் மறுமை நாளில் நாம் இறைவனுக்கு முன்னால் தனித்தனியாகத் தான் நின்று கணக்கு காட்ட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

வழிபாடுகளில் கவனமும் அக்கறையும் செலுத்தும்போது வாழ்க்கை செம்மைப் படுத்தப் படும். வழிபாடுகள் சடங்குகள் ஆகிவிடக் கூடாது.

நம்முடைய தொழுகைகள் எப்படி இருக்கின்றன?

‘தொழும்போது இறைவன் நம்மைப் பார்க்கின்றான் என்கிற எண்ணத் தெளிவுடன் தொழ வேண்டும் என்று அண்ணல் நபிகளார்(ஸல்) அறிவுறுத்தி இருக்கின்றார். அல்லாஹ்-வுடன் நாம் செய்கின்ற உரையாடல்தான் தொழுகை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தொழுகைக்காக நிற்கின்ற போதும் அல்லாஹு அக்பர் எனச் சொல்லி கைகளைக் கட்டிக் கொள்கின்ற போதும் எல்லாவிதமான கவலைகளிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் மனத்தை விலக்கிவிட்டு மனம் ஒருமுகப்பட்ட நிலையில் தொழ வேண்டும்.

தொழுகை எப்படி அமைந்தன என்பதைக் குறித்து இரவில் இஹ்திஸாப் செய்ய வேண்டும்.

தொழுகையை மேம்படுத்துவதற்காக வேண்டி தொழுகைகளுக்கு ஏ, பி, ஸி என  படித்தரங்களைக் கொடுக்கின்ற வழக்கத்தை நாங்கள் எங்களுடைய பகுதியில் அறிமுகப் படுத்தினோம்.

ஒருமுறை இந்தப் படித்தரங்கள் பற்றி ஊழியர் கூட்டத்தில் விவாதித்தோம். அப்போது ஒரு ஊழியர் சொன்னார். ‘தொடக்கத்தில் இந்தத் திட்டம் நல்ல பலனைத் தந்தது. மனம் ஒன்றித் தொழுதேன். தரம் மேம்பட்டது. ஆனால் காலப்போக்கில் தொழுவதற்காக நிற்கின்ற போதே இந்தத் தொழுகை ஏ கிரேடு தொழுகை, பி கிரேடு தொழுகை என மனத்திற்குள் பற்பல சிந்தனைகள் வந்துவிடுகின்றன’ என்று புலம்பினார் அவர்.

எனவே தொழுகையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொழுகையில் நம்முடைய கவனம் சிதறிவிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நம்முடை இயக்கச் செயல்பாடுகளில் நமக்கு ஆர்வம் நிலைப்பதற்கும், ஊக்கத்துடனும் உற்சாகமாகவும் நாம் பணியாற்றுவதற்கும் தஸ்கியத்துன் னஃப்ஸ் பெரிதும் உதவும்.

5) இதயத்தூய்மைக்காக துஆ. இதயத்தூய்மைக்காக இறைவனிடம் அடிக்கடி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒரு முறை அன்னை ஆயிஷா(ரலி) இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அழுகின்ற சத்தம் கேட்டு எழுந்தார்.

யாரென்று பார்த்தால் அண்ணல் நபிகளாரே அழுது கொண்டிருந்தார். அப்போது ‘என் இதயத்தைத் தூய்மைப்படுத்துவாயாக’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லி பிரார்த்தித்துக கொண்டிருந்தார் அண்ணல் நபிகளார்(ஸல்)
இஸ்லாமிஸ்டுகளின் மிகப்பெரும் ஆயுதம் இறைத்தொடர்பும் பிரார்த்தனையும்தாம். இந்த இரண்டின் மூலம் நாம் இந்த வாழ்விலும் வெற்றி பெற முடியும் மறுமையிலும் நற்பேறுகளை ஈட்டிக் கொள்ள முடியும். அல்லாஹ் நல்லருள் செய்வானாக.
ஆமின்.

8 செப்டம்பர் 2012 அன்று சென்னையில் நடந்த மாநில உறுப்பினர் முகாமில்
எம். ஐ. அப்துல் அஜீஸ் ஆற்றிய உரை..!


தமிழில் :  சையத் சுல்தான்
தொகுப்பு :  அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

Thursday, June 23, 2011

இருப்பதோ ஒரு மனம்..!


ஒருவரால் ஒரே சமயத்தில் இறைநம்பிக்கையாளராகவும் நயவஞ்சகராகவும் இருக்க முடியாது.

அவரால் ஒரே சமயத்தில் வாய்மையாளராகவும் பொய்யராகவும் இருக்க முடியாது.

அவர் நல்லவராகவும் கெட்டவராகவும் ஒரே சமயத்தில் திகழ முடியாது.

அவருடைய நெஞ்சுக்குள் இரண்டு இதயங்களா இருக்கின்றன - ஒன்றை உளத்தூய்மை மிக்க இதயம் என்றும் இன்னொன்றை இறைவனை அஞ்சாத இதயம் என்றும் சொல்வதற்கு? கிடையாது.

எனவே எந்தவொரு தருணத்திலும் மனிதன் ஒன்று நல்லவனாக இருப்பான். அல்லது கெட்டவனாக இருப்பான்.

இறைநம்பிக்கையாளனாக இருப்பான். அல்லது நயவஞ்சகனாக இருப்பான்.

இறைவனை மறுப்பவனாக இருப்பான். அல்லது இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவனாக இருப்பான்.

எனவே ஒரு நம்பிக்கையாளரைப் பார்த்து நயவஞ்சகர் என்று சொல்வதாலோ அல்லது நயவஞ்சகரைப் பார்த்து நம்பிக்கையாளர் என்று சொல்லி விடுவதாலோ உண்மையான நிலை மாறிவிடப் போவதில்லை.

அந்த நபரின் உண்மைநிலை ஒற்றை நிலையாகத்தான் இருக்கும்.

- மௌலானா மௌதூதி(ரஹ்)

Wednesday, June 22, 2011

“பையனை போயும் போயும் அந்த மதரஸாவிலா சேர்ப்பது..?”

 

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள்-4


இன்னொரு நிகழ்வைக் கேளுங்கள்.

ஆஜம்கரிலிருந்து ஒருவர் அல்லாமாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்:

“நான் உங்களுடைய கலீஃபா - பிரதிநிதியான மௌலானா அப்துல் கனி பூல்பூரி அவர்களிடம் பைஅத் செய்துள்ளேன். சென்ற ஆண்டு என்னுடைய பையனை மதரஸத்துல் இஸ்லாஹ் அரபிக் கல்லூரியில் சேர்த்துவிட்டேன். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அங்கு அவனைச் சேர்த்துவிட்ட பிறகு அவனுடைய நடத்தையிலும் பேச்சுவழக்கிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐவேளை தொழுகைகளையும் விடாமல் தொழுகின்றான். கெட்ட சகவாசத்தை முற்றாகக் கத்திரித்துவிட்டான். வீண் அரட்டை, பொழுதுபோக்கு போன்றவற்றில் நேரத்தை வீணாக்குவதில்லை. மனம் ஊன்றி பாடங்களைப் படிக்கின்றான். என்னுடைய நண்பர்கள் சிலரின் பிள்ளைகளும் அங்குதான் படித்து வருகின்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அங்கே பையனை படிக்க வைப்பதால் எனக்கு வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன.

ஆனால் என்னுடைய முர்ஷித் - வழிகாட்டி மௌலானா அப்துல் கனிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘பையனை போயும் போயும் அந்த மதரஸாவிலா சேர்ப்பது? உம்முடைய பையன் உருப்பட்ட மாதிரிதான். அந்த மதரஸாக்காரர்களின் சிந்தனை சரியில்லை. உம்முடைய பையன் சுதந்திரமாக, முற்போக்காக சிந்திக்கத் தொடங்கிவிடுவான். குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை விரிவுரைகளின் துணை கொண்டு புரிந்து கொள்வதற்குப் பதிலாக தன்னுடைய அறிவாற்றலின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயல்வான்.” என்றெல்லாம் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்.

எதுவரை சொல்லிவிட்டாரெனில், “உம்முடைய மகனை உடனே அந்த மதரசாவிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் நான் அவனைச் சபிப்பேன்.” என என்னை மிரட்டுகின்ற அளவுக்குப் போய்விட்டார்.

ஆனால், என்னுடைய மகனை அந்த மதரஸாவில்தான் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாகும்.

- இவ்வாறு அவர் தம்முடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அல்லாமா அவருக்கு இரத்தினச்சுருக்கமாகப் பதிலளித்தார்: “உங்களுடைய பையனைச் சரியான இடத்தில்தான் சேர்த்திருக்கின்றீர்கள். நிம்மதியாக இருங்கள். உங்களுடைய மகனுக்கும் அந்த மதரஸாவில்தான் படிக்க விருப்பமிருக்கின்றதெனில் அவனை அங்கேயே தொடர்ந்து படிக்க வையுங்கள். மௌலவி அப்துல் கனியின் சாபத்தைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். அவர் அங்கிருந்து சபிக்க சபிக்க  நான் இங்கிருந்து உங்களுடைய மகனுக்காக துஆ செய்தவாறு இருப்பேன்”

“அவர் உங்களை காஃபிர் என்று அறிவித்தவராயிற்றே..!”

 

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள்- 3

இவர் இன்ன சிந்தனைப் பிரிவைச் சேர்ந்தவர், இவர் இன்ன அமைப்பைச் சேர்ந்தவர், இவர் இன்ன ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என மக்களுக்கு அடையாளமிட்டு பிரித்துப் பார்க்கின்ற இன்றைய வழக்கங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லாமா அஷ்ரப் அலீ தானவி.

எதனையும் உயர்ந்த நோக்கோடு, விவேகத்துடனும் ஞானம் நிறைந்த பார்வையுடனும் அணுகுவதுதான் அவருடைய தனிச் சிறப்பு. மார்க்கத்தின் பொதுவான நலன்களைத்தான் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். இதனை வெளிப்படுத்துகின்ற ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
மௌலானா அஹ்மத் ரஜா கான் ஃபாஸில் பரேல்வி (1856 - 1921) அவர்களைக் குறித்து அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சொல்ல வந்ததை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அழுத்தம்திருத்தமாக எடுத்துரைப்பதில் புகழ்பெற்றவர் அவர்.

இது எங்கு போய் முடிந்ததெனில் சில மார்க்க அறிஞர்களைக் குறித்து இறைமறுப்பாளர்கள் என்று ஃபத்வா கொடுத்துவிட்டிருந்தார் அவர்.
அல்லாமா அஷ்ரப் அலீ தானவி ஒருநாள் அஸருக்குப் பிறகு தம்முடைய சீடர்களுடன் அமர்ந்திருந்த வேளையில்தான் மரணம் பற்றிய தகவல் கிடைக்கின்றது. “அல்லாமா! அஹ்மத் ரஜா கான் இறந்துவிட்டாராம்..!” என்று அந்தத் தகவலைச் சொன்னார் ஒரு சீடர்.

அல்லாமாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மௌலானா என்றோ ஜனாப் என்றோ மரியாதை கொடுத்துச் சொல்லாமல் நான்கு வயதுப் பையனைக் குறித்துச் சொல்வதைப் போல அந்த மிகப் பெரும் மார்க்க அறிஞரின் பெயர் குறிப்பிடப்படுவது அல்லாமாவுக்குப் பிடிக்கவில்லை.

“யாரு? மௌலானா அஹ்மத் ரஜா கான் பரேல்வி அவர்களா?”

“ஆமாம். அல்லாமா!”

“இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்” எனச் சொன்ன அல்லாமா, “வாருங்கள். அவருக்காகப் பிரார்த்திப்போம்” எனச் சொல்லியவாறு இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டார். அங்கு இருந்தவர்களும் கைகளை ஏந்தி பிரார்த்தித்தனர்.

ஆனால் இது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அல்லாமா பிரார்த்தனையை முடித்ததும் வாய் திறந்து கேட்டு விட்டார்கள். “அல்லாமா! ஒரு பித்அத்தியை (இறைத்தூதரின் வழிமுறைக்கு அப்பாற்பட்ட புதுமையானவற்றை மார்க்கத்தில் புகுத்துகின்றவர்) மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்வதா?” என்றனர்.

அல்லாமா அஷ்ரப் அலீ தானவி சொன்னார்: “அவர் பித்அத்தி அல்லர்; முஹப்பதி (மிகையான அன்பு கொண்டவர்). ஒருவர் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் கொண்டிருக்கும் போது மிகையான பற்றுடன் நடந்து கொள்ளத்தான் செய்வார்கள்...”

அல்லாமா சொல்லி முடிப்பதற்குள்ளாக இன்னொருவர் சொன்னார்: “அவர் உங்களை காஃபிர் - இறைமறுப்பாளர்  என அறிவித்தவராயிற்றே..! அப்படியிருந்தும் அவருக்காக நீங்கள் பிரார்த்தித்தது ஏனோ?”

அல்லாமா மிகவும் நிதானமாக, மென்மையாக பதிலளித்தார்: “மகனே! நான் ஒரு இறைமறுப்பாளன் என்று அவர் என்னைப் பற்றி உறுதியான தீர்மானத்திற்கு வந்துவிட்டிருந்தார். நான் எடுத்துரைத்த கருத்துகளில் ஏதோவொன்று அவருடைய பார்வையில் இறைநம்பிக்கைக்கு மாற்றமான கருத்தாகப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் அவர் அந்தத் தீர்மானத்திற்கு வந்து விட்டிருக்க வேண்டும். என்னுடைய பேச்சையோ, செயலையோ பார்த்து இறைவனையே மறுக்கின்றவர் இவர் என்கிற தீர்மானத்திற்கு வந்து விட்ட பிறகு அவர் என்னைக் குறித்து ‘காஃபிர்’ என அறிவிக்காமல் இருந்திருப்பாரேயானால் அவர் ‘காஃபிர்’ ஆகிவிட்டிருப்பார். ஃபிக்ஹு சட்டத்தின் உறுதியான விதி இது”.
.... .... ....

“குடிகாரனான என்னை அல்லாமா சந்திப்பாரா?”

 

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள் -2

இன்னொரு கவிஞரின் கதையையும் கேளுங்கள். இவருடைய பெயர் ஜிகர் முராதாபாதி.

ஹபீஸைவிட பிரபலமான கவிஞர் இவர். மக்கள் மனங்களில் இன்றும் ஆட்சி செலுத்துகின்றவர்.

கஜல் என்கிற ஈரடிச் செய்யுள்களில் அவரை மிஞ்ச ஆள் இல்லை. உர்தூ மக்கள் மத்தியில் கவிப்பேரரசராக, கஜல் பாடகர்களின் சுல்தானாக பேர் பெற்றிருந்தார் அவர்.

இன்றும் அவருடைய கஜல்களும் கவிதைகளும் கவியரங்குகளில் குதூகலத்துடன் பாடப்படுகின்றன.

அவருடைய கவிதைகள், கஜல்கள் பற்றிய புகழ் எந்த அளவுக்குப் பரவியிருந்ததோ அதே அளவுக்கு அவருடைய ஆளுமையின் இன்னொரு பக்கம் பற்றிய சர்ச்சையும் பரவியிருந்தது.

குடி, கூத்து, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஆகியற்றில் அவருக்கு இருந்த நாட்டம் பற்றிய சர்ச்சைதான் அது.

எந்நேரமும் போதையில் இருந்தார் அவர். மொடாக் குடியர் என்கிற சொல்லே அவரைச் சுட்டுவதற்காகத்தான் புழக்கத்தில் வந்ததோ எனச் சொல்கின்ற அளவுக்கு எந்நேரமும் போதையில் மிதந்தார் அவர். அவருடைய குடிப்பழக்கம் பற்றிய குறிப்புகளும் குடிபோதையில் அவர் சொன்ன கவிதைகளும் பிரபலமானவை.

அவரிடம் இருந்த சிறப்பு என்னவெனில் என்னதான் போதையில் மிதந்தாலும் சுயத்தை இழக்க மாட்டார். எந்நேரமும் சீரியஸாக இருப்பார். எப்போதுமே மார்க்க அறிஞர்களுடன் மிக்க மரியாதையுடன் நடந்து கொள்வார்.

ஒருமுறை ஜிகர் முராதாபாதி கவியரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முஸஃபர் நகருக்கோ அல்லது ஸஹாரன்பூருக்கோ போய்க் கொண்டிருந்தார்.

ரயில் நிலையத்தில் குவாஜா அஜீஸுல் ஹஸன் மக்சூப் வேறு எங்கோ போவதற்காக நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். குவாஜா ஒரு மிகப் பெரும் மார்க்க அறிஞர். அல்லாமா அஷ்ரப் அலீ தானவியின் கலீஃபாக்களில் (மாவட்ட அமைப்பாளர்) அவரும் ஒருவர்.

குவாஜா நல்ல கவிஞரும் கூட. இதனால் இரண்டு பேருமே ஒருவரையொருவர் பார்த்து ஆரத்தழுவி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள்.

எங்கே போகின்றீர்கள்? எனக் கேட்டார் ஜிகர் முராதாபாதி.
அல்லாமாவைப் பார்ப்பதற்காக தானாபவன் போய்க் கொண்டிருக்கின்றேன் என்றார் குவா-ஜா.

இதனைக் கேட்ட கணத்தில் ஜிகர் முராதாபாதியின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்களும் துக்க ரேகைகளும் போட்டி போட்டன.

“அல்லாமாவைச் சந்திக்க வேண்டும் என்கிற எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. ஆனால் இந்தப் பாழாய்ப் போன குடிப்பழக்கம்தான் என்னைத் தடுத்துவிடுகின்றது. குடிகாரனான என்னை அல்லாமா சந்திக்க விரும்புவாரா என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்”  மார்க்க அறிஞர்களை மதிப்பார்.

அவர் பேசி முடிப்பதற்குள்ளாகக் குறுக்கிட்ட குவாஜா “ஆமாமாம். நீர் சொல்வது சரிதான். குடிப்பழக்கம் இருக்கின்ற வரை தானாபவனை நோக்கி ஏறெடுத்தும் பார்க்காதீர். அல்லாமா ரொம்ப கறாரானவர். கண்டிப்பானவர். அவர் விரும்பமாட்டார்” எனச் சொல்லி விட்டார்.

அதன் பிறகு சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த அவர்கள் இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள்.

அன்று மாலை அஸருக்குப் பிறகு அல்லாமாவைச் சந்தித்த குவாஜா ரயில் நிலைய உரையாடலைக் குறித்து எடுத்துரைத்தார்.

ஜிகர் முராதாபாதியிடம் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று கடிந்துகொண்டார் அல்லாமா. தானாபவன் வரக்கூடாது என்று ஏன் அவரைத் தடுத்துவிட்டீர்கள்? நான் மிகவும் கண்டிப்பானவன் என்பது சரிதான். அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றேன் என்பதும் உண்மைதான். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் ஆட்களைப் பார்த்துதான் விதிக்கின்றேன். ஜிகர் முராதாபாதி விதிவிலக்கானவர். அவரை இங்கே வரச் சொல்லியிருக்க வேண்டும். இங்கே அவர் வருவதே அவருடைய சீர்திருத்தத்திற்கு அடிப்படையாக அமையக் கூடும் அல்லவா? என்று விளக்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே ரயில் நிலையத்தில் ஜிகரும் குவாஜாவும் சந்தித்துக் கொண்டார்கள்.

“தானாபவனுக்கு வந்து அல்லாமாவைச் சந்திக்க விரும்புவதாக நீர் சொன்னதை அல்லாமாவிடம் சொன்னேன்..” எனத் தொடங்கினார் குவாஜா.

“அல்லாமா என்ன சொன்னார்? என்ன சொன்னார்?” என ஆர்வத்துடன் கேட்டார் ஜிகர் முராதாபாதி.

“அல்லாமா என்னைக் கடிந்து கொண்டார். உம்மை வரச் சொல்லியிருக்க வேண்டும்; கட்டுப்பாடுகள், பேணுதல்களைச் சொல்லி ஏன் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டீர்? ஜிகர் அவற்றுக்கெல்லாம் விதிவிலக்கானவர் என்றார்.”

குவாஜாவின் பதிலைக் கேட்டதும் ஜிகர் முராதாபாதியின் உச்சி குளிர்ந்து விட்டது.

வேறு எங்கோ போவதற்காக வந்தவர் அவர். அந்தப் பயணத்திட்டத்தைக் கைவிட்டார். அந்தக் கணமே தானாபவன் போவதென முடிவு செய்துவிட்டு குவாஜாவுடன் தானாபவனுக்கு விரைந்தார்.

ஊருக்குப் போய் சேர்ந்ததும் மஸ்ஜித் ஒன்றின் குளியலறையில் நன்றாகக் குளித்துவிட்டு கான்காஹ் அஷ்ரஃபி என்கிற அல்லாமாவின் தியான பீடத்திற்கு வந்து சேர்ந்தார்.

அல்லாமா அவரைப் பார்த்ததும் முகம் மலர ஆரத்தழுவிக் கொண்டார். நிறைய பேசினார்கள். ஒரு கட்டத்தில் கவிதை பாடுமாறு அல்லாமா கேட்க, ஜிகர் முராதாபாதி நான்கே வரிகளில் தம்முடைய உள்ளத்தில் நிகழ்ந்த மாற்றத்தை, நடத்தையில் வெடித்த புரட்சியை விவரித்துவிட்டார். அந்த வேளையில் அல்லாமாவின் வேண்டுகோளுக்கு இணங்க நா தழுதழுக்க அவர் வாசித்த நான்கடி செய்யுள் இன்றும் உர்தூ உலகில் அதிகமாக மேற்கோள் காட்டப்படுகின்றது.

சில நாட்கள் தானாபவனிலேயே தங்கியிருந்த பிறகு தமது ஊருக்கு ஜிகர் முராதாபாதி திரும்பிய போது ஊர் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஜிகரைப் பார்த்தார்கள்.

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள்


தர்பியத், பயிற்சி ஆகியவற்றுக்காகத்தான் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம். முகாம்கள் நடத்துகின்றோம். உருக்கமான உரைகள், சிலிர்த்தெழச் செய்கின்ற கட்டுரைகள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்துச் செய்கின்றோம்.

ஆய்வுக் கூட்டங்கள் நடத்துகின்றோம். சந்திப்புக்கும் தொடர்புக்கும் இடையில் என்ன வித்தியாசம் என மணிக்கணக்கில் பேசுகின்றோம். விடுபட்ட தொழுகை, ஜமாஅத்துடன் தொழுகை என சின்னச்சின்ன விவரங்களையும் விசாரிக்கின்ற செயல் அறிக்கைகளை பக்கம் பக்கமாக அமைத்துக் கொள்கின்றோம்.
இன்ன தேதிக்குள் செயல் அறிக்கை கொடுத்தாக வேண்டும், இன்ன தேதிக்குள் தல ஜமாஅத்களின் அறிக்கை வந்தாக வேண்டும், இன்ன தேதிக்குள் மாநில செயல் அறிக்கை போயாக வேண்டும் என வரையறைகளை வகுத்துக் கொண்டு கறாராகச் செயல்படுகின்றோம்.

என்றாலும் பயிற்சி, முதிர்ச்சி, புரட்சி, மாற்றம், பக்குவம் ஆகியவை தூரத்து வானவில்லாகவே நீடிப்பது ஏன்? பயிற்சி பெறுவதற்கும் பக்குவம் அடைவதற்கும் இந்த வழிமுறைகள் எல்லாமே அவசியமானவையே. என்றாலும் அவற்றுக்கு உயிர் கொடுக்க வேண்டுமெனில் இறைத்தொடர்பும் இறைப்பற்றும் பயிற்சி கொடுப்பவரிடமும் பயிற்சி பெறுகின்றவரிடமும் இருந்தாக வேண்டும்.

அல்லாமா அஷ்ரப் அலீ தானவி அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். எப்படியெல்லாம் ஆளுமைகளை புடம் போட்ட தங்கங்களாக வார்த்தெடுத்திருக்கின்றார். சேற்றில் விழுந்து கிடந்தவர்களையும் உயர்ந்த பீடத்தில் அமர்கின்ற அளவுக்கு தூய்மைப்படுத்தியிருக்கின்றார்.
அல்லாமா அஷ்ரப் அலீ தானவி மனித மனங்களைச் செதுக்கியதெப்படி? அல்லாமா கையாண்ட உத்திகள் என்னென்ன? அல்லாமாவின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகள் இங்குத் தரப்படுகின்றன.

தானாபவனுக்கு வந்துவிடுங்கள்!

இந்த நாட்டின் புகழ்பெற்ற உர்தூ கவிஞர்களில் ஹபீஸ் ஜோன்பூரியும் ஒருவர்.
அவர் பெரிய ஜமீன்தாராகவும் இருந்தார். எட்டுப் பட்டிகளுக்குச் சொந்தக்காரர். பண்ணை மிடுக்கும் கவித்துவ உள்ளமும் செல்வச் செழிப்பும் கலந்த கதம்பம் அவர்.

அந்தக் காலத்தில் ஜமீன்தாரர்களைத் தொற்றிக் கொண்டிருந்த பல்வேறு ஒழுக்கச் சீர்கேடுகள், சமூக அவலங்கள் அனைத்துக்கும் அவரும் அடிமையாகி இருந்தார். குடி, கும்மாளம், ஆட்டம், பாட்டம்  கொண்டாட்டமாக அவருடைய மாலைப் பொழுதுகள் கழிந்தன. அவருடைய ஆட்டம் பாட்டம் பற்றிய சர்ச்சை ஜோன்பூரிலிருந்து பாட்னா வரை பரவியிருந்தது.

ஒரு முறை அல்லாமா அஷ்ரப் அலீ தானவி ஜோன்பூர் வந்திருந்தார். அல்லாமாவின் வருகையையொட்டி மிகப் பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊர் முழுக்க அல்லாமாவின் வருகை பற்றித்தான் பேச்சு. பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டுவிட, அல்லாமா அஷ்ரப் அலி தானவி தமக்கேயுரிய பாணியில் உள்ளத்தைத் தொடுகின்ற வகையில் உரையாற்றினார்.

அரங்கமே மெய்மறந்து அல்லாமாவின் பேச்சைக் கேட்டது. ஹபீஸ் ஜோன்பூரியும் கேட்டார். மனம் மாறிவிட்டார். அந்த அரங்கிலேயே ஒரு காகிதத்தில் ‘உங்களுடைய உரை என்னுடைய உள்ளத்தை உலுக்கி விட்டது. கடந்து போன நாட்களில் நான் செய்த பாவங்களின் சுமை என்னை பாடாய் படுத்துகின்றது. வெட்கப்படுகின்றேன். வேதனைப்படுகின்றேன். தவ்பா செய்துவிட்டு இறைவனின் பக்கம் மீளவே விரும்புகின்றேன். இனி நேர்வழியில் நிலைத்து நிற்கவே உறுதி பூண்டிருக்கின்றேன். என்னை உங்களுடைய சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என உருக்கமாக எழுதி மேடையில் இருந்த அல்லாமாவிடம் கொடுத்து அனுப்பினார்.

அல்லாமா அந்த மடலைப் பார்த்தார். சொற்களில் தெறித்த வாய்மையின் வீர்யத்தை உணர்ந்தார். உடனே ஹபீஸ் ஜோன்பூரியை அருகில் அழைத்தார்.
‘பயணத்தில் இருப்பதால் நிம்மதியாகப் பேசுவதற்கு வாய்ப்பில்லை. தானாபவனுக்கு வாருங்கள். அங்கே விளக்கமாகப் பேசுவோம்.’ எனக் கூறினார்.

தானாபவன்தான் அல்லாமாவின் ஊர். முஜஃபர் நகர் மாவட்டத்தில் இருக்கின்ற ஊர் அது. சில நாட்களுக்குப் பிறகு ஹபீஸ் ஜோன்பூரி தானாபவனுக்குக் கிளம்பினார்.

அங்கு போய் சேர்ந்த பிறகுதான் அல்லாமா அவர்கள் தானாபவனில் இல்லை. தேவ்பந்துக்குப் போய் இருக்கின்றார் என்கிற செய்தி தெரிகின்றது.
அந்தக் கணமே தானாபவனிலிருந்து தேவ்பந்துக்குக் கிளம்பிவிடுகின்றார் ஹபீஸ் ஜோன்பூரி.

ஆனால் தேவ்பந்திலும் அவரால் அல்லாமாவைச் சந்திக்க முடிவதில்லை. அவர்  தேவ்பந்தை அடைவதற்குள்ளாக அல்லாமா அங்கிருந்து தானாபவனுக்குத் திரும்பிவிட்டிருந்தார்.

மீண்டும் தானாபவனுக்குத் திரும்புகின்றார் ஹபீஸ் ஜோன்பூரி.
அல்லாமாவைச் சந்திக்கின்றார். ஜோன்பூரில் சந்தித்த விவரத்தை நினைவூட்டி தம்முடைய கடந்தகாலத்தில் தாம் செய்த பாவங்களிலிருந்து முற்றாக விலகிவிட்டதாகவும் இனி வருங்காலத்தில் நேரிய வழியில் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வதென உறுதி பூண்டிருப்பதாகவும் மீண்டும் அறிவிக்கின்றார். தம்மை சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு மீண்டும் விண்ணப்பிக்கின்றார்.

ஜோன்பூரிலிருந்து தானாபவன், தானாபவனிலிருந்து தேவ்பந்த், தேவ்பந்திலிருந்து தானாபவன் என இடைவிடாமல் இரண்டு மூன்று நாட்களாக அலைந்து கொண்டிருந்ததாலும் தாடியை மழிக்க அவகாசம் கிடைக்காததாலும் ஹபீஸ் ஜோன்பூரியின் முகத்தில் லேசா லேசா தாடி வளர்ந்து விட்டிருந்தது. ஆனால் தாடியை விட மீசை அடர்த்தியாக, செழுமையாக வளர்ந்து விட்டிருந்தது.

அல்லாமா அவர்கள் எவரையும் எளிதாக தம்முடைய சீடராக்கிக் கொள்ள மாட்டார். பைஅத் செய்கின்ற (உறுதிமொழி பெறுகின்ற) விஷயத்தில் கறாராக நடந்து கொள்வார். இது அனைவரும் அறிந்த உண்மை. ஒருவரை சீடராகச் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு பல மாதங்கள் அவரைச் சோதித்து, கண்காணித்த பிறகுதான் பைஅத் பற்றிய முடிவை எடுப்பார். அதே சமயம் சீர்திருத்துகின்ற வேலையைத் தொடர்ந்து செய்வார்.

என்றாலும் அல்லாமா அவர்கள் ஆரிஃபாக - சத்தியத்தை உணர்ந்தவராக இருந்தார். இதனால்  முகத்தைப் பார்த்தே மனிதர்களின் இயல்பைச் சரியாகக் கணித்துவிடுகின்ற ஆற்றல் அவருக்குக் கிடைத்துவிட்டிருந்தது.

ஹபீஸ் ஜோன்பூரியின் முகத்தைப் பார்த்தே அவர் சத்தியத்தைத் தேடி வாய்மையான உள்ளத்துடன் கிளம்பியிருக்கின்றார் இவர் என உணர்ந்துவிட்டார். இதனால் அந்த முதல் சந்திப்பிலேயே அவரைத் தம்முடைய சீடராக ஆக்கிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு  பைஅத் செய்கின்ற (அல்லாமாவின் உள்ளங்கையை வலுவாகப் பற்றி உறுதிமொழி கூறுகின்ற) நிகழ்ச்சியை  வைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார்.
இதனைக் கேள்விப்பட்டு தானாபவனே வியப்பில் மூழ்கிவிட்டது.

தானாபவனுக்கு முதல் தடவையாக வந்துள்ள ஒருவர் - பார்ப்பதற்கு மார்க்கப் பற்று எதுவும் இல்லாதவரோ என்கிற எண்ணத்தை விதைக்கின்ற தோற்றத்தைக் கொண்ட ஒருவர் குறித்து அல்லாமா எடுத்த முடிவு எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தி விட்டது. ஆனால் எவருமே வெளிப்படையாக எதனையும் சொல்லவில்லை.

வெள்ளிக்கிழமை அன்று குறித்த நேரத்துக்கு ஹபீஸ் ஜோன்பூரி வந்த போது அவருடைய முகம் முழுக்க மழிக்கப்பட்டு பளபளவென மின்னிக் கொண்டிருந்து. முகத்தில் தாடி இருந்ததற்கான அடையாளம் இம்மியளவு கூட இருக்கவில்லை.

பார்த்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

அல்லாமாவும் ஹபீஸ் ஜோன்பூரியைப் பார்த்தார். அவருடைய கோலத்தைக் கண்டார்.  அல்லாமா எதனையும் சொல்வதற்கு முன்பாக ஹபீஸ் ஜோன்பூரி முந்திக் கொண்டார்.

“அல்லாமா! நான் உங்களிடம் பைஅத் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். இனி நீங்கள் சொல்கின்றபடிச் செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. இரண்டு மூன்று நாட்களாக பயணத்திலேயே இருந்துவிட்டதால் ஷேவ் செய்வதற்கு அவகாசமே கிடைக்கவில்லை. இதனால் தாடியும் சற்றே வளர்ந்து விட்டிருந்தது. ஆனால் பைஅத் செய்ய வருகின்ற வேளையில் என்னுடைய எந்தவொரு அம்சமும் உங்களுக்குத் தெரியாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும் எப்போதும் இருப்பதைப் போல முகத்தை மழித்துக் கொண்டு வந்துவிட்டேன்’ என ஒரே மூச்சில் சொல்லி விட்டார்.

எதனைவும் நேரடியாக, சுற்றிவளைக்காமல் பேசுவது அல்லாமாவுக்கு மிகவும் பிடிக்கும்.

ஹபீஸ் ஜோன்பூரியை தம்முடைய சீடராக ஏற்றுக் கொண்டார் அல்லாமா. தானாபவனில் சில நாட்கள் தங்கியிருந்த பிறகு தம்முடைய ஊருக்குத் திரும்பினார் ஹபீஸ் ஜோன்பூரி.

அங்கிருந்தே தம்முடைய செயல்கள் குறித்து அறிக்கை அனுப்புவதும் அல்லாமாவிடமிருந்து தக்க வழிகாட்டுதல்களைப் பெறுவதுமாக அவருடைய வாழ்வு சீர் பெறத் தொடங்கியது.

அவருடைய வாழ்வில் எந்த அளவுக்கு மாற்றம் வந்துவிட்டதெனில் அவரைப் பார்த்து அவருடைய இறைப்பற்றையும் வணக்க வழிபாடுகளையும் பார்த்து பெரும் பெரும் மார்க்க அறிஞர்களும் இறைநேசர்களும் நாமும் இவரைப் போல் ஆகமாட்டோமா என நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டனர்; பெருமூச்சுவிட்டனர்.

கவிதைகளிலும் ஈரடிச் செய்யுள்களிலும் மூழ்கிக் கிடந்த அந்தக் கவிஞர் இனி கவிதையே எழுதுவதில்லையெனத் தீர்மானித்து அல்லாமாவிடம் யோசனை கேட்டார். அல்லாமா சொன்னார்: ‘ஒரேயடியாக கவிதைக்கு முழுக்கு போட்டுவிட வேண்டாம். நன்மையானவற்றைக் குறித்து கவி பாடுங்கள்.’

ஞானத்தாலும், நல்லுரையாலும் தோய்த்தெடுக்கப்பட்ட கவிதைகளை இயற்றத் தொடங்கினார் ஹபீஸ் ஜோன்பூரி.
.... .... ....
Related Posts Plugin for WordPress, Blogger...