Pages

Tuesday, June 14, 2011

அமீரே ஜமாஅத் பேட்டி - இரண்டாம் பாகம்


m உலகளாவிய அளவில் விவாதிக்கப்படுகின்ற, கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகின்ற விவாதப் பொருளாக இஸ்லாத்தை ஆக்க வேண்டும்; இவ்வாறாக உலக அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ள இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரப் புயலிலிருந்து வெளி வருகின்ற பாதை புலப்பட்டுவிடும் என்றும் நீங்கள் சொல்லி வந்துள்ளீர்கள். இப்போது மேற்கத்தியர்களும் எந்தவிதமான பக்கச்சார்பும் இல்லாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இஸ்லாத்தை ஆராய்வதற்கு முன் வந்துள்ளார்கள் என இப்போது தோன்றுகின்றது. இது தொடர்பாக அண்மையில் வெளியான ‘ஏ வர்ல்ட் வித் அவுட் இஸ்லாம்’ என்கிற நூலைச் சொல்லலாம். அமெரிக் உளவு நிறுவனமான ஸி.ஐ.ஏ.வில் பல்லாண்டுகள் பணியாற்றிய மூத்த உளவுத்துறை அதிகாரி கிரஹாம் ஃபுல்லர் என்பவர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். மேற்கிலும் கிழக்கிலும் இந்த நூல் பரவலாகப் பேசப்படுகின்றது. இஸ்லாத்தைக் குறித்து மேற்கத்திய உலகம் கொண்டுள்ள நிலைப்பாட்டை பக்கச்சார்புள்ளது; துவேஷமும் காழ்ப்பு உணர்வும் கொண்டது என்று கிரஹாம் ஃபுல்லர் கடுமையாக விமர்சித்து ஒதுக்கியிருக்கின்றார். இஸ்லாத்தை அதன் மூல நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் முன் வர வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம் என்றெல்லாம் அவர் எழுதியிருக்கின்றார். இதனை வரவேற்கத்தக்க மாற்றம் என்று சொல்லலாமா?  


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற தாகத்தை உண்டுபண்ணியிருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை. இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு நல்லதொரு வாய்ப்பை அது உருவாக்கியிருக்கின்றது என்பதும் சரியே.
கிரஹாம் ஃபுல்லர் எழுதிய புத்தகத்தையும் நாம் இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். என்னால் அந்த நூலை முழுமையாக வாசிக்க இயலவில்லை. என்றாலும் அந்த நூல் பற்றிய விமர்சனங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். கிரஹாம் ஃபுல்லரின் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. மேற்கத்திய உலகம் இஸ்லாத்தைப் போட்டியிடுகின்ற சக்தியாகத்தான் காலங்காலமாகப் பார்த்து வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான் அது இஸ்லாத்தை கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கி வருகின்றது. நிலைமைகளுக்கேற்ப இந்த விமர்சனங்களின் பாணியும் இலக்கும் மாறும். அவர்கள் சில சமயம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே குறிவைத்து விமர்சிப்பார்கள். சில சமயம் அண்ணல் நபிகளாரின் அழகிய வாழ்வை விமர்சிப்பார்கள். சில சமயம் வஹீ, தூதுத்துவ ஏற்பாட்டை விமர்சிப்பார்கள். சில சமயம் இஸ்லாத்தின் குடும்ப அமைப்பை விமர்சிப்பார்கள். சில சமயம் இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பை விமர்சனத்திற்கு உள்ளாக்குவார்கள். இந்த விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என்பது ஒரு புறம் இருக்க கேலி, கிண்டல்களாகவும் இவை ஆக்கப்படுவதுண்டு.
இந்த நிலையில் 9/11க்குப் பிறகு இஸ்லாத்தை பயங்கரவாதத்தின் ஊற்றாகச் சித்திரிப்பதற்கு திட்டமிட்ட முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய இயக்கங்களைக் குறி வைத்து விமர்சனங்கள் தொடுக்கப்பட்டன. இன்னும் ஒரு படி மேலே போய் பயங்கரவாதம், வன்முறை, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றைத் தூக்கி வைத்துக்கொண்டாடுவதுதான் இஸ்லாம்; இந்த இயக்கங்களும் அதிலிருந்துதான் வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் பெறுகின்றன என்றெல்லாம் சகட்டுமேனிக்கு அவதூறுகள் பரப்பப்பட்டன.
கிரஹாம் ஃபுல்லர்
ஆனால் எந்தவித பக்கச்சார்பும் இல்லாமல், இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைக் குறித்தோ எத்தகைய காழ்ப்புணர்வும் இல்லாமல், எந்தவித முன்முடிவும் இல்லாமல், திறந்த மனத்துடன் இஸ்லாத்தை ஆழ்ந்து படிக்கின்ற எவரும் இஸ்லாத்திற்கு எதிரான இந்தப் பரப்புரைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை; அடிப்படையற்றவை என்கிற முடிவுக்கே  வருவார். கிரஹாம் ஃபுல்லரும் அவருடைய நூலும் இதனைத்தான் பிரதிபலிக்கின்றன.
என்னைக்கேட்டால் எந்தவொரு விவகாரத்திலும் இஸ்லாத்தின் பார்வையைப் புரிந்துகொள்வதற்காக முயல்வாரேயானால் அவர் நிச்சயமாக நீதியும் நியாயமும் செறிந்த அதன் போதனைகளில் மனத்தைப் பறிகொடுத்துவிடுவார்; இஸ்லாத்திற்கு எதிராகத் தொடுக்கப்படுகின்ற ஆட்சேபங்களை அடிப்படையற்றவை என ஒதுக்கித்தள்ளிவிடுவார் என்றே சொல்வேன். என்றாலும் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வகையான ஆய்வு இஸ்லாத்தைப் பற்றி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகவோ, இஸ்லாத்தின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்ட ஆய்வாகவோ அமைந்துவிடுகின்றன. இதுதான் இவ்வகையான ஆய்வுகளில் பொதிந்து இருக்கின்ற குறை ஆகும்.
இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத்தொடங்கும்போது முதலில் அதன் அடிப்படைகள், அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும். பிறகு அதன் ஒளியில் குறிப்பிட்ட பிரச்னையில் அது முன்வைக்கின்ற போதனைகளைப் புரிந்துகொள்வதற்கு முயல வேண்டும். இஸ்லாத்தின் கோட்பாடுகள்தாம் அதன் அடிப்படைகளாக இருக்கின்றன. இஸ்லாம் நாத்திகத்தையும் இணைவைப்பையும் எதிர்க்கின்றது. அவற்றுக்கு எதிராக கலப்படமற்ற, மாசற்ற தூய்மையான ஓரிறைக் கோட்பாட்டை அது முன்வைக்கின்றது. அது இந்த உலக வாழ்வை மனிதனின் இறுதி இலக்காகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக மறுமை, நற்கூலி, தண்டனை பற்றியக் கருத்தோட்டத்தை அது முன்வைக்கின்றது. அறிவைத் தேடியடைவதற்காக மனிதனுக்குக் கிடைத்திருக்கின்ற வழிவகைகளை அது போதுமானவையாகக் கருதுவதில்லை. இறைவழிகாட்டுதல் இன்றி மனிதனால் வாழ்க்கைத்திட்டத்தை அமைத்துக்கொள்ள முடியாது என அது அழுத்தம்திருத்தமாக வாதிடுகின்றது. அதற்காக வஹீ, தூதுத்துவம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வது அவசியம் என அது அறிவிக்கின்றது. அண்ணல் நபிகளாரை இறுதித்தூதராகவும் திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் அறிமுகப்படுத்துகின்றது. அது மனிதனை இறைவனின் அடியானாக, இறைவனிடம் பதில் அளிக்கக் கடமைப்பட்டவனாக அறிவிக்கின்றது. மனிதர்களிடையே சமத்துவம் கட்டிக்காக்கப்பட வேண்டும்; மனிதநேயம் மலர வேண்டும் என்றே அது எதிர்பார்க்கின்றது. மனிதன் மீது இன்னொரு மனிதனின் ஆதிக்கத்தை தவறு என்று அது ஒதுக்குவது இந்த சமத்துவத்தின் ஒரு பரிமாணம்தான். அதற்குப் பதிலாக இறைவனின் ஆட்சி என்கிற கருத்தோட்டத்தை அது முன்வைக்கின்றது. இஸ்லாத்தின் இந்த அடிப்படைக் கோட்பாடுகளையும் போதனைகளையும்தான் விவாதப் பொருளாக ஆக்க வேண்டும்.

இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளில் பொதிந்துள்ள விவேகங்கள் ஏராளம். ஏராளம். இன்னும் அதிகமான விவேகங்களையும் தேடியடைய முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. திருக்குர்ஆன்தான் இறுதி வேதம் என்பதையும் ஃபைனல் அத்தாரிட்டி என்பதையும் ஒருவர் ஏற்றுக்கொள்வாரேயானால் அது முன்வைக்கின்ற எந்தவொரு போதனை குறித்தும் அவர் ஆட்சேபிக்க மாட்டார். ஆனால் இப்போது எழுதப்படுகின்ற புத்தகங்களில் இந்தக் கோணத்தில் எதுவுமே விவாதிக்கப்படுவதில்லை. இந்தக் கோணத்தில் இந்தப் பாணியில் இஸ்லாம் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுஜீவிகள் குர்ஆனின் அடிப்படைக்கோட்பாடுகளை ஆய்வு செய்யவேண்டும் என்றும்தான் நாம் விரும்புகின்றோம்.  

m  இன்று இந்தியாவின் தற்போதையச் சூழலில் நாம் இவ்வாறு இஸ்லாத்தை இந்தக்கோணத்தில் ஆராய வேண்டும் என்றெல்லாம் பேசலாமா? இந்தப் பாணியில் நாம் செய்தியை எடுத்துரைக்கலாமா?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நமது நாட்டில் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சிந்தனை, செயல் ஆகியவற்றுக்கான முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. தமது மதம்தான் சத்தியமானது என நிறுவுகின்ற உரிமையும் சுதந்திரமும் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. இது இந்தச் சுதந்திரத்தின் ஒரு பரிமாணம் ஆகும்.

எந்தவொரு சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொள்கின்ற, அதன்படி வாழ்கின்ற, அதனைப் பரப்புரை செய்கின்ற உரிமை இந்தியர்கள் அனைவருக்கும் உண்டு எனும்போது அதிலிருந்து மதத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது ஜனநாயகத்திற்கு நேர் எதிரானதாகும். இந்த உரிமை இல்லையெனில் கருத்து சுதந்திரம் என்பதற்கு என்னதான் பொருள்?

அரசியல் விவகாரங்களிலிருந்து மதத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது என்பதில் எவ்விதச் சந்தேகத்திற்கும் இடம் இல்லை. ஆனால் மதத்தை அரசியலிலிருந்து ஒதுக்கிவைக்கின்ற இந்தச் சிந்தனை மேற்கத்தியர்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனையாகும். இதனைச் சரியானது எனச் சொல்ல முடியாது. இதனைக் குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

m  நம்முடைய நாட்டில் கம்யூனிஸத்தை ஓர் சித்தாந்தமாக, ஐடியாலஜியாக அறிமுகப்படுத்துகின்ற உரிமை தரப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாத்தை வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்துகின்ற உரிமை பொதுவாக முஸ்லிம்களுக்கும் குறிப்பாக ஜமாஅத்தே இஸ்லாமியினருக்கும் உண்டு என்பது இன்று வரை ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: ஒரு காலத்தில் கம்யூனிஸத்திற்கு ஆதரவான போக்கு நம் நாட்டில் இருந்துள்ளது. வளரும் நாடுகளின் ஈடேற்றம் சோஷலிஸத்தைப் பின்பற்றுவதைப் பொருத்தே அமையும் என்றெல்லாம் மக்கள் நினைத்துவந்தார்கள். இதனால் இங்கு செழித்தோங்கி வளர்வதற்கான வாய்ப்பு கம்யூனிஸத்திற்குக் கிடைத்தது.

நம்முடைய நூல்களில் மனிதர்களுக்கு இஸ்லாம்தான் சரியான வாழ்க்கை முறை எனத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்குப் பொருத்தமான வாழ்க்கை முறை இஸ்லாம்தான் என்பதை நிறுவவும் அதன் அடிப்படையில் மட்டுமே தனி மனிதனின் வளர்ச்சி, சமூகத்தின் கட்டமைப்பு, அரசமைப்பு ஆகிய அனைத்தும் அமைய வேண்டும் என்பதை நிறுவுவதற்கும் அழுத்தம்திருத்தமாகப் பதிய வைப்பதற்கும் முயன்றிருக்கின்றோம். ஆனால், எந்த அளவுக்கு ஓங்கி, உரத்த குரலில் இந்தச் செய்தி முழங்கப்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஆணித்தரமாக, முழு வலிமையுடன் இந்தச் செய்தி எடுத்துரைக்கப்படவில்லை என்பதை உங்களால் மறுக்க முடியாது.

இந்தச் செய்தியை எடுத்துரைப்பதற்கு நாட்டின் அமைப்புச்சட்டம் தடையாக இருக்கின்றதெனில் அமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய அந்தத் தடையைப் போக்குவதற்காக வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து. 

m
 
மாண்புகளையும் விழுமங்களையும் உயர்த்திப் பிடித்து எழுச்சியுடன் இருந்த ஜமாஅத்தே இஸ்லாமி இன்று அந்த மாண்புகளிலிருந்து படிப்படியாகப் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றது என்று ஓர் எண்ணம் காணப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக ஜமாஅத் வெளியிட்டுள்ள பாடநூல்களில் திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதைச் சொல்லலாம். இந்தத் திருத்தங்கள் மார்க்கத்தின் திசையை மாற்றுவதாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ‘திருவிழா - மேளா’ என்கிற பாடலைச் சொல்லலாம். இந்தப் பாடலில் இணைவைப்பு, நாத்திகம் தொடர்பான வரிகள் இப்போது இல்லை.

இதற்கு என்ன பொருள்?

நீங்கள் எந்த விவாதத்தைத் தொடங்க விரும்பியிருந்தீர்களோ அதிலிருந்து நீங்களே பின்வாங்கிக்கொண்டிருக்கின்றீ
்கள் என்பதுதானே! இன்று நாம் நம்முடைய மார்க்க பாட நூல்களில் இவ்வாறு கொள்கைப்பூர்வமான அனைத்து விஷயங்களையும் நீக்கிவிட்டிருக்கின்றோம். இது எதனை உணர்த்துகின்றது? மீண்டும் பழைய சிந்தனையின் பக்கம் திருப்பி விட விரும்புகின்றோமா?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இந்த எண்ணம் சரியானதன்று. இஸ்லாத்தின் அடிப்படையில் தனி மனித வளர்ச்சி, சமூகக் கட்டமைப்பு, அரசமைப்பு ஆகியவை அமைய வேண்டும் என்று நாம் சொல்கின்றோம். நம்முடைய அமைப்புச் சட்டத்தின் ஒளியில்தான் இவ்வாறு சொல்கின்றோம். ஆனால் நாம் இந்தச் செய்தியை நம்மவர்கள் மத்தியில் மட்டுமே குறுக்கிக் கொண்டிருக்கின்றோம்; அதன் பொதுமக்கள் மத்தியில் விவாதப்பொருளாக ஆக்கத் தவறிவிட்டோம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

இன்று தனி மனிதனின் வளர்ச்சி குறித்து பொதுவாகப் பேசப்படுகின்றது. இஸ்லாம் காட்டுகின்ற நெறிமுறைகளின்படி தனி மனிதனின் வளர்ச்சியை ஈட்டலாம் என்று நீங்கள் எடுத்துரைக்கலாம். இதே போன்று இஸ்லாமிய அறவுரைகளின்படி சமூகத்தைக் கட்டமைக்கலாம் என்பதையும் நாம் விளக்கலாம்.

சட்டம் பற்றிய விவாதம் வருகின்றபோது இயல்பிலேயே மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே என்கிற செய்தியை நாம் பதிய வைக்கலாம். மனிதர்கள் அனைவரும் சமம் எனும்போது எந்தவொரு மனிதருக்கும் வேறு மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அதிகாரமோ உரிமையோ இல்லை என்றும் அதற்கும் மேலாக மனிதர்கள் அனைவர் மீதும் இறைவனின் சட்டம் செல்லுபடியாகும் என்றும் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டவரும் இறைவனையே அதிகாரமும் ஆட்சியும் கொண்டவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய சட்டங்களின் அடிப்படையில் நிர்வாகம் செய்தாக வேண்டும் என்றும் பொருளாகின்றது. 
ஆனால் நாம் இந்த விவரங்களையெல்லாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம் என்றே நான் கருதுகின்றேன். இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சென்று விவாதப்பொருளாக்க வேண்டும். இது தான் இன்றையத் தேவையாக இருக்கின்றது.

இன்று நிலைமை இஸ்லாத்திற்கு சாதகமாக இல்லை எனச் சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் உலக அளவில் வேகமாக நடந்துவருகின்ற மாற்றங்கள் புத்தெழுச்சியையும் புதிய சிந்தனையையும் வேண்டுகின்றன. இஸ்லாத்தின் ஒளியில் கருத்துரைக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.
 
m  ‘ஜமாஅத்தே இஸ்லாமி தொடக்கக்காலத்தில் என்னவோ செக்குலரிஸம், சோஷலிஸம், ஜனநாயகம் ஆகியவற்றை எதிர்த்து வந்தது. ஆனால் இப்போது அதன் போக்கு மாறிவிட்டது. இப்போதெல்லாம் அது அவற்றை ஆதரிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கும் மேலாக செக்குலரிஸமும் டெமாக்ரஸியும் சத்தியமானவை என்பதை நிறுவுவதில்தான் ஜமாஅத்தின் முழு கவனமும் உழைப்பும் குவிந்துள்ளன’ என்கிற எண்ணம் காணப்படுகின்றது. இப்போதெல்லாம் இந்த விமர்சனங்கள் அதிகமாகவே வெளிப்படையாகச் சொல்லப்பட்டு வருகின்றன. இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இது முழுக்க முழுக்க தவறான எண்ணம் ஆகும்.
இஸ்லாம் மனிதனின் அகத்தையும், புறத்தையும் - தனிப்பட்ட வாழ்வின் அம்சங்கள், கூட்டு வாழ்வின் பரிமாணங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், ஒழுக்கவியல் முதற்கொண்டு பொருளியல் வரை, சமூகவியல் முதல் அரசியல் வரை என எல்லாவற்றையும் தழுவியதாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் மனித வாழ்வின் எந்த ஒரு துறையும் இதன் எல்லைக்கு அப்பாற்பட்டது கிடையாது.

இறைஉவப்புக்கும் மறுமை வெற்றிக்கும் உத்தரவாதம் அளிக்கின்ற மார்க்கமும் இந்த தீன்தான்; அதே போன்று இன்-றைய உலக பிரச்னைகள் யாவற்றுக்கும் பொருத்தமான தீர்வைத் தருகின்ற உன்னத வாழ்க்கைத்திட்டமும் இந்த தீன்தான் என்றுதான் நம்முடைய அமைப்புச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. தனி மனித வளர்ச்சி, சமூகக் கட்டமைப்பு, அரசின் வடிவமைப்பு ஆகிய அனைத்துமே இந்த தீனுக்கு இணக்கமாக அமைகின்ற அளவுக்கு மனிதனின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இந்த தீன் அழுத்தமாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஜமாஅத்தின் அமைப்புச்சட்டம் அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கின்றது.

இந்நிலையில் ஜமாஅத்தைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் செக்குலரிஸத்தையும் ஜனநாயகத்தையும் சத்தியமானவை  என நிறுவுவதற்காக முயல்கின்றார் எனில் அவருடைய அந்த எண்ணமும் முயற்சியும் ஜமாஅத்தின் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும். அதன் பிறகு அவர் எந்த அடிப்படையில் ஜமாஅத்தில் தொடர்ந்து இருக்க முடியும்? அவர் ஜமாஅத்தில் நீடிப்பதற்கு எத்தகைய இடமும் இல்லை; வாய்ப்பும் இல்லை.

‘இன்றைய நாட்டுநிலைமைகளைக் கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு முன்பாக இஸ்லாத்தை மாற்று வாழ்வியல் நெறியாக அறிமுகப்படுத்த வேண்டும் ; அதன் மூலம் மனிதர் களின் உலக, மறுமை வெற்றிகளுக்கும், ஈடேற்றத்திற்கும் இஸ்லாம் உறுதியளிக்கிறது; மனித சமூகத்திற்கு மிக மிகப் பொருத்தமான வாழ்வியல் நெறியாக இஸ்லாம் இருக்கின் றது என்பதை நாட்டு மக்களிடம் நல்ல முறையில் விளக்கவும் ஜமாஅத் விரும்புகின்றது. தீனை நிலைநாட்டுகின்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முன்னெடுத்து வைக்கப்படுகின்ற முக்கியமான நடவடிக்கை ஆகும் இது.’ என்றே நம்முடைய கொள்கை - செயல்திட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் ஜமாஅத்தே இஸ்லாமி செக்குலரிஸ, ஜனநாயக கொடியைத் தூக்கிப்பிடித்திருக்கின்றது என்று எவர்தான் சொல்லத் துணிவார்? அழைப்பியல், சமூகம், சமூக சீர்திருத்தம் போன்ற பல்வேறு களங்களில் ஜமாஅத் மேற்கொண்டிருக்கின்ற பணிகளை அறியாதவர்தான் அவ்வாறு சொல்லக்கூடும். அல்லது ஜமாஅத் மேற்கொண்டிருக்கின்ற பணிகளை ஒதுக்கித்தள்ளிவிட விரும்புகின்றவர்தான் அவ்வாறு சொல்லக்கூடும்.
ஜமாஅத் தன்னுடைய அமைப்புச்சட்டத்தையும், தன்னுடைய கொள்கையையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு ஜனநாயகத்தையும் செகுலரிசத்தையும்   நிலைநாட்ட வேண்டும் என்று எப்போது, எங்கு, எந்த வேளையில் முடிவெடுத்தது என்பதை அறிந்துகொள்ளவே நான் விரும்புவேன்!
தமிழில் : T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. 
To be continued... 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...