தர்பியத், பயிற்சி ஆகியவற்றுக்காகத்தான் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம். முகாம்கள் நடத்துகின்றோம். உருக்கமான உரைகள், சிலிர்த்தெழச் செய்கின்ற கட்டுரைகள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்துச் செய்கின்றோம்.
ஆய்வுக் கூட்டங்கள் நடத்துகின்றோம். சந்திப்புக்கும் தொடர்புக்கும் இடையில் என்ன வித்தியாசம் என மணிக்கணக்கில் பேசுகின்றோம். விடுபட்ட தொழுகை, ஜமாஅத்துடன் தொழுகை என சின்னச்சின்ன விவரங்களையும் விசாரிக்கின்ற செயல் அறிக்கைகளை பக்கம் பக்கமாக அமைத்துக் கொள்கின்றோம்.
இன்ன தேதிக்குள் செயல் அறிக்கை கொடுத்தாக வேண்டும், இன்ன தேதிக்குள் தல ஜமாஅத்களின் அறிக்கை வந்தாக வேண்டும், இன்ன தேதிக்குள் மாநில செயல் அறிக்கை போயாக வேண்டும் என வரையறைகளை வகுத்துக் கொண்டு கறாராகச் செயல்படுகின்றோம்.
என்றாலும் பயிற்சி, முதிர்ச்சி, புரட்சி, மாற்றம், பக்குவம் ஆகியவை தூரத்து வானவில்லாகவே நீடிப்பது ஏன்? பயிற்சி பெறுவதற்கும் பக்குவம் அடைவதற்கும் இந்த வழிமுறைகள் எல்லாமே அவசியமானவையே. என்றாலும் அவற்றுக்கு உயிர் கொடுக்க வேண்டுமெனில் இறைத்தொடர்பும் இறைப்பற்றும் பயிற்சி கொடுப்பவரிடமும் பயிற்சி பெறுகின்றவரிடமும் இருந்தாக வேண்டும்.
அல்லாமா அஷ்ரப் அலீ தானவி அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். எப்படியெல்லாம் ஆளுமைகளை புடம் போட்ட தங்கங்களாக வார்த்தெடுத்திருக்கின்றார். சேற்றில் விழுந்து கிடந்தவர்களையும் உயர்ந்த பீடத்தில் அமர்கின்ற அளவுக்கு தூய்மைப்படுத்தியிருக்கின்றார்.
அல்லாமா அஷ்ரப் அலீ தானவி மனித மனங்களைச் செதுக்கியதெப்படி? அல்லாமா கையாண்ட உத்திகள் என்னென்ன? அல்லாமாவின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகள் இங்குத் தரப்படுகின்றன.
தானாபவனுக்கு வந்துவிடுங்கள்!
இந்த நாட்டின் புகழ்பெற்ற உர்தூ கவிஞர்களில் ஹபீஸ் ஜோன்பூரியும் ஒருவர்.
அவர் பெரிய ஜமீன்தாராகவும் இருந்தார். எட்டுப் பட்டிகளுக்குச் சொந்தக்காரர். பண்ணை மிடுக்கும் கவித்துவ உள்ளமும் செல்வச் செழிப்பும் கலந்த கதம்பம் அவர்.
அந்தக் காலத்தில் ஜமீன்தாரர்களைத் தொற்றிக் கொண்டிருந்த பல்வேறு ஒழுக்கச் சீர்கேடுகள், சமூக அவலங்கள் அனைத்துக்கும் அவரும் அடிமையாகி இருந்தார். குடி, கும்மாளம், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக அவருடைய மாலைப் பொழுதுகள் கழிந்தன. அவருடைய ஆட்டம் பாட்டம் பற்றிய சர்ச்சை ஜோன்பூரிலிருந்து பாட்னா வரை பரவியிருந்தது.
ஒரு முறை அல்லாமா அஷ்ரப் அலீ தானவி ஜோன்பூர் வந்திருந்தார். அல்லாமாவின் வருகையையொட்டி மிகப் பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊர் முழுக்க அல்லாமாவின் வருகை பற்றித்தான் பேச்சு. பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டுவிட, அல்லாமா அஷ்ரப் அலி தானவி தமக்கேயுரிய பாணியில் உள்ளத்தைத் தொடுகின்ற வகையில் உரையாற்றினார்.
அரங்கமே மெய்மறந்து அல்லாமாவின் பேச்சைக் கேட்டது. ஹபீஸ் ஜோன்பூரியும் கேட்டார். மனம் மாறிவிட்டார். அந்த அரங்கிலேயே ஒரு காகிதத்தில் ‘உங்களுடைய உரை என்னுடைய உள்ளத்தை உலுக்கி விட்டது. கடந்து போன நாட்களில் நான் செய்த பாவங்களின் சுமை என்னை பாடாய் படுத்துகின்றது. வெட்கப்படுகின்றேன். வேதனைப்படுகின்றேன். தவ்பா செய்துவிட்டு இறைவனின் பக்கம் மீளவே விரும்புகின்றேன். இனி நேர்வழியில் நிலைத்து நிற்கவே உறுதி பூண்டிருக்கின்றேன். என்னை உங்களுடைய சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என உருக்கமாக எழுதி மேடையில் இருந்த அல்லாமாவிடம் கொடுத்து அனுப்பினார்.
அல்லாமா அந்த மடலைப் பார்த்தார். சொற்களில் தெறித்த வாய்மையின் வீர்யத்தை உணர்ந்தார். உடனே ஹபீஸ் ஜோன்பூரியை அருகில் அழைத்தார்.
‘பயணத்தில் இருப்பதால் நிம்மதியாகப் பேசுவதற்கு வாய்ப்பில்லை. தானாபவனுக்கு வாருங்கள். அங்கே விளக்கமாகப் பேசுவோம்.’ எனக் கூறினார்.
தானாபவன்தான் அல்லாமாவின் ஊர். முஜஃபர் நகர் மாவட்டத்தில் இருக்கின்ற ஊர் அது. சில நாட்களுக்குப் பிறகு ஹபீஸ் ஜோன்பூரி தானாபவனுக்குக் கிளம்பினார்.
அங்கு போய் சேர்ந்த பிறகுதான் அல்லாமா அவர்கள் தானாபவனில் இல்லை. தேவ்பந்துக்குப் போய் இருக்கின்றார் என்கிற செய்தி தெரிகின்றது.
அந்தக் கணமே தானாபவனிலிருந்து தேவ்பந்துக்குக் கிளம்பிவிடுகின்றார் ஹபீஸ் ஜோன்பூரி.
ஆனால் தேவ்பந்திலும் அவரால் அல்லாமாவைச் சந்திக்க முடிவதில்லை. அவர் தேவ்பந்தை அடைவதற்குள்ளாக அல்லாமா அங்கிருந்து தானாபவனுக்குத் திரும்பிவிட்டிருந்தார்.
மீண்டும் தானாபவனுக்குத் திரும்புகின்றார் ஹபீஸ் ஜோன்பூரி.
அல்லாமாவைச் சந்திக்கின்றார். ஜோன்பூரில் சந்தித்த விவரத்தை நினைவூட்டி தம்முடைய கடந்தகாலத்தில் தாம் செய்த பாவங்களிலிருந்து முற்றாக விலகிவிட்டதாகவும் இனி வருங்காலத்தில் நேரிய வழியில் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வதென உறுதி பூண்டிருப்பதாகவும் மீண்டும் அறிவிக்கின்றார். தம்மை சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு மீண்டும் விண்ணப்பிக்கின்றார்.
ஜோன்பூரிலிருந்து தானாபவன், தானாபவனிலிருந்து தேவ்பந்த், தேவ்பந்திலிருந்து தானாபவன் என இடைவிடாமல் இரண்டு மூன்று நாட்களாக அலைந்து கொண்டிருந்ததாலும் தாடியை மழிக்க அவகாசம் கிடைக்காததாலும் ஹபீஸ் ஜோன்பூரியின் முகத்தில் லேசா லேசா தாடி வளர்ந்து விட்டிருந்தது. ஆனால் தாடியை விட மீசை அடர்த்தியாக, செழுமையாக வளர்ந்து விட்டிருந்தது.
அல்லாமா அவர்கள் எவரையும் எளிதாக தம்முடைய சீடராக்கிக் கொள்ள மாட்டார். பைஅத் செய்கின்ற (உறுதிமொழி பெறுகின்ற) விஷயத்தில் கறாராக நடந்து கொள்வார். இது அனைவரும் அறிந்த உண்மை. ஒருவரை சீடராகச் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு பல மாதங்கள் அவரைச் சோதித்து, கண்காணித்த பிறகுதான் பைஅத் பற்றிய முடிவை எடுப்பார். அதே சமயம் சீர்திருத்துகின்ற வேலையைத் தொடர்ந்து செய்வார்.
என்றாலும் அல்லாமா அவர்கள் ஆரிஃபாக - சத்தியத்தை உணர்ந்தவராக இருந்தார். இதனால் முகத்தைப் பார்த்தே மனிதர்களின் இயல்பைச் சரியாகக் கணித்துவிடுகின்ற ஆற்றல் அவருக்குக் கிடைத்துவிட்டிருந்தது.
ஹபீஸ் ஜோன்பூரியின் முகத்தைப் பார்த்தே அவர் சத்தியத்தைத் தேடி வாய்மையான உள்ளத்துடன் கிளம்பியிருக்கின்றார் இவர் என உணர்ந்துவிட்டார். இதனால் அந்த முதல் சந்திப்பிலேயே அவரைத் தம்முடைய சீடராக ஆக்கிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பைஅத் செய்கின்ற (அல்லாமாவின் உள்ளங்கையை வலுவாகப் பற்றி உறுதிமொழி கூறுகின்ற) நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார்.
இதனைக் கேள்விப்பட்டு தானாபவனே வியப்பில் மூழ்கிவிட்டது.
தானாபவனுக்கு முதல் தடவையாக வந்துள்ள ஒருவர் - பார்ப்பதற்கு மார்க்கப் பற்று எதுவும் இல்லாதவரோ என்கிற எண்ணத்தை விதைக்கின்ற தோற்றத்தைக் கொண்ட ஒருவர் குறித்து அல்லாமா எடுத்த முடிவு எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தி விட்டது. ஆனால் எவருமே வெளிப்படையாக எதனையும் சொல்லவில்லை.
வெள்ளிக்கிழமை அன்று குறித்த நேரத்துக்கு ஹபீஸ் ஜோன்பூரி வந்த போது அவருடைய முகம் முழுக்க மழிக்கப்பட்டு பளபளவென மின்னிக் கொண்டிருந்து. முகத்தில் தாடி இருந்ததற்கான அடையாளம் இம்மியளவு கூட இருக்கவில்லை.
பார்த்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
அல்லாமாவும் ஹபீஸ் ஜோன்பூரியைப் பார்த்தார். அவருடைய கோலத்தைக் கண்டார். அல்லாமா எதனையும் சொல்வதற்கு முன்பாக ஹபீஸ் ஜோன்பூரி முந்திக் கொண்டார்.
“அல்லாமா! நான் உங்களிடம் பைஅத் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். இனி நீங்கள் சொல்கின்றபடிச் செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. இரண்டு மூன்று நாட்களாக பயணத்திலேயே இருந்துவிட்டதால் ஷேவ் செய்வதற்கு அவகாசமே கிடைக்கவில்லை. இதனால் தாடியும் சற்றே வளர்ந்து விட்டிருந்தது. ஆனால் பைஅத் செய்ய வருகின்ற வேளையில் என்னுடைய எந்தவொரு அம்சமும் உங்களுக்குத் தெரியாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும் எப்போதும் இருப்பதைப் போல முகத்தை மழித்துக் கொண்டு வந்துவிட்டேன்’ என ஒரே மூச்சில் சொல்லி விட்டார்.
எதனைவும் நேரடியாக, சுற்றிவளைக்காமல் பேசுவது அல்லாமாவுக்கு மிகவும் பிடிக்கும்.
ஹபீஸ் ஜோன்பூரியை தம்முடைய சீடராக ஏற்றுக் கொண்டார் அல்லாமா. தானாபவனில் சில நாட்கள் தங்கியிருந்த பிறகு தம்முடைய ஊருக்குத் திரும்பினார் ஹபீஸ் ஜோன்பூரி.
அங்கிருந்தே தம்முடைய செயல்கள் குறித்து அறிக்கை அனுப்புவதும் அல்லாமாவிடமிருந்து தக்க வழிகாட்டுதல்களைப் பெறுவதுமாக அவருடைய வாழ்வு சீர் பெறத் தொடங்கியது.
அவருடைய வாழ்வில் எந்த அளவுக்கு மாற்றம் வந்துவிட்டதெனில் அவரைப் பார்த்து அவருடைய இறைப்பற்றையும் வணக்க வழிபாடுகளையும் பார்த்து பெரும் பெரும் மார்க்க அறிஞர்களும் இறைநேசர்களும் நாமும் இவரைப் போல் ஆகமாட்டோமா என நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டனர்; பெருமூச்சுவிட்டனர்.
கவிதைகளிலும் ஈரடிச் செய்யுள்களிலும் மூழ்கிக் கிடந்த அந்தக் கவிஞர் இனி கவிதையே எழுதுவதில்லையெனத் தீர்மானித்து அல்லாமாவிடம் யோசனை கேட்டார். அல்லாமா சொன்னார்: ‘ஒரேயடியாக கவிதைக்கு முழுக்கு போட்டுவிட வேண்டாம். நன்மையானவற்றைக் குறித்து கவி பாடுங்கள்.’
ஞானத்தாலும், நல்லுரையாலும் தோய்த்தெடுக்கப்பட்ட கவிதைகளை இயற்றத் தொடங்கினார் ஹபீஸ் ஜோன்பூரி.
.... .... ....
No comments:
Post a Comment