Pages

Tuesday, June 14, 2011

வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி அன்று: அமீரே ஜமாஅத் பேட்டி - மூன்றாம் பாகம்


m தேர்தல் அரசியலில் பங்கேற்பது பற்றிய விவகாரத்தில் ஜமாஅத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாகவும் இது நம்முடைய கோட்பாட்டுக்கும் சிந்தனைக்கும் நேர்மாறானது என்றும் இப்போதையச் சூழலில் தேர்தல் அரசியலில் பங்கேற்பது என்றும் மற்றவர்கள் எதிர்ப்பதாகவும் விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில் ஒரு கருத்து காணப்படுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: தற்போது உள்ள ஸிஸ்டம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது, அசத்தியமானது என்பதிலும் இந்த ஸிஸ்டத்தை மாற்றுவதற்காக ஜமாஅத் பாடுபட வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை.

ஆனால் இப்போது நம்முடைய விவாதத்தில் இருக்கின்ற விவகாரம் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளுடன் தொடர்புடையதாகும். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் இந்தப் பிரச்னைகள் இன்னும் அதிகமாகக் கூர்மையடைந்துவிட்டுள்ளன.

தேர்தல் அரசியலில் பங்கேற்பது மூலமாக முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா  என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி.

இதற்குத் தீர்வுகாண்பதில் இருவேறு கருத்துகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. அதனைத்தான் நீங்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள். தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும்; அது ஒட்டுமொத்தமாக நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை அளிப்பதாக அமையும் என்பதுதான் பெரும்பாலோரின் கருத்து. இது தொடர்பாக என்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருக்கின்றீர்கள். உங்களுடைய இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப்பது பொருத்தமாக இராது. என்னுடைய சொந்தக் கருத்து இதற்குச் சாதகமாகவும் இருக்கலாம்; எதிராகவும் இருக்கலாம். ஒரு பொறுப்பாளர் என்கிற முறையில் நான் இந்த விவாதத்தில் விழக்கூடாது.

அண்மையில் நடந்த ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பேசியபோது ‘நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செக்குலரிஸம், சோஷலிஸம், டெமாக்ரஸி ஆகிய சொற்கள் ஒரு தனிப் பொருளில்தான் ஆளப்பட்டிருக்கின்றன. சோஷலிஸம் குறித்து நாட்டின் உச்ச நீதிமன்றம் ‘சோஷலிஸம் என்கிற சொல்  தொடக்கக்காலத்தில் எந்தப் பொருளில் ஆளப்பட்டதோ அந்தப் பொருளில் நாம் அதனை ஆள்வதில்லை. அதற்கு மாறாக சமூக நீதி என்கிற பொருளில்தான் தற்போது ஆளப்படுகின்றது’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.
மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி
செக்குலரிஸத்தைப் பொருத்தவரை ரொம்பக் காலத்திற்கு முன்பே அப்போதைய அகில இந்தியத் தலைவர் மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி மிகத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டார். அந்தக் காலத்தில் டாக்டர் சையத் மஹ்மூத் ‘செக்குலரிஸம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ என வினவிய போது மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி அவர்கள் ‘செக்குலரிஸம் என்பதற்கு இந்த நாட்டில் எந்தவொரு மதத்தின் ஆட்சியும் இருக்காது; அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவார்கள்; அனைவருக்கும் தத்தமது மதத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு’ என்பதுதான் பொருள் எனில் நாங்கள் அந்த செக்குலரிஸத்திற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் செக்குலரிஸம் என்பதற்கு இறைவனின் ஆட்சியையும் இறையாண்மையையும் இறைவனின் அதிகாரத்தையும் மறுப்பதுதான் பொருள் எனில் நாங்கள் அதனை எதிர்ப்போம்’ என்று நறுக்குத்தெறித்தாற்போல் பதிலளித்தார். பிற்பாடு மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு மௌலானாவின் விளக்கம் உறுதி செய்யப்பட்டது.

ஜனநாயகம் தொடர்பாகவும் இதே நிலைப்பாடுதான். நான் இதனைக் குறித்து எத்தனையோ தடவை எழுதியிருக்கின்றேன். இறைவனின் அதிகாரத்திற்குப் பதிலாக மனிதர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகம். இதனை நாங்கள் தவறான சிந்தனை என்றே சொல்கின்றோம். ஆனால் ஜனநாயகத்திற்கு இருக்கின்ற சிறப்பு என்னவெனில் அது கருத்து சுதந்திரத்தையும் விருப்பம் போல் செயல்படுகின்ற சுதந்திரத்தையும் வழங்குவதுதான். இந்தச் சுதந்திரமான சூழல் அழைப்புப் பணிக்கும் பரப்புரை செய்வதற்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கும் களம் அமைத்துத் தருகின்றது. இதனால் தான் இத்தகைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் மறுக்கின்ற, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நாட்டு மக்கள் அனைவர் மீதும் திணிக்க நாடுகின்ற மற்ற ஸிஸ்டங்களோடு ஒப்பிடும்போது ஜனநாயகத்தின் அடிப்படையிலான சிஸ்டத்தை நாங்கள் விரும்புகின்றோம்.

நமது நாட்டில் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது. இதிலிருந்து பயனீட்டுவதற்கு நாம் முயல வேண்டும். இஸ்லாத்தை நல்ல முறையில் அறிமுகம் செய்வதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து இங்குக் காணப்படுகின்ற தவறான கருத்துகள், எண்ணங்களைக் களைவதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தை மேற்கொள்வதில் நாட்டின் வெற்றியும் உலகத்தின் நன்மையும் அடங்கியிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எந்தவொரு மதமோ அல்லது மார்க்கமோ அரசாங்க மதமாக அறிவிக்கப்படுவதற்கு ஜனநாயகம் தடையாக இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றார்கள். ஜனநாயக வழியில் செயல்பட்டு இந்தத் தடையை அகற்றுவதற்கான பொருத்தமான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். 

m வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவைக் குறித்து விதவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தால் நிறுவப்பட்ட கட்சி என்றும் இது ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் அணி என்றும் அதனுடைய கடிவாளம் ஜமாஅத்தின் கையில்தான் இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றார்கள்.  இந்தக் கட்சியை நிறுவியன் மூலமாக ஜமாஅத் தன்னுடைய குறிக்கோள், கோட்பாடு, செயல்முறை ஆகியவற்றிலிருந்து வழிபிறழ்ந்து சென்று விட்டது என்றும் பொதுவான அரசியல் கட்சியைப் போன்று ஜமாஅத் செயல்படத் தொடங்கிவிட்டது என்றும் சிலர் நினைக்கின்றார்கள். இவற்றைக் குறித்து உங்களுடைய விளக்கம் தேவைப்படுவதாக உணர்கின்றேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் இங்கு நிலைபெற்றுள்ள ஜனநாயக சிஸ்டத்தின் துணையுடன் பிரச்னைகளைத் தீர்க்க விரும்புகின்ற கட்சிதான் வெல்ஃபேல் பார்ட்டி ஆஃப் இந்தியா.

இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளையும், பிற சிறுபான்மை மக்களின் பிரச்னைகளையும், பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளையும் இவ்வாறு அது தீர்க்க விரும்புகின்றது.

இந்த நாட்டில் சற்றொப்ப இருபது கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். இந்தப் பிரச்னைகளைக் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய உறுப்பினர்கள் மாநாட்டில் நான் ஆற்றிய தொடக்கவுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன். இது தனி நூலாகவும் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் சந்திக்கின்ற பிரச்னைகளில் தலையாயது தமது இருப்பையும் தனித்தன்மையையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்கின்ற பிரச்னை ஆகும். மானம், மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதும் ஒரு சவால்தான். உடல், உயிர், உடைமைகளைப் பாதுகாத்தலும் ஒரு பிரச்னையே. கலவரங்களைத் தடுத்து நிறுத்தலும் அவற்றிலிருந்து மீண்டு எழுதலும் கூட மிகப்பெரும் பிரச்னையே. வறுமை, இல்லாமை, கல்லாமை ஆகியவற்றை ஒழித்துக் கட்டி முன்னேறுவதும் மிகப்பெரும் சவால்தான். மார்க்கக் கல்வியுடன் உலகக்கல்வியில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதும் மதரஸாக்களை நிறுவி வெற்றிகரமாக நடத்துதலும், பள்ளிவாசல்களை நிறுவுதலும் முஸ்லிம்களின் முக்கிய பிரச்னைகளே. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையீட்டைத் தடுத்துநிறுத்துதலும், வக்ஃப் சொத்துகளை மீட்டெடுத்தலும் பாதுகாத்தலும் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தலும் அவர்களின் பிரச்னைகளில் அடங்கும். இதே போன்று நீதியையும் நியாயத்தையும் வென்றெடுத்தலும், அக்கிரமம், கொடுமை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தலும் தக்க இழப்பீடுகளை ஈட்டலும் உட்பட எண்ணற்ற பிரச்னைகளை இன்றைய இந்திய முஸ்லிம்கள் சந்தித்து நிற்கின்றார்கள். இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் ஜமாஅத் தொடக்கத்திலிருந்தே கையிலெடுத்துக்கொண்டு தீர்ப்பதற்காக முயன்று வந்துள்ளது. இவற்றைத் தீர்ப்பதற்காக அரசியல் அரங்கிலும் அது தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

நம் நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையிலான சிஸ்டமும் அது வழங்கியிருக்கின்ற மனித உரிமைகளும்  நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் ஜமாஅத் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பரிணாமமாக இருந்துள்ளது. நெருக்கடி நிலையின்போது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை அகற்றிவிட்டு ஒரு தனி மனிதனின் விருப்பங்களின்படி நாட்டை ஆட்டுவிக்க முயற்சிகள் நடந்தன. ஒரு வகையில் சர்வாதிகாரம் தலையெடுக்கத் தொடங்கியது. ஜமாஅத் இந்தப் போக்கை முழுமையாக எதிர்ப்பதெனத் தீர்மானித்தது. ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும் பாடுபட்ட அரசியல் கட்சிகளுக்கு முழு ஆதரவை அளித்தது. ஏனெனில் அதில்தான் நாட்டுக்கும் சமூகத்திற்கும் நன்மை இருந்தது. ஜமாஅத் மீண்டும் தன்னுடைய பணிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் மலர்வதற்கும் அது அவசியமாக இருந்தது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது. முஸ்லிம்களின் பிரச்னைகளை அனுதாபத்துடன் அணுகுகின்ற கட்சிகளுக்கும், முஸ்லிம்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்த கட்சிகளுக்கும், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்துதல் அவசியம் என்று கருதியும் இந்த விஷயத்தில் பல்வேறு மனிதர்கள், மனிதக் குழுக்களிடையே காட்டப்படுகின்ற பாரபட்சம் சரியன்று என்று கருதியும் வந்த கட்சிகளுக்கும் ஜமாஅத்தும் ஆதரவளித்து வந்துள்ளது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு கட்சியும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதே கிடையாது. அதற்கு மாறாக தமது நலன்களை மையமாகக் கொண்டே இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இயங்கி வந்துள்ளன. இதுதான் இன்று வரை நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஜமாஅத்துக்கு இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று சமுதாயத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஜமாஅத்தே நேரடியாகக் களத்தில் இறங்கி விடுவது. அல்லது இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியை அமைப்பது. பிற சிறுபான்மை சமூகத்தினரும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். அவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டு செயலாற்றுவது.

இந்த இரண்டு வழிகளில் இரண்டாவதை ஜமாஅத் எடுத்துக்கொண்டது. ஜமாஅத் தன்னுடைய குறிக்கோள், செயல்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும். அதே சமயம் சமுதாயத்தின் பிரச்னைகளையும் பிற சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்னைகளையும் தீர்ப்பதற்காகவும் அவற்றை அரசியல் அரங்கில் கொண்டு செல்வதற்காகயும் ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே ஜமாஅத்தே இஸ்லாமி தீர்மானித்தது. இதன் விளைவாகத்தான் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா உதயமானது. இதனை நீங்கள் வெளிப்படையாகப் பார்க்கலாம். அந்தக் கட்சியின் பொறுப்பாளர்களில் ஜமாஅத்தைச் சேர்ந்த தோழர்களுடன் சமுதாயத்தின் முக்கியமான ஆர்வலர்களும் இருக்கின்றார்கள். இதே போன்று முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவமும் அதற்குக் கிடைத்திருக்கின்றது.‘
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாத் தலைவர்கள்
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா குறித்து சில விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடுவது அவசியம் என்றே நினைக்கின்றேன். முதலாவதாக இது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி அன்று. ஜமாஅத்தின் முன்முயற்சிகளால் உருவான கட்சிதான் அது. இரண்டாவதாக, இந்தக் கட்சி தீர்க்கமான, வரையறுக்கப்பட்ட நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டதாகும். அந்த நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்தும், ஜமாஅத்துடன் அதன் தொடர்பும் உறவும் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும் ஜமாஅத்தின் மத்திய ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்தே எல்லாமே வரையறுக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. “இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் முக்கியமான நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், மாண்புகளின் அடிப்படையிலான அரசியலைச் செழித்தோங்கச் செய்வதற்காகவும், பொதுமக்களின் நலன்களுக்காகவும், அவர்களின் வளவாழ்வுக்காகவும், நீதி, நியாயத்தை நிறுவுவதற்காகவும் அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். அந்த அரசியல் கட்சி உருவாவதற்காக ஜமாஅத் முன்முயற்சிகளை மேற்கொள்ளும். இந்தக் கட்சியின் நோக்கங்களை ஏற்றுக்கொள்கின்ற முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் இந்தக் கட்சியில் பங்கேற்பார்கள். இவர்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்களும் அடங்குவர். இந்தக் கட்சி சுதந்திரமாகச் செயல்படும். இந்தக் கட்சி மேற்கொள்கின்ற பாராட்டத்தக்க நற்பணிகளுக்கு ஜமாஅத் ஆதரவளிக்கும். அதே சமயம் அவற்றுக்குப் பொறுப்பேற்காது” என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் தெளிவான விளக்கத்திற்குப் பிறகு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி சொல்வதும், அதற்கும் மேலாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய நோக்கத்திலிருந்தும் செயல்திட்டத்திலிருந்தும் வழிபிறழ்ந்துவிட்டது என்று தெரிந்தோ தெரியாமலோ அல்லது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதும் முழுக்க முழுக்க தவறு ஆகும். இன்ஷா அல்லாஹ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளிலும் நோக்கத்திலும் நிலைத்து நிற்கும்; நாட்டு மக்களுக்கு இஸ்லாத்தை ஓர் மாற்று வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்துகின்ற போராட்டத்தை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் என நான் அழுத்தம்திருத்தமாகவும் ஆணித்தரமாகவும் அறிவிக்க விரும்புகின்றேன். இதற்காக வேண்டி வழக்கம்போல இந்த மீக்காத்திலும் விரைவில் கொள்கை மற்றும் செயல் திட்டத்தை வகுக்கும் என்றும் அறிவிக்கின்றேன்.

m கடந்த மீக்காத்தில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது. இதற்கு முன்பும் சில நாடுகளுக்கு நீங்கள் சென்று வந்துள்ளீர்கள். இந்தச் சுற்றுப்பயணங்களின்போது முஸ்லிம் சிந்தனையாளர்கள், உலகத் தலைவர்கள் பலருடனும் பேசியிருக்கின்றீர்கள்; கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றீர்கள். உலக அரங்கில் இந்தியாவைக் குறித்தும் குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் குறித்தும், இந்திய இஸ்லாமிய இயக்கம் பற்றியும் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: பரப்பளவிலும் சரி, இயற்கை வளங்களிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி, மனித வளத்திலும் சரி நமது நாட்டுக்குத் தனிச் சிறப்பும் இடமும் உலக அரங்கில் இருக்கின்றது. அண்மைக்காலமாக அறிவியல் தொழில்நுட்பக் களத்தில் நம் நாடு ஈட்டியிருக்கின்ற சாதனைகளும் நம் நாட்டின் மதிப்பைக் கூட்டியிருக்கின்றது. இந்தக் காரணங்களால் முஸ்லிம் நாடுகள் நம் நாட்டுக்குத் தனி முக்கியத்துவத்தை அளிக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளிலும் நம் நாட்டுக்குத் தனி மரியாதை இருக்கின்றது. இது எல்லாராலும் உணரப்படுகின்றது. முஸ்லிம் நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் பல்வேறு களங்களில் நமது நாட்டின் திறமைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி வருகின்றன. மறுபக்கம் இங்கு இருக்கின்ற வறுமை, கல்லாமை, மனித நேயமின்மை, சமத்துவமின்மை, சமநிலையற்ற பொருளாதார வளர்ச்சி ஆகியவை நமது நாட்டின் இந்த ஒளிமயமான சித்திரத்தைக் குலைத்து வருகின்றன. இதனை அவ்வளவு எளிதாகப் புறம்தள்ளி விட முடியாது.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் என்னவோ சிறுபான்மை மக்களாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இங்குதான் அதிக அளவில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இந்த அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒளிமயமான வரலாற்றுப் பாரம்பர்யத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒளிமயமான வரலாற்றுச் சுவடுகளையும் உலக  மக்கள் அறிந்தே இருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, அரசியல், பொருளாதாரக் களங்களில் மிகவும் பின்தங்கியிருக்கின்றார்கள் என்பதையும் சில துறைகளில் நாட்டின் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களை விடவும் நலிந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதையும் பார்க்கும் போது அவர்கள் வருத்தப்படுகின்றார்கள். அவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் செய்கின்றார்கள். சில சமயம் முஸ்லிம்களிடையே புரையோடியிருக்கின்ற சில பலவீனங்கள் - குறிப்பாக இஸ்லாமிய போதனைகளைத் தெளிவாக அறியாத நிலை, அறியாமை, ஒற்றுமையின்மை - குறித்தும் பேச்சில் அடிபடுவதுண்டு. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற, முஸ்லிம்கள் ஆட்சி செலுத்துகின்ற நாடுகளிலும் இந்தப் பலவீனங்கள் காணப்படத்தான் செய்கின்றன. என்றாலும் பலவீனங்கள் எந்நிலையிலும் பலவீனங்கள்தாம். அவை எந்த சமூகக் குழுக்கள் மத்தியில் காணப்பட்டாலும் சரியே.

இந்தியாவில் செயல்படுகின்ற மிகப்பெரும் முஸ்லிம் அமைப்பு என்கிற வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கு முஸ்லிம் உலக நாடுகளில் தனி மரியாதையும் சிறப்பும் இருக்கின்றன. ஜமாஅத்துக்குத் தனி முக்கியத்துவம் தரப்படுகின்றது. அழைப்பியல், கல்வி ஆகியக் களங்களில் ஜமாஅத் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் சமூக சீர்திருத்தப் பணிகள் பற்றியும் மக்கள் சேவைக் களத்தில் ஜமாஅத் மிகப்பெரும் அளவில் ஆற்றி வருகின்ற சேவைகள் குறித்தும் ஏதாவதொரு வகையில் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள். இந்த அளவுக்கு பல்வேறு களங்களில் விரிவாகவும் திட்டமிட்ட முறையிலும் செயலாற்றுகின்ற அமைப்பு வேறு எதுவும்  கிடையாது என்றும் அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். குறிப்பாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் அருளால் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டின் பல்வேறு மொழிகளில் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பபைப் பதிப்பித்து வெளியிட்டு ஆற்றியிருக்கின்ற சேவையை முஸ்லிம் உலகம் பெரிதும் மதிக்கின்றது.  

m ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயற்களம் இந்திய நாடுதான் என்பது என்னவோ உண்மையே. இருந்தாலும் இஸ்லாம் வழங்கும் தூது உலகளாவிய  தூதாக இருப்பதால் ஜமாஅத் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களைக் கவனித்து வந்திருக்கக்கூடும் அல்லவா? அருள்கூர்ந்து அந்த இஸ்லாமிய இயக்கங்களுடன் ஜமாஅத்துக்கு இருக்கின்ற தொடர்பையும் உறவையும் குறித்து ஒரிரு வார்த்தைகள் சொல்லுங்களேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: உலகின் பல்வேறு நாடுகளிலும் இஸ்லாத்தை மேலோங்கச் செய்வதற்காக இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது உண்மையே. இந்த அடிப்படையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கும் உலகின் பிற பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கும் இடையில் ஒரு விதமான சித்தாந்தத் தொடர்பு இருக்கின்றது. அதே சமயம் இங்கு ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் செயல்முறைகளில் முரண்பாடுகளும் வேறுபாடுகளும் நிறைய இருக்கின்றன. இந்த இயக்கங்கள் வெவ்வேறு செயல்முறைகளுடன் களத்தில் இருக்கின்றன. நாம் இங்கு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் நாட்டின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு செயல்முறையை வரையறுக்கின்றோம். உலகின் பிற பகுதிகளில் இயங்குகின்ற இயக்கங்களும் தத்தமது நாட்டு நிலைமைகளுக்கேற்ப சிந்தித்துச் செயலாற்றுகின்றன. இதனால்தான் ஒருமித்த சித்தாந்தத்தைக் கொண்டிருந்த போதிலும் முற்றிலும் மாறுபட்ட செயல்முறைகளைக் கொண்டு இந்த இயக்கங்கள் இயங்கிவருகின்றன. 

m மத்தியக் கிழக்கிலும் வட ஆப்ரிக்காவின் முஸ்லிம் நாடுகளிலும் மக்கள் எழுச்சிஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் எழுச்சியை இஸ்லாமியப் புரட்சியாக, இஸ்லாமிய எழுச்சியாகச் சொல்லலாமா? இஸ்லாத்தின் பக்கம் மீள்வதை உணர்த்துகின்ற அறிகுறிகளாக இந்த மக்கள் எழுச்சிகளைச் சொல்லலாமா?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: எகிப்து, சிரியா, துனிஸீயா, ஏமன், லிபியா போன்ற நாடுகளில் மிகப் பெரும் மாற்றங்களும் மக்கள் எழுச்சியும் மலர்ந்துள்ளன. ஆனால், அங்கு இன்னும் இஸ்லாத்தைக் குறித்து வெளிப்படையான விவாதம் நடக்கவில்லை; அதற்கு மாறாக, அந்த நாடுகளில் பொருளாதார, சமூக, அரசியல் காரணிகள்தாம் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன என்றே நான் கருதுகின்றேன்.
இந்த நாடுகளில் நடந்து வந்த அரசியல் கொடுமைகள், அவற்றின் பொருளாதார வீழ்ச்சி, நாட்டு வளங்களின் மீது ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவினரின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த இழிநிலை, பொதுமக்களுக்கு அந்த வளங்-களில் எத்தகைய பங்கும் கிடைக்காமல் போன அவலம், இந்தக் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் இழிநிலைகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டச் சூழல் ஆகிய அனைத்துமே அப்பட்டமான அக்கிரமங்களாக, உரிமைமீறல்களாக இருந்தன. அக்கிரமங்களும் கொடுமைகளும் எல்லை மீறிப் போகும்போது அவற்றுக்கு எதிராகக் கலகம் வெடிக்கின்றது. இந்த நாடுகளில் இதுதான் நடந்திருக்கின்றது.
அத்துடன் இந்த நாடுகளில் ஒருபக்கம் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக உரக்க முழங்கப்பட்டு வந்தது. மறுபக்கம் சமூக வாழ்விலும் பிற கூட்டு விவகாரங்களிலும் இஸ்லாமிய போதனைகள் கருத்தில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தன. அதற்குப் பதிலாக மேற்கத்திய சித்தாந்தங்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட்டு வந்தன. இஸ்லாத்திற்குப் பதிலாக மேற்கத்திய சிந்தனைகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. இதனை இந்நாடுகளின் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் கண்கூடாகப் பார்த்து வந்திருக்கின்றார்கள். இந்த அவலத்தைப் பார்த்து கவலைப்பட்டு வந்தவர்களும் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்களில் அதிகமாக இருந்தார்கள்.

எகிப்தில் அதிபர் நாஸர் காலத்திலிருந்து இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மீது பற்பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இக்வான் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; தூக்கிலிடப்பட்டனர்.  இக்வான்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இக்வான் இயக்கம் தடை செய்யப்பட்டது. இக்வான்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் கொடூரங்களுக்கும் ஈடிணை இல்லை. கம்யூனிஸ்ட் நாடுகளில் நடந்த அக்கிரமங்களை வேண்டுமானால் அதற்கு இணையாகச் சொல்லலாம். இந்த வரலாற்றை நம்மில் அனைவரும் நன்றாக அறிந்திருக்கின்றோம்.

பல பத்தாண்டுகளாக இக்வான் இயக்கம் மீது பலவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன. இப்போது அந்த இயக்கத்திற்கு சுதந்திரம் கிடைத்திருக்கின்றது; ஒரு வலுவான சக்தியாக அது மிக வேகமாக பேருருவம் எடுத்து வருகின்றது. அதன் சக்தியை உலக நாடுகள் உணரத்தொடங்கியிருக்கின்றன.  எகிப்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படுகின்ற வலுவான இயக்கம் ஒன்று இருக்கின்றதெனில் அது இக்வானுல் முஸ்லிமீன் இயக்கம்தான் என அமெரிக்க அதிபர் பாரக் ஹுஸைன் ஒபாமா ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.

ஆனால், இந்த வேளையில் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பணியாற்றினால் நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் ஆதரவு கிடைக்காது. இன்று வரை ஆட்சியில் இருந்த சக்திகள் - இஸ்லாத்திற்கு எதிராகச் செயலாற்றி வந்த சக்திகள் - மீண்டும் இக்வானின் இஸ்லாமிய அழைப்புக்கு எதிராக வீறு கொண்டு எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது என்றே இக்வானிகள் நினைக்கின்றார்கள். எனவே முதற்கட்டமாக நாட்டில் ஜனநாயகம் நிலைபெறுவதற்காகப் பாடுபடுவது; அதற்காக உரத்துக் குரல் கொடுப்பது என்கிற வியூகத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள். ஜனநாயகச் சூழல் தழைத்தோங்கினால் எகிப்தியர்கள் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் கிடைத்துவிட்டால் எகிப்து மக்களுக்கு இஸ்லாத்தைத் தவிர வேறு எந்தவொரு சிஸ்டத்தை ஏற்றுக் கொள்கின்ற வாய்ப்பே இருக்காது என்று அவர்கள் கணித்திருக்கின்றார்கள்.

உண்மை என்னவெனில் இன்று லிபியாவிலும் சரி, பஹ்ரைனிலும் சரி, சிரியாவிலும் சரி, ஏமனிலும் சரி எங்குமே இஸ்லாம் விவாதப்பொருளாக ஆகவே இல்லை. இந்த நாடுகளில் அடக்குமுறை, கொடுமை, பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகத்தான் மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கின்றார்கள். அதே சமயம் இந்த நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்து மக்களுக்கு சுதந்திரமாகச் செயல்படுகின்ற உரிமையும் சுதந்திரமும் கிடைக்கின்ற போது அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் இஸ்லாத்தையே விரும்புவார்கள் ; இஸ்லாத்தின்படி கூட்டுவாழ்வைக் கட்டமைக்க நாடுவார்கள் என்றே உறுதியாக நம்பலாம்; எதிர்பார்க்கலாம்.
தமிழில் : T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் 

Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. 
To be continued... 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...