Pages

Wednesday, June 22, 2011

“பையனை போயும் போயும் அந்த மதரஸாவிலா சேர்ப்பது..?”

 

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள்-4


இன்னொரு நிகழ்வைக் கேளுங்கள்.

ஆஜம்கரிலிருந்து ஒருவர் அல்லாமாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்:

“நான் உங்களுடைய கலீஃபா - பிரதிநிதியான மௌலானா அப்துல் கனி பூல்பூரி அவர்களிடம் பைஅத் செய்துள்ளேன். சென்ற ஆண்டு என்னுடைய பையனை மதரஸத்துல் இஸ்லாஹ் அரபிக் கல்லூரியில் சேர்த்துவிட்டேன். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அங்கு அவனைச் சேர்த்துவிட்ட பிறகு அவனுடைய நடத்தையிலும் பேச்சுவழக்கிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐவேளை தொழுகைகளையும் விடாமல் தொழுகின்றான். கெட்ட சகவாசத்தை முற்றாகக் கத்திரித்துவிட்டான். வீண் அரட்டை, பொழுதுபோக்கு போன்றவற்றில் நேரத்தை வீணாக்குவதில்லை. மனம் ஊன்றி பாடங்களைப் படிக்கின்றான். என்னுடைய நண்பர்கள் சிலரின் பிள்ளைகளும் அங்குதான் படித்து வருகின்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அங்கே பையனை படிக்க வைப்பதால் எனக்கு வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன.

ஆனால் என்னுடைய முர்ஷித் - வழிகாட்டி மௌலானா அப்துல் கனிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘பையனை போயும் போயும் அந்த மதரஸாவிலா சேர்ப்பது? உம்முடைய பையன் உருப்பட்ட மாதிரிதான். அந்த மதரஸாக்காரர்களின் சிந்தனை சரியில்லை. உம்முடைய பையன் சுதந்திரமாக, முற்போக்காக சிந்திக்கத் தொடங்கிவிடுவான். குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை விரிவுரைகளின் துணை கொண்டு புரிந்து கொள்வதற்குப் பதிலாக தன்னுடைய அறிவாற்றலின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயல்வான்.” என்றெல்லாம் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்.

எதுவரை சொல்லிவிட்டாரெனில், “உம்முடைய மகனை உடனே அந்த மதரசாவிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் நான் அவனைச் சபிப்பேன்.” என என்னை மிரட்டுகின்ற அளவுக்குப் போய்விட்டார்.

ஆனால், என்னுடைய மகனை அந்த மதரஸாவில்தான் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாகும்.

- இவ்வாறு அவர் தம்முடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அல்லாமா அவருக்கு இரத்தினச்சுருக்கமாகப் பதிலளித்தார்: “உங்களுடைய பையனைச் சரியான இடத்தில்தான் சேர்த்திருக்கின்றீர்கள். நிம்மதியாக இருங்கள். உங்களுடைய மகனுக்கும் அந்த மதரஸாவில்தான் படிக்க விருப்பமிருக்கின்றதெனில் அவனை அங்கேயே தொடர்ந்து படிக்க வையுங்கள். மௌலவி அப்துல் கனியின் சாபத்தைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். அவர் அங்கிருந்து சபிக்க சபிக்க  நான் இங்கிருந்து உங்களுடைய மகனுக்காக துஆ செய்தவாறு இருப்பேன்”

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...