மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள் -2
இன்னொரு கவிஞரின் கதையையும் கேளுங்கள். இவருடைய பெயர் ஜிகர் முராதாபாதி.ஹபீஸைவிட பிரபலமான கவிஞர் இவர். மக்கள் மனங்களில் இன்றும் ஆட்சி செலுத்துகின்றவர்.
கஜல் என்கிற ஈரடிச் செய்யுள்களில் அவரை மிஞ்ச ஆள் இல்லை. உர்தூ மக்கள் மத்தியில் கவிப்பேரரசராக, கஜல் பாடகர்களின் சுல்தானாக பேர் பெற்றிருந்தார் அவர்.
இன்றும் அவருடைய கஜல்களும் கவிதைகளும் கவியரங்குகளில் குதூகலத்துடன் பாடப்படுகின்றன.
அவருடைய கவிதைகள், கஜல்கள் பற்றிய புகழ் எந்த அளவுக்குப் பரவியிருந்ததோ அதே அளவுக்கு அவருடைய ஆளுமையின் இன்னொரு பக்கம் பற்றிய சர்ச்சையும் பரவியிருந்தது.
குடி, கூத்து, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஆகியற்றில் அவருக்கு இருந்த நாட்டம் பற்றிய சர்ச்சைதான் அது.
எந்நேரமும் போதையில் இருந்தார் அவர். மொடாக் குடியர் என்கிற சொல்லே அவரைச் சுட்டுவதற்காகத்தான் புழக்கத்தில் வந்ததோ எனச் சொல்கின்ற அளவுக்கு எந்நேரமும் போதையில் மிதந்தார் அவர். அவருடைய குடிப்பழக்கம் பற்றிய குறிப்புகளும் குடிபோதையில் அவர் சொன்ன கவிதைகளும் பிரபலமானவை.
அவரிடம் இருந்த சிறப்பு என்னவெனில் என்னதான் போதையில் மிதந்தாலும் சுயத்தை இழக்க மாட்டார். எந்நேரமும் சீரியஸாக இருப்பார். எப்போதுமே மார்க்க அறிஞர்களுடன் மிக்க மரியாதையுடன் நடந்து கொள்வார்.
ஒருமுறை ஜிகர் முராதாபாதி கவியரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முஸஃபர் நகருக்கோ அல்லது ஸஹாரன்பூருக்கோ போய்க் கொண்டிருந்தார்.
ரயில் நிலையத்தில் குவாஜா அஜீஸுல் ஹஸன் மக்சூப் வேறு எங்கோ போவதற்காக நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். குவாஜா ஒரு மிகப் பெரும் மார்க்க அறிஞர். அல்லாமா அஷ்ரப் அலீ தானவியின் கலீஃபாக்களில் (மாவட்ட அமைப்பாளர்) அவரும் ஒருவர்.
குவாஜா நல்ல கவிஞரும் கூட. இதனால் இரண்டு பேருமே ஒருவரையொருவர் பார்த்து ஆரத்தழுவி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள்.
எங்கே போகின்றீர்கள்? எனக் கேட்டார் ஜிகர் முராதாபாதி.
அல்லாமாவைப் பார்ப்பதற்காக தானாபவன் போய்க் கொண்டிருக்கின்றேன் என்றார் குவா-ஜா.
இதனைக் கேட்ட கணத்தில் ஜிகர் முராதாபாதியின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்களும் துக்க ரேகைகளும் போட்டி போட்டன.
“அல்லாமாவைச் சந்திக்க வேண்டும் என்கிற எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. ஆனால் இந்தப் பாழாய்ப் போன குடிப்பழக்கம்தான் என்னைத் தடுத்துவிடுகின்றது. குடிகாரனான என்னை அல்லாமா சந்திக்க விரும்புவாரா என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்” மார்க்க அறிஞர்களை மதிப்பார்.
அவர் பேசி முடிப்பதற்குள்ளாகக் குறுக்கிட்ட குவாஜா “ஆமாமாம். நீர் சொல்வது சரிதான். குடிப்பழக்கம் இருக்கின்ற வரை தானாபவனை நோக்கி ஏறெடுத்தும் பார்க்காதீர். அல்லாமா ரொம்ப கறாரானவர். கண்டிப்பானவர். அவர் விரும்பமாட்டார்” எனச் சொல்லி விட்டார்.
அதன் பிறகு சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த அவர்கள் இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள்.
அன்று மாலை அஸருக்குப் பிறகு அல்லாமாவைச் சந்தித்த குவாஜா ரயில் நிலைய உரையாடலைக் குறித்து எடுத்துரைத்தார்.
ஜிகர் முராதாபாதியிடம் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று கடிந்துகொண்டார் அல்லாமா. தானாபவன் வரக்கூடாது என்று ஏன் அவரைத் தடுத்துவிட்டீர்கள்? நான் மிகவும் கண்டிப்பானவன் என்பது சரிதான். அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றேன் என்பதும் உண்மைதான். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் ஆட்களைப் பார்த்துதான் விதிக்கின்றேன். ஜிகர் முராதாபாதி விதிவிலக்கானவர். அவரை இங்கே வரச் சொல்லியிருக்க வேண்டும். இங்கே அவர் வருவதே அவருடைய சீர்திருத்தத்திற்கு அடிப்படையாக அமையக் கூடும் அல்லவா? என்று விளக்கினார்.
சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே ரயில் நிலையத்தில் ஜிகரும் குவாஜாவும் சந்தித்துக் கொண்டார்கள்.
“தானாபவனுக்கு வந்து அல்லாமாவைச் சந்திக்க விரும்புவதாக நீர் சொன்னதை அல்லாமாவிடம் சொன்னேன்..” எனத் தொடங்கினார் குவாஜா.
“அல்லாமா என்ன சொன்னார்? என்ன சொன்னார்?” என ஆர்வத்துடன் கேட்டார் ஜிகர் முராதாபாதி.
“அல்லாமா என்னைக் கடிந்து கொண்டார். உம்மை வரச் சொல்லியிருக்க வேண்டும்; கட்டுப்பாடுகள், பேணுதல்களைச் சொல்லி ஏன் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டீர்? ஜிகர் அவற்றுக்கெல்லாம் விதிவிலக்கானவர் என்றார்.”
குவாஜாவின் பதிலைக் கேட்டதும் ஜிகர் முராதாபாதியின் உச்சி குளிர்ந்து விட்டது.
வேறு எங்கோ போவதற்காக வந்தவர் அவர். அந்தப் பயணத்திட்டத்தைக் கைவிட்டார். அந்தக் கணமே தானாபவன் போவதென முடிவு செய்துவிட்டு குவாஜாவுடன் தானாபவனுக்கு விரைந்தார்.
ஊருக்குப் போய் சேர்ந்ததும் மஸ்ஜித் ஒன்றின் குளியலறையில் நன்றாகக் குளித்துவிட்டு கான்காஹ் அஷ்ரஃபி என்கிற அல்லாமாவின் தியான பீடத்திற்கு வந்து சேர்ந்தார்.
அல்லாமா அவரைப் பார்த்ததும் முகம் மலர ஆரத்தழுவிக் கொண்டார். நிறைய பேசினார்கள். ஒரு கட்டத்தில் கவிதை பாடுமாறு அல்லாமா கேட்க, ஜிகர் முராதாபாதி நான்கே வரிகளில் தம்முடைய உள்ளத்தில் நிகழ்ந்த மாற்றத்தை, நடத்தையில் வெடித்த புரட்சியை விவரித்துவிட்டார். அந்த வேளையில் அல்லாமாவின் வேண்டுகோளுக்கு இணங்க நா தழுதழுக்க அவர் வாசித்த நான்கடி செய்யுள் இன்றும் உர்தூ உலகில் அதிகமாக மேற்கோள் காட்டப்படுகின்றது.
சில நாட்கள் தானாபவனிலேயே தங்கியிருந்த பிறகு தமது ஊருக்கு ஜிகர் முராதாபாதி திரும்பிய போது ஊர் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஜிகரைப் பார்த்தார்கள்.
No comments:
Post a Comment