நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ, இளைஞர்களை சத்திய மார்க்கத்தின் இராஜபாட்டையில் வழிநடத்தி, அவர்களின் சிந்தையிலும் செயலிலும் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி, இறைவனின் உவப்புக்காகவும் மறுமைவெற்றிக்காகவும் அனைத்தையும் அர்ப்பணிக்கின்ற இலட்சியக் கனலை அவர்களுக்குள் கிளர்ந்தெழச் செய்த முதுபெரும் மாணவர் தலைவர், சத்தியப் போராளி, இலட்சியப் பயணி பி.சி. ஹம்சா 21 ஜூன் 2018 வியாழன் அன்று நள்ளிரவில் கேரளத்தில் இறைவனிடம் மீண்டுவிட்டார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன் - திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். திண்ணமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்).
அவருடைய மறைவு பற்றிய செய்தி பரவத் தொடங்கியதும் உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் கிராமத்திலிருந்து மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் வரையிலும் குஜராத்தின் கரையோரங்களிலிருந்து அஸ்ஸாமின் மலையோரங்கள் வரையிலும் ஆந்திரத்து தெலுங்கானா முதல் கர்நாடகம், தமிழகம் வரையிலும் தலைநகரமான தில்லியிலிருந்து அவர் பிறந்து வளர்ந்த கேரளம் வரையிலும் கண் கலங்கியவர்களும், புன்னகை மாறா அவரின் முகத்தை மனக் கண்களில் கொண்டு வந்து நெஞ்சம் நெகிழ்ந்தவர்களும் ஏராளம். ஏராளம். அனைவருடைய மனங்களிலும் நிலையான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்ற வசியமும், ஈர்ப்பாற்றலும் பெற்றிருந்தார் அவர்.
‘மனிதர்கள் அனைவரிடமும் ஏதேனுமோர் தனிப்பண்பு மிகைத்திருக்கும். அந்தப் பண்பைக் கொண்டு நினைவுகூரத்தக்க அளவுக்கு அவர்களின் வாழ்வில் அந்தப் பண்பு மிளிரும். பி.சி. ஹம்சா சாகிபை நினைவுகூரும்போதெல்லாம் மனத்தில் தோன்றுவது அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும்தாம்’ எனச் சொல்கின்றார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி. உண்மைதான். ‘அர்ப்பணிப்புக்கு மறுபெயர்தான் பி. சி..!’என்கின்ற அளவுக்கு தம்முடைய இரவையும் பகலையும் உழைப்பையும் ஒய்வையும் ஒட்டுமொத்த வாழ்வையும் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக முழுமையாக அர்ப்பணித்துவிட்டிருந்தார் அவர்.
எளிமையானவர். பழகுவதற்கு இனியவர். ‘1990-இல் அவர் முதன்முதலாக பீகாருக்கு வந்தார். முதல்முறையாகச் சந்திக்கின்றோம். ஆனால் ஏதோ காலங்காலமாக தோழமை கொண்டிருக்கின்ற உணர்வோடு உற்சாகமாகப் பழகி, இனிமையாகப் பேசி, சிரித்து இதயத்தில் நிலையாக தங்கிவிட்டார்’ என்கிறார் பீகாரின் ஷப்பீர் ஆலம்.
‘We need Quality not Quantity தரம்தான் தேவையே தவிர எண்ணிக்கை அல்ல என்று கான்பூர் கூட்டத்தில் அவர் சொன்னதை நினைவுகூர்கின்றார், அஸ்ஸாம் மாநிலத்து அபுல் ஹஸன். ‘தமிழகத்தில் களம் காலியாக இருக்கின்றது - இஸ்லாமிய இயக்கம் முழுமூச்சுடன் களம் இறங்க வேண்டும்’ என 1989-இல் அவர் சொன்னது இன்றும் காதுகளில் ரீங்காரமிடுவதாக நெஞ்சம் நெகிழ்கின்றார் வெல்ஃபேர் பார்ட்டியின் மூத்த தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்.
‘நான் அவரை முதல்முறை சந்தித்த போது கனிவான அண்ணனைச் சந்திக்கின்ற உணர்வில் திளைத்தேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்தித்த போது ‘என் பெயர்..’ எனச் சொல்லி முடிப்பதற்குள், ‘உமைர் பாய், எப்படி இருக்கின்றீர்கள்?’ என முந்தையச் சந்திப்பில் விட்ட இடத்திலிருந்து சிரித்த முகத்துடன் தொடங்கிவிட்டார் அவர். வரிசையின் கடைசியில் நிற்பவனையும் நல்ல முறையில் அறிந்திருப்பதுதான் தலைமைக்கு அழகு. ஒரு நல்ல தலைவரை இன்று இயக்கம் இழந்து நிற்கின்றது’ என்கிறார், முன்னாள் எஸ்ஐஓ செயலாளர் உமைர் அனஸ்.
‘உடனுக்குடன் முடிவெடுக்கின்ற அவருடைய ஆற்றல்தான் இன்றும் என் நினைவில் நிற்கின்றது’ என்கிறார் தில்லி எஸ்ஐஓ முன்னாள் தலைவர் அயாஸ் இஸ்லாஹி. ‘அவரைப் போன்ற கடின உழைப்பாளிகள் எவரும் இருக்க மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் அவர் நிதானம் இழந்ததில்லை. புன்னகையுடன் எல்லாவற்றையும் எளிதாக சாதித்து முடித்துவிடுவார்’ என்கிறார் முன்னாள் எஸ்.ஐ.ஓ பொதுச் செயலாளர் ஐ. கரீமுல்லாஹ்.
‘ரோஜா மலரின் இதழைப் போன்ற மென்மையான இதயம் கொண்டவர் அவர். அதே சமயம் கொள்கை, கோட்பாடு என்று வருகின்ற போது எஃகினைப் போன்று உறுதிமிக்கவர் அவர்.’ என்கிறார் முதுபெரும் சமுதாயத் தலைவரும் மில்லி கெஜட் இதழாசிரியருமான டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான். ‘இதய நோய், டயாபிட்டீஸ், மிகை இரத்த அழுத்தம் என பற்பல நோய்களுடன் போராடி வந்த அவரை புற்றுநோயும் தொற்றிக் கொண்டது. அந்த நிலையிலும் அவர் தொடர்ந்து மும்முரமாக இயங்கி வந்தார். மாதக் கணக்கில் குடும்பத்தாரை விட்டு தலைமையகத்தில் தங்கிச் செயலாற்றி வந்தார். மலையாளம், உர்தூ, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவர் புலமை பெற்றிருந்தார். அவருடைய மறைவு கட்சிக்கும் இயக்கத்துக்கும் மிகப் பெரும் இழப்பாகும்’ என நெஞ்சம் நெகிழ்கின்றார் வெல்ஃபேர் கட்சித் தலைவர் டாக்டர் சையத் காசிம் ரசூல் இல்யாஸ்.
இறக்கின்ற நாள் வரையில் அவர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக பாடுபட்டு வந்தார். 1980 களின் இறுதியில் சத்தியப் பாதையில் இலட்சியப் பயணத்தைத் தொடங்கிய அந்தப் போராளி போகாத ஊர் இல்லை. போராடாத களம் இல்லை. இளமைத் துடிப்பும் கொப்பளிக்கும் பேரார்வமும் இலட்சிய வேட்கையும் நிறைந்த இளவலாக இயக்கத்தில் இணைந்த நாள் முதலே பெரும் பெரும் பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. 1986-இல் முதன் முதலாக மாணவர்களின் அகில இந்திய மாநாடு நடத்தப்பட்ட போது அதற்கான அனைத்தையும் செய்கின்ற பொறுப்பு அவருக்குத்தான் தரப்பட்டது. அதற்காக அரசு வேலையை உதறிவிட்டு வந்தார் அவர்.
படம்: இடமிருந்து மூன்றாமவராக கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பவர்தான் பிசி ஹம்சா.
(‘அமைதி, முன்னேற்றம், ஈடேற்றத்துக்கு இஸ்லாம்’ என்கிற மையக்கருத்தில் நடந்த அந்த மாநாடு இயக்க வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. புகழ்பெற்ற பாடகராக இருந்து இஸ்லாத்தை ஏற்ற யூசுப் இஸ்லாம் கலந்து கொண்டதும் அந்த மாநாட்டில்தான். இரண்டாம் நாள் இரவில் பெருமழை பெய்ய, கொட்டும் மழையில் மௌலானா அப்துல் அஜீஸ் சாகிப் உருக்கமாக உரை நிகழ்த்த, மாணவர் பட்டாளம் சற்றும் கலையாமல் ‘அடாது மழை பெய்தாலும் விடாது பணியாற்றுவோம்’ என உலகுக்கு உரத்துச் சொன்னதும் அந்த மாநாட்டில்தான்.) அதனைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஓ அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட நாடு முழுவதும் எண்ணற்ற மாணவ, இளைஞர்களின் வாழ்வில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தினார் அவர். தொடர்ந்து கேரளத்து அமீரின் தனி அலுவலர், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் என அவர் மீதான பொறுப்புகள் கூடிக்கொண்டே போயின.
ஒரு கட்டத்தில் மீன் டைம் என்கிற பத்து நாள் பத்திரிகை (வார இதழாகவும் அல்லாமல், மாதமிரு முறை இதழாகவும் இல்லாமல் மாதம் மும்முறை இதழாக) தொடங்கப்பட்ட போது, அதற்கான நிதி, நிர்வாகம், இதழாசிரியர் என எல்லாப் பொறுப்புகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. மணலில் கயிறு திரிக்கின்ற அந்த சவால் நிறைந்த பணியையும் மனமுவந்து ஏற்றார் அவர். ஆனால் வாய்ப்புக்கேடாக அந்த முயற்சி தோல்வியில் முடிய, அதன் வலியையும் வேதனையையும் தனி மனிதராகச் சுமந்தார் பி.சி. ஹம்சா.
அதன் பிறகும் அவர் துவண்டுவிடவில்லை. வெல்ஃபேர் கட்சி தொடங்கப்பட்ட போது அந்த சவால் நிறைந்த பணியிலும் அவர் சற்றும் தயங்காமல் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல, கேரளத்தில் ஏராளமான அறக்கட்டளைகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.
இவ்வாறு வாழ்வின் இறுதி மூச்சு வரை அமைப்பு, இயக்கம், ஊடகம், கட்சி என வெவ்வேறு தளங்களில் மும்முரமாக இயங்கி வந்த அவர் தம்முடைய 62ஆம் வயதில் இறைவனிடம் மீண்டுவிட்டார்.
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக. சுவனத்தின் உயர்ந்த தோட்டங்களில் அவருக்கு இடம் அளிப்பானாக. ஆமீன்.
- டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்.
No comments:
Post a Comment