Pages

Showing posts with label Islah-e-Qalb. Show all posts
Showing posts with label Islah-e-Qalb. Show all posts

Thursday, June 23, 2011

இருப்பதோ ஒரு மனம்..!


ஒருவரால் ஒரே சமயத்தில் இறைநம்பிக்கையாளராகவும் நயவஞ்சகராகவும் இருக்க முடியாது.

அவரால் ஒரே சமயத்தில் வாய்மையாளராகவும் பொய்யராகவும் இருக்க முடியாது.

அவர் நல்லவராகவும் கெட்டவராகவும் ஒரே சமயத்தில் திகழ முடியாது.

அவருடைய நெஞ்சுக்குள் இரண்டு இதயங்களா இருக்கின்றன - ஒன்றை உளத்தூய்மை மிக்க இதயம் என்றும் இன்னொன்றை இறைவனை அஞ்சாத இதயம் என்றும் சொல்வதற்கு? கிடையாது.

எனவே எந்தவொரு தருணத்திலும் மனிதன் ஒன்று நல்லவனாக இருப்பான். அல்லது கெட்டவனாக இருப்பான்.

இறைநம்பிக்கையாளனாக இருப்பான். அல்லது நயவஞ்சகனாக இருப்பான்.

இறைவனை மறுப்பவனாக இருப்பான். அல்லது இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவனாக இருப்பான்.

எனவே ஒரு நம்பிக்கையாளரைப் பார்த்து நயவஞ்சகர் என்று சொல்வதாலோ அல்லது நயவஞ்சகரைப் பார்த்து நம்பிக்கையாளர் என்று சொல்லி விடுவதாலோ உண்மையான நிலை மாறிவிடப் போவதில்லை.

அந்த நபரின் உண்மைநிலை ஒற்றை நிலையாகத்தான் இருக்கும்.

- மௌலானா மௌதூதி(ரஹ்)

Wednesday, June 22, 2011

“பையனை போயும் போயும் அந்த மதரஸாவிலா சேர்ப்பது..?”

 

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள்-4


இன்னொரு நிகழ்வைக் கேளுங்கள்.

ஆஜம்கரிலிருந்து ஒருவர் அல்லாமாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்:

“நான் உங்களுடைய கலீஃபா - பிரதிநிதியான மௌலானா அப்துல் கனி பூல்பூரி அவர்களிடம் பைஅத் செய்துள்ளேன். சென்ற ஆண்டு என்னுடைய பையனை மதரஸத்துல் இஸ்லாஹ் அரபிக் கல்லூரியில் சேர்த்துவிட்டேன். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அங்கு அவனைச் சேர்த்துவிட்ட பிறகு அவனுடைய நடத்தையிலும் பேச்சுவழக்கிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐவேளை தொழுகைகளையும் விடாமல் தொழுகின்றான். கெட்ட சகவாசத்தை முற்றாகக் கத்திரித்துவிட்டான். வீண் அரட்டை, பொழுதுபோக்கு போன்றவற்றில் நேரத்தை வீணாக்குவதில்லை. மனம் ஊன்றி பாடங்களைப் படிக்கின்றான். என்னுடைய நண்பர்கள் சிலரின் பிள்ளைகளும் அங்குதான் படித்து வருகின்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அங்கே பையனை படிக்க வைப்பதால் எனக்கு வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன.

ஆனால் என்னுடைய முர்ஷித் - வழிகாட்டி மௌலானா அப்துல் கனிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘பையனை போயும் போயும் அந்த மதரஸாவிலா சேர்ப்பது? உம்முடைய பையன் உருப்பட்ட மாதிரிதான். அந்த மதரஸாக்காரர்களின் சிந்தனை சரியில்லை. உம்முடைய பையன் சுதந்திரமாக, முற்போக்காக சிந்திக்கத் தொடங்கிவிடுவான். குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை விரிவுரைகளின் துணை கொண்டு புரிந்து கொள்வதற்குப் பதிலாக தன்னுடைய அறிவாற்றலின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயல்வான்.” என்றெல்லாம் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்.

எதுவரை சொல்லிவிட்டாரெனில், “உம்முடைய மகனை உடனே அந்த மதரசாவிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் நான் அவனைச் சபிப்பேன்.” என என்னை மிரட்டுகின்ற அளவுக்குப் போய்விட்டார்.

ஆனால், என்னுடைய மகனை அந்த மதரஸாவில்தான் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாகும்.

- இவ்வாறு அவர் தம்முடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அல்லாமா அவருக்கு இரத்தினச்சுருக்கமாகப் பதிலளித்தார்: “உங்களுடைய பையனைச் சரியான இடத்தில்தான் சேர்த்திருக்கின்றீர்கள். நிம்மதியாக இருங்கள். உங்களுடைய மகனுக்கும் அந்த மதரஸாவில்தான் படிக்க விருப்பமிருக்கின்றதெனில் அவனை அங்கேயே தொடர்ந்து படிக்க வையுங்கள். மௌலவி அப்துல் கனியின் சாபத்தைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். அவர் அங்கிருந்து சபிக்க சபிக்க  நான் இங்கிருந்து உங்களுடைய மகனுக்காக துஆ செய்தவாறு இருப்பேன்”

“அவர் உங்களை காஃபிர் என்று அறிவித்தவராயிற்றே..!”

 

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள்- 3

இவர் இன்ன சிந்தனைப் பிரிவைச் சேர்ந்தவர், இவர் இன்ன அமைப்பைச் சேர்ந்தவர், இவர் இன்ன ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என மக்களுக்கு அடையாளமிட்டு பிரித்துப் பார்க்கின்ற இன்றைய வழக்கங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லாமா அஷ்ரப் அலீ தானவி.

எதனையும் உயர்ந்த நோக்கோடு, விவேகத்துடனும் ஞானம் நிறைந்த பார்வையுடனும் அணுகுவதுதான் அவருடைய தனிச் சிறப்பு. மார்க்கத்தின் பொதுவான நலன்களைத்தான் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். இதனை வெளிப்படுத்துகின்ற ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
மௌலானா அஹ்மத் ரஜா கான் ஃபாஸில் பரேல்வி (1856 - 1921) அவர்களைக் குறித்து அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சொல்ல வந்ததை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அழுத்தம்திருத்தமாக எடுத்துரைப்பதில் புகழ்பெற்றவர் அவர்.

இது எங்கு போய் முடிந்ததெனில் சில மார்க்க அறிஞர்களைக் குறித்து இறைமறுப்பாளர்கள் என்று ஃபத்வா கொடுத்துவிட்டிருந்தார் அவர்.
அல்லாமா அஷ்ரப் அலீ தானவி ஒருநாள் அஸருக்குப் பிறகு தம்முடைய சீடர்களுடன் அமர்ந்திருந்த வேளையில்தான் மரணம் பற்றிய தகவல் கிடைக்கின்றது. “அல்லாமா! அஹ்மத் ரஜா கான் இறந்துவிட்டாராம்..!” என்று அந்தத் தகவலைச் சொன்னார் ஒரு சீடர்.

அல்லாமாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மௌலானா என்றோ ஜனாப் என்றோ மரியாதை கொடுத்துச் சொல்லாமல் நான்கு வயதுப் பையனைக் குறித்துச் சொல்வதைப் போல அந்த மிகப் பெரும் மார்க்க அறிஞரின் பெயர் குறிப்பிடப்படுவது அல்லாமாவுக்குப் பிடிக்கவில்லை.

“யாரு? மௌலானா அஹ்மத் ரஜா கான் பரேல்வி அவர்களா?”

“ஆமாம். அல்லாமா!”

“இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்” எனச் சொன்ன அல்லாமா, “வாருங்கள். அவருக்காகப் பிரார்த்திப்போம்” எனச் சொல்லியவாறு இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டார். அங்கு இருந்தவர்களும் கைகளை ஏந்தி பிரார்த்தித்தனர்.

ஆனால் இது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அல்லாமா பிரார்த்தனையை முடித்ததும் வாய் திறந்து கேட்டு விட்டார்கள். “அல்லாமா! ஒரு பித்அத்தியை (இறைத்தூதரின் வழிமுறைக்கு அப்பாற்பட்ட புதுமையானவற்றை மார்க்கத்தில் புகுத்துகின்றவர்) மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்வதா?” என்றனர்.

அல்லாமா அஷ்ரப் அலீ தானவி சொன்னார்: “அவர் பித்அத்தி அல்லர்; முஹப்பதி (மிகையான அன்பு கொண்டவர்). ஒருவர் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் கொண்டிருக்கும் போது மிகையான பற்றுடன் நடந்து கொள்ளத்தான் செய்வார்கள்...”

அல்லாமா சொல்லி முடிப்பதற்குள்ளாக இன்னொருவர் சொன்னார்: “அவர் உங்களை காஃபிர் - இறைமறுப்பாளர்  என அறிவித்தவராயிற்றே..! அப்படியிருந்தும் அவருக்காக நீங்கள் பிரார்த்தித்தது ஏனோ?”

அல்லாமா மிகவும் நிதானமாக, மென்மையாக பதிலளித்தார்: “மகனே! நான் ஒரு இறைமறுப்பாளன் என்று அவர் என்னைப் பற்றி உறுதியான தீர்மானத்திற்கு வந்துவிட்டிருந்தார். நான் எடுத்துரைத்த கருத்துகளில் ஏதோவொன்று அவருடைய பார்வையில் இறைநம்பிக்கைக்கு மாற்றமான கருத்தாகப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் அவர் அந்தத் தீர்மானத்திற்கு வந்து விட்டிருக்க வேண்டும். என்னுடைய பேச்சையோ, செயலையோ பார்த்து இறைவனையே மறுக்கின்றவர் இவர் என்கிற தீர்மானத்திற்கு வந்து விட்ட பிறகு அவர் என்னைக் குறித்து ‘காஃபிர்’ என அறிவிக்காமல் இருந்திருப்பாரேயானால் அவர் ‘காஃபிர்’ ஆகிவிட்டிருப்பார். ஃபிக்ஹு சட்டத்தின் உறுதியான விதி இது”.
.... .... ....

“குடிகாரனான என்னை அல்லாமா சந்திப்பாரா?”

 

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள் -2

இன்னொரு கவிஞரின் கதையையும் கேளுங்கள். இவருடைய பெயர் ஜிகர் முராதாபாதி.

ஹபீஸைவிட பிரபலமான கவிஞர் இவர். மக்கள் மனங்களில் இன்றும் ஆட்சி செலுத்துகின்றவர்.

கஜல் என்கிற ஈரடிச் செய்யுள்களில் அவரை மிஞ்ச ஆள் இல்லை. உர்தூ மக்கள் மத்தியில் கவிப்பேரரசராக, கஜல் பாடகர்களின் சுல்தானாக பேர் பெற்றிருந்தார் அவர்.

இன்றும் அவருடைய கஜல்களும் கவிதைகளும் கவியரங்குகளில் குதூகலத்துடன் பாடப்படுகின்றன.

அவருடைய கவிதைகள், கஜல்கள் பற்றிய புகழ் எந்த அளவுக்குப் பரவியிருந்ததோ அதே அளவுக்கு அவருடைய ஆளுமையின் இன்னொரு பக்கம் பற்றிய சர்ச்சையும் பரவியிருந்தது.

குடி, கூத்து, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஆகியற்றில் அவருக்கு இருந்த நாட்டம் பற்றிய சர்ச்சைதான் அது.

எந்நேரமும் போதையில் இருந்தார் அவர். மொடாக் குடியர் என்கிற சொல்லே அவரைச் சுட்டுவதற்காகத்தான் புழக்கத்தில் வந்ததோ எனச் சொல்கின்ற அளவுக்கு எந்நேரமும் போதையில் மிதந்தார் அவர். அவருடைய குடிப்பழக்கம் பற்றிய குறிப்புகளும் குடிபோதையில் அவர் சொன்ன கவிதைகளும் பிரபலமானவை.

அவரிடம் இருந்த சிறப்பு என்னவெனில் என்னதான் போதையில் மிதந்தாலும் சுயத்தை இழக்க மாட்டார். எந்நேரமும் சீரியஸாக இருப்பார். எப்போதுமே மார்க்க அறிஞர்களுடன் மிக்க மரியாதையுடன் நடந்து கொள்வார்.

ஒருமுறை ஜிகர் முராதாபாதி கவியரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முஸஃபர் நகருக்கோ அல்லது ஸஹாரன்பூருக்கோ போய்க் கொண்டிருந்தார்.

ரயில் நிலையத்தில் குவாஜா அஜீஸுல் ஹஸன் மக்சூப் வேறு எங்கோ போவதற்காக நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். குவாஜா ஒரு மிகப் பெரும் மார்க்க அறிஞர். அல்லாமா அஷ்ரப் அலீ தானவியின் கலீஃபாக்களில் (மாவட்ட அமைப்பாளர்) அவரும் ஒருவர்.

குவாஜா நல்ல கவிஞரும் கூட. இதனால் இரண்டு பேருமே ஒருவரையொருவர் பார்த்து ஆரத்தழுவி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள்.

எங்கே போகின்றீர்கள்? எனக் கேட்டார் ஜிகர் முராதாபாதி.
அல்லாமாவைப் பார்ப்பதற்காக தானாபவன் போய்க் கொண்டிருக்கின்றேன் என்றார் குவா-ஜா.

இதனைக் கேட்ட கணத்தில் ஜிகர் முராதாபாதியின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்களும் துக்க ரேகைகளும் போட்டி போட்டன.

“அல்லாமாவைச் சந்திக்க வேண்டும் என்கிற எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. ஆனால் இந்தப் பாழாய்ப் போன குடிப்பழக்கம்தான் என்னைத் தடுத்துவிடுகின்றது. குடிகாரனான என்னை அல்லாமா சந்திக்க விரும்புவாரா என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்”  மார்க்க அறிஞர்களை மதிப்பார்.

அவர் பேசி முடிப்பதற்குள்ளாகக் குறுக்கிட்ட குவாஜா “ஆமாமாம். நீர் சொல்வது சரிதான். குடிப்பழக்கம் இருக்கின்ற வரை தானாபவனை நோக்கி ஏறெடுத்தும் பார்க்காதீர். அல்லாமா ரொம்ப கறாரானவர். கண்டிப்பானவர். அவர் விரும்பமாட்டார்” எனச் சொல்லி விட்டார்.

அதன் பிறகு சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த அவர்கள் இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள்.

அன்று மாலை அஸருக்குப் பிறகு அல்லாமாவைச் சந்தித்த குவாஜா ரயில் நிலைய உரையாடலைக் குறித்து எடுத்துரைத்தார்.

ஜிகர் முராதாபாதியிடம் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று கடிந்துகொண்டார் அல்லாமா. தானாபவன் வரக்கூடாது என்று ஏன் அவரைத் தடுத்துவிட்டீர்கள்? நான் மிகவும் கண்டிப்பானவன் என்பது சரிதான். அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றேன் என்பதும் உண்மைதான். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் ஆட்களைப் பார்த்துதான் விதிக்கின்றேன். ஜிகர் முராதாபாதி விதிவிலக்கானவர். அவரை இங்கே வரச் சொல்லியிருக்க வேண்டும். இங்கே அவர் வருவதே அவருடைய சீர்திருத்தத்திற்கு அடிப்படையாக அமையக் கூடும் அல்லவா? என்று விளக்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே ரயில் நிலையத்தில் ஜிகரும் குவாஜாவும் சந்தித்துக் கொண்டார்கள்.

“தானாபவனுக்கு வந்து அல்லாமாவைச் சந்திக்க விரும்புவதாக நீர் சொன்னதை அல்லாமாவிடம் சொன்னேன்..” எனத் தொடங்கினார் குவாஜா.

“அல்லாமா என்ன சொன்னார்? என்ன சொன்னார்?” என ஆர்வத்துடன் கேட்டார் ஜிகர் முராதாபாதி.

“அல்லாமா என்னைக் கடிந்து கொண்டார். உம்மை வரச் சொல்லியிருக்க வேண்டும்; கட்டுப்பாடுகள், பேணுதல்களைச் சொல்லி ஏன் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டீர்? ஜிகர் அவற்றுக்கெல்லாம் விதிவிலக்கானவர் என்றார்.”

குவாஜாவின் பதிலைக் கேட்டதும் ஜிகர் முராதாபாதியின் உச்சி குளிர்ந்து விட்டது.

வேறு எங்கோ போவதற்காக வந்தவர் அவர். அந்தப் பயணத்திட்டத்தைக் கைவிட்டார். அந்தக் கணமே தானாபவன் போவதென முடிவு செய்துவிட்டு குவாஜாவுடன் தானாபவனுக்கு விரைந்தார்.

ஊருக்குப் போய் சேர்ந்ததும் மஸ்ஜித் ஒன்றின் குளியலறையில் நன்றாகக் குளித்துவிட்டு கான்காஹ் அஷ்ரஃபி என்கிற அல்லாமாவின் தியான பீடத்திற்கு வந்து சேர்ந்தார்.

அல்லாமா அவரைப் பார்த்ததும் முகம் மலர ஆரத்தழுவிக் கொண்டார். நிறைய பேசினார்கள். ஒரு கட்டத்தில் கவிதை பாடுமாறு அல்லாமா கேட்க, ஜிகர் முராதாபாதி நான்கே வரிகளில் தம்முடைய உள்ளத்தில் நிகழ்ந்த மாற்றத்தை, நடத்தையில் வெடித்த புரட்சியை விவரித்துவிட்டார். அந்த வேளையில் அல்லாமாவின் வேண்டுகோளுக்கு இணங்க நா தழுதழுக்க அவர் வாசித்த நான்கடி செய்யுள் இன்றும் உர்தூ உலகில் அதிகமாக மேற்கோள் காட்டப்படுகின்றது.

சில நாட்கள் தானாபவனிலேயே தங்கியிருந்த பிறகு தமது ஊருக்கு ஜிகர் முராதாபாதி திரும்பிய போது ஊர் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஜிகரைப் பார்த்தார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...