Pages

Monday, March 5, 2018

‘இஸ்லாத்தின் படி வாழ்வது உங்களின் பிறப்புரிமை.’



- அமீரே ஜமாஅத்தின் எழுச்சியுரை.

எஸ்.ஐ.ஓ.வைச் சேர்ந்த மாணவ, இளைஞர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துவிடும். வயது முதிர்ந்த தந்தைக்கு பெற்ற பிள்ளைகளைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷத்தைப் போன்ற உணர்வை நான் பெறுகின்றேன். அந்த இனிமையையும் சுகந்தத்தையும் சுவையையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது. என்னுடைய கிழட்டு நாளங்களில் இளமை இரத்தம் பாய்வதைப் போன்று நான் புதுத் தெம்பைப் பெறுகின்றேன்.

நண்பர்களே! தோழர்களே! அன்பு மகன்களே என்று சொல்லி உங்களை அழைத்தாலும் அது தவறு ஆகாது. இந்த அமர்வில் பலரும் ‘இந்த நாட்டின் எதிர்காலம் என்ன ஆகுமோ?’ எனக் கவலை தெரிவித்தார்கள்.
நான் சொல்வேன். இந்த நாட்டின் எதிர்காலம் என்னுடைய இந்த இளைஞர்கள்தாம்..! (தக்பீர் முழக்கம்)

இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்த இளவல்கள்தாம் தீர்மானிப்பார்கள். எதிர்காலம் ஒளிமயமானதாகத்தான் இருக்கும் என்றே இவர்கள் தீர்மானித்து விட்டிருக்கின்றார்கள். நிச்சயமாக ஒளிமயமானதாகத்தான் இருக்கும். இன்ஷா அல்லாஹ். அந்த ஒளிமயமான எதிர்காலத்தை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஆயிரக் கணக்கில் இங்கு திரண்டிருக்கின்ற இளைஞர்களைப் பார்க்கின்ற போது - நான் போகின்ற இடங்களிலெல்லாம் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடத்தான் செய்கின்றார்கள் - நான் தனியாக இல்லை என்றே நான் உணர்கின்றேன். நான் தனியாளாக இல்லை. எனக்குப் பின்னால் ஜமாஅத்தே இஸ்லாமி இருக்கின்றது. எனக்கு பின்னால் இலட்சக்கணக்கான மாணவ, இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றே உணர்கின்றேன்.

அன்பிற்கினியவர்களே!  நீங்கள் என்னுடையவர்கள். நான் உங்களைச் சேர்ந்தவன் என்றே நான் உணர்கின்றேன். (தக்பீர் முழக்கம்..)

இனி நீங்கள் என்றும் என்னுடன்தான் இருப்பீர்கள் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு. நானும் உயிருள்ள வரை உங்களுடனே இருப்பேன்.

நண்பர்களே! ‘முஸ்லிம்களின் உயிர், உடல், உடைமை, மானம் ஆகியவற்றுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை’ என இங்குச் சொன்னார்கள். ‘இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கின்ற உடல், உயிர், மானம் ஆகியவற்றின் பாதுகாப்பை நசுப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன’ என பலரும் சொன்னார்கள். ‘அரசு இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது’ என்றும் சொல்லப்பட்டது. இது உண்மைதான்.

ஆனால் முஸ்லிம்களின் உடைமைகள், உயிர்கள், மானம் ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்களுடையது. வேறு எவரும் அவற்றை உங்களுக்காகப் பாதுகாக்க மாட்டார்கள். கண்ணியத்துடன், மானத்துடன்தான் நீங்கள் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்; அவமானப்பட்டு, கேவலப்பட்டு அல்ல!. இழிவான வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.

குர்ஆன் கூறுகின்றது: ஈமான் இல்லாதவர்கள் கூறுகின்றார்கள் : ‘நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு நம்மில் பலசாலிகளாய், செல்வாக்கு மிக்கவர்களாய் இருப்பவர்கள் இந்த இழிவானவர்களை வெளியேற்றிவிடுவார்கள்’

குர்ஆன் தொடர்ந்து கூறுகின்றது: ‘கண்ணியமும் மரியாதையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால் நம்பிக்கையற்ற இந்தமக்களுக்கு இது புரிவதில்லை’ (அத்தியாயம் 63 அல்முனாஃபிகூன் 8)

கண்ணியமும் இழிவும் எங்களின் கைகளில் என எவர்கள் சொல்கின்றார்களோ அவர்களைப் பார்த்து குர்ஆன் அறிவிக்கின்றது. ‘கண்ணியமும் மரியாதையும் அல்லாஹ்வுக்கு உரியது. இறைத்தூதருக்கு உரியது. இறைநம்பிக்கையாளர்களுக்கு உரியது’. அவர்கள் கண்ணியத்துடன் இருக்கின்றார்கள். கண்ணியத்துடன்தான் இருப்பார்கள். எவராலும் இந்த டிக்னிட்டியை - கண்ணியத்தை எதிர்த்து சவால் விட முடியாது.

ஒரு முறை, ஹிஜ்ரத் நடக்கவிருந்த சந்தர்ப்பத்தில் சத்திய மார்க்கத்தின் எதிரிகள் ‘நாங்கள் முஹம்மத் நபிகளாரை மக்காவிலிருந்து வெளியேற்றிவிடுவோம். கொன்றுவிடுவோம்’ என்று தீர்மானித்தார்கள். அப்போது குர்ஆன் அறிவித்தது. அவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்:

‘ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால் உமக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது’ (அத்தியாயம் 17 பனூ இஸ்ராயீல் 76)

அதாவது ‘நீங்களும் இங்கு அதிக நாள்கள் இருக்க மாட்டீர்கள். முஹம்மத் நபிகளாரும் அவர்களின் தோழர்களும் இன்றியமையாத சக்தியாய் இருக்கின்றார்கள். அவர்களின் பொருட்டு தான் இந்த நகரத்தில் இறைவனின் அருள்வளங்கள் அருளப்பட்டுக் கொண்டிருக்கின்ற. அவர்கள் இருப்பதால்தான் நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறிவிட்டார்களேயானால் உங்களாலும் இந்த நகரத்தில் தங்கியிருந்து வாழ முடியாது. இந்த நாட்டின் எதிர்காலமும் உங்களைத்தான் சார்ந்திருக்கின்றது. நீங்கள் வெளியேறி விட்டீர்கள் எனில் இந்த நாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை. நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள். அதனால் இந்த நாட்டுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது. நீங்கள் இல்லாமல் போனீர்களேயானால் இந்த நாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை.

நாடே இருட்டில் மூழ்கியிருக்கின்றது. திரும்பும் திசையெங்கும் காரிருள்தான் சூழ்ந்திருக்கின்றது. இந்த இருளில் வெளிச்சத்தைப் பரப்புகின்ற கோபுரங்களாய் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களிடமிருந்துதான் மக்கள் ஒளியைப் பெறுவார்கள்.

நண்பர்களே! தோழர்களே!

நான் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். அவை உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகலாம். அவை உங்களுக்குப் பிடிக்காமலும் போய் விடலாம். ஆனால் நான் எதனை சரியென்றும் சத்தியமென்றும் உணர்கின்றேனோ அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் மீதான கடமையாகும். உங்களுக்குப் பிடிக்காமல் போனாலும் நான் சொன்னவற்றைக் காதாரக் கேட்டு அவற்றின் படி நடப்பது உங்கள் மீதான பொறுப்பாகும். அவற்றைக் கேட்டு அவற்றின் படி செயல்படுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு.


அன்பர்களே!

இங்கு தோழர் அமீனுல் ஹசனும் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் எந்தவொரு மதத்தையும் ஏற்றுக்கொள்கின்ற, அதன்படி வாழ்கின்ற, அதன் பக்கம் மக்களை அழைக்கின்ற உரிமையும் சுதந்திரமும் இந்த நாட்டு மக்களுக்கு இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் அளித்திருக்கின்றது. அந்த உரிமையையும் சுதந்திரத்தையும் பறிபோகாமல் காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆம். இந்த உரிமையைத் தக்க வைத்தாக வேண்டும். இதற்கு எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவரேனும் இதனைப் பறிக்க முயன்றால் தடுத்து நிறுத்துங்கள். அது உங்களின் கடமை.
ஏனெனில் இது குர்ஆன் உங்களுக்கு அளித்துள்ள உரிமை. குர்ஆன் வெளிப்படையாக அறிவித்தது. ஒவ்வொரு மனிதருக்கும் தாம் விரும்புகின்ற மார்க்கத்தை ஏற்றுக்கொள்கின்ற சுதந்திரம் உண்டு என்று அறிவித்தது. எல்லோருக்கும் இந்த சுதந்திரம் உண்டு. எல்லோருக்கும்.

‘மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை’ என்றே குர்ஆன் பிரகடனம் செய்தது. இந்தச் சுதந்திரத்தைக் கொடுத்தது குர்ஆன்தான். ‘தெளிவாகக் கூறிவிடும். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்’  (அத்தியாயம் 18 அல்கஹ்ஃப் 29)

அரசாங்கமும் ஆட்சியதிகாரமும் மதீனாவில் முஸ்லிம்கள் வசமான போது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது :  ‘மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை’ (அத்தியாயம் 2 அல்பகறா 256)

இதுதான் இஸ்லாமிய ஆட்சி. இஸ்லாமிய அரசாங்கம் எப்படி இருக்கும் என்று கேட்கின்றார்கள். சொல்லுங்கள், இஸ்லாமிய அரசாங்கம் இப்படித்தான் இருக்கும். மத விவகாரத்தில் எந்தவொரு மனிதருக்கும் எத்தகைய நிர்ப்பந்தமும் இருக்காது. எவர் மீதும் எந்த விதமான அழுத்தமும் இருக்காது.

‘மார்க்கத்தை மேற்கொள்வதில் யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இனி எவர் தாஃகூத்தை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் திட்டமாக, மிகப் பலமான பிடிமானத்தைப் பற்றிக்கொண்டவராவார். அது என்றுமே அறுந்துவிடாது.’ (அத்தியாயம் 2 அல்பகறா 256)

ஆக, எது சத்தியம், எது ஷைத்தானின் வழி என்கிற விவரம் தெள்ளத்தெளிவாகப் பிரித்து அறிவிக்கப்பட்டு விட்டது. இனி எந்த வழியை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்கின்ற சுதந்திரமும் உரிமையும் மனிதர்கள் அனைவருக்கும் உண்டு என குர்ஆன் அறிவித்துவிட்டது.

நண்பர்களே! இது இஸ்லாம் தருகின்ற சுதந்திரம். இஸ்லாம் தருகின்ற உரிமை. அரசியல் அமைப்புச் சட்டமும் இதற்கு அனுமதி அளிக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அரசியல் அமைப்புச் சட்டம் இரண்டாம்பட்சமே. விரும்புகின்ற மார்க்கத்தை ஏற்கின்ற உரிமை உங்களின் பிறப்புரிமையாகும். இந்த அனுமதியும் சுதந்திரமும் உரிமையும் இறைவனால் வழங்கப்பட்டவையாகும். இறைவனின் தூதரால் அருளப்பட்டவையாகும். இதனை அரசியல் அமைப்புச் சட்டமும் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த உரிமையைத் தக்க வைப்பது அவசியமாகும்.

நண்பர்களே! இப்போது நான் உங்களிடன் சில கேள்விகளை எழுப்ப விரும்புகின்றேன். உங்களிடம் கேட்காமல் நான் வேறு எவரிடம்தான் அவற்றைக் கேட்பேன்.
உங்களுக்கு இந்தச் சுதந்திரம் கிடைத்திருக்கின்றது. இந்த சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
என்றாலும் உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். இதனை என் பிள்ளைகளிடம் கேட்கவில்லையெனில் யாரிடம் தான் இதனைக் கேட்பேன்?  சொல்லுங்கள். உங்களுக்குக் கிடைத்துள்ள இந்தச் சுதந்திரத்தின்படி செயல்படுகின்றீர்களா?
இந்தச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்த்து நில்லுங்கள். இது உங்களின் பிறப்புரிமை என்று சொல்லுங்கள். அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை என்று சொல்லுங்கள். எல்லா நிலைகளிலும் இதனைப் பாதுகாப்பதற்காகக் களத்தில் நில்லுங்கள்.
என்றாலும் உங்களிடம் ஒன்றைக் கேட்பேன். என்னுடைய பிள்ளைகளிடம் அல்லாமல் வேறு எவரிடம்தான் நான் கேட்பேன்? என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான். ‘சொல்லுங்கள், இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கின்றீர்களா?’

அல்லாஹ்வின் நல்லடியார்கள் எத்தகையவர்கள்? குர்ஆன் அழகாக விவரிக்கின்றது. அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். அவர்களின் உடல் மட்டுமல்ல உள்ளமும் அல்லாஹ்வின் முன்னால் பணிந்துவிடுகின்றது. அவர்கள் ஜகாத்தை வழங்குவார்கள். ஹஜ் செய்வார்கள். நேரிய வழியில் நிற்பார்கள். அவர்கள் நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பார்கள். அவர்களின் ஒழுக்கத்தைக் குறித்து எவரும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாத அளவுக்கு அப்பழுக்கற்ற நடத்தையை மேற்கொள்வார்கள் என்றெல்லாம் குர்ஆன் அவர்களைக் குறித்துச் சொல்கின்றது.

இன்னும் சொல்லப்போனால், ‘அவர்கள் தங்களின் மானத்தையும் கற்பையும் பாதுகாப்பார்கள்’ என்றும் குர்ஆன் மக்கா மாநகரத்தில் பிரகடனம் செய்தது. அதாவது அவர்கள் பெரும் செல்வத்தையும் கருவூலத்தையும் பாதுகாப்பதைப் போன்று தங்களின் மானத்தைப் பாதுகாப்பார்கள். அதனை அவர்கள் மிகப் பெரும் சொத்தாக, முதலீடாகத்தான் நினைத்தார்கள் என அது அறிவித்தது. அந்த இளைஞர்களுக்கு நம்முடைய உயிர் அர்ப்பணமாகட்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் மக்கா மாநகரத்தில் ஒரே ஒரு இளைஞன் மீதும் எவராலும் ‘இவர் மானத்தைக் காப்பவராக இல்லை’ எனக் குற்றம் சுமத்த இயலாத அளவுக்கு அவர்கள் அப்பழுக்கற்ற நடத்தை கொண்டவர்களாய் மிளிர்ந்தார்கள்.
இதுதான் நல்லொழுக்கம்! இதுதான் நடத்தை! ‘தங்களின் மானத்தை மிகப்பெரும் சொத்தாக, கருவூலமாகக் கருதி அதனைப் பாதுகாப்பவர்கள்தாம் அல்லாஹ்வின் உண்மையான அடியார்கள்’ என அடியார்களைக் குறித்து நீங்கள் சொல்கின்றீர்களே, அதற்கு நேர்மாறாக இன்னாருடைய நடத்தை இருக்கின்றதே, இன்னார் தம்முடைய அண்டை வீட்டில் இருந்த பெண்ணைச் சீண்டினார் என்றோ, இன்னார் முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்றோ ஒரே ஒருவரால் கூட ஆட்சேபிக்க இயலவில்லை. அந்த அளவுக்கு அந்த அடியார்களின் நடத்தை அப்பழுக்கற்றதாய் இருந்தது. என்னுடைய அன்பர்களே!  அது போன்ற அப்பழுக்கற்ற நடத்தையைக் கொண்டவர்களாய் நீங்களும் மாறுங்கள். அத்தகைய நல்லொழுக்கத்தைக் கடைபிடியுங்கள்.

அல்லாஹ்வின் நல்லடியார்கள் எப்படிப்பட்டவர்கள் எனில் வயதான பெற்றோரிடம் அவர்கள் ‘சீ!’ என்றுகூட சொல்ல மாட்டார்கள் என்றே குர்ஆன் கூறுகின்றது. திருமணம் ஆனவுடன் அவர்களின் அணுகுமுறை மாறிவிட்டது என்கிற நிலைமை இருக்கலாகாது என்றே குர்ஆன் எதிர்பார்க்கின்றது. ‘உண்மையிலேயே நாம் இப்படிப்பட்டவர்களாய்த்தாம் இருக்கின்றோமா?’ என்பதுதான் என்னுடைய கேள்வி. கல்யாணத்துக்குப் பிறகு நம்முடைய பெற்றோருடன் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோமா?

‘அவர்களுடன் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர். மேலும், அவர்களிடம் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! மேலும் பணிவுடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்துகொள்வீராக (அத்தியாயம் 16 பனூ இஸ்ராயீல் 23-24) என்றே குர்ஆன் போதிக்கின்றது.
அதாவது எப்படி பறவை தன்னுடைய சிறகை சுருக்கிக் கொண்டு தரையில் இறங்கி அடங்கியொடுங்கி பணிந்து போகின்றதோ அவ்வாறு அவர்களிடம் பணிவுடன் இருங்கள். பறக்கத் தெரியும் என சிறகுகளை விரித்துக்கொண்டு அவர்களுக்கு முன்னால் மிடுக்கைக் காட்டாதீர்கள். அதற்கு மாறாக அவர்களுக்கு முன்னால் பணிந்துவிடுங்கள் என்றே குர்ஆன் கூறுகின்றது. ‘நம்முடைய பெற்றோருடனான நம்முடைய அணுகுமுறை இப்படித்தான் இருக்கின்றதா?’ என்பதுதான் என்னுடைய கேள்வி. நாம் அனைவரும் இந்தக் ÷ காணத்தில் நம்மை நாமே ஆய்வு செய்ய வேண்டும். முதலில் என்னை நானே நான் ஆய்வு செய்ய வேண்டும். என்னுடைய பெற்றோர் இப்போது இல்லை. அவர்கள் இருந்த போது நான் அவர்களுடன் எப்படி நடந்துகொண்டேன்? இந்தக் கோணத்தில் நாம் அனைவருமே நம்மை நாமே ஆய்வு செய்ய வேண்டும். மக்காவில் இந்த வசனங்கள் அருளப்பட்ட போது ஒரே ஒருவர்கூட ‘என்னுடைய பிள்ளை இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு நேர்மாறாக நடந்துகொள்கின்றாரே’ என முறையிடவில்லை.

இதே போன்று ஷரீஅத் விவகாரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஷரீஅத்தின் படிச் செயல்பட வேண்டும் என்று குர்ஆன் ஆணையிடுகின்றது. ஷரீஅத்தின் படிச் செயல்படுவதற்கு அரசியல் அமைப்புச் சட்டமும் உங்களை அனுமதிக்கின்றது. ஷரீஅத்தின் படி செயல்படுங்கள். இல்லையேல் வழிகெட்டுப் போவீர்கள் என குர்ஆன் எச்சரிக்கின்றது. இன்றைய அரசாங்கமோ ஷரீஅத்தின் மீது கை வைக்கத் துணிந்திருக்கின்றது. இந்த நிலையில் ஷரீஅத்துக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றீர்கள். ஆனால் ஷரீஅத்தின் படி நடக்கின்றீர்களா  என்பதுதான் என்னுடைய கேள்வி. மனைவியுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என ஷரீஅத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதோ அவ்வாறு நாம் நடந்துகொள்கின்றோமா? குர்ஆனின் போதனைக்கு இயைந்து போவதாய் உங்களின் நடத்தை இருக்கின்றதா? நீங்கள் எதனை உண்கின்றீர்களோ, அதனையே உங்களின் மனைவிக்கும் ஊட்டுங்கள். நீங்கள் எதனை உடுத்துகின்றீர்களோ அதனையே உங்களின் மனைவிக்கும் உடுத்துங்கள் என்றே நபிகளார்(ஸல்) ஆணையிட்டிருக்கின்றார்கள். நாம் அப்படித்தான் நடந்து கொள்கின்றோமா? நம்முடைய வீட்டின் நிலைமை இப்படித்தான் இருக்கின்றதா? ‘உங்களில் எவர் தம் மனைவி மக்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்கின்றாரோ அவர்தான் உங்களில் சிறந்தவர்’ என நபிகளார்(ஸல்) அறிவுறுத்தியிருக்கின்றார்கள். உலகத்தாரின் பார்வையில் நல்லவர்களாய் ஆகிவிடுவது எளிது. ஆனால் மனைவி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமமானது. நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘நான் என்னுடைய வீட்டாருடன் நல்ல முறையில் நடந்துகொள்கின்றேன். என்னைப் போன்றே நீங்களும் நடந்துகொள்ளுங்கள்’.

எனவே எந்த ஷரீஅத்துக்காக நீங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றீர்களோ அந்த ஷரீஅத்தின் படி முதலில் நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். ‘எங்களுக்கு இன்னும் திருமணமே நடக்கவில்லையே’ என நீங்கள் சொல்லலாம். திருமணம் நடக்கும். இன்னும் வெவ்வேறு நிலைமைகளையும் நீங்கள் எதிர்கொள்ளத்தான் போகின்றீர்கள். என்ன ஆனாலும் சரி, ஷரீஅத்தின்படி வாழ்ந்து நடமாடும் இஸ்லாமாக நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டாமா?

இறுதியாக ஒன்றைச் சொல்வேன். இன்றையக் காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக மிகப் பெரும் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. விதவிதமாக அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அவற்றை ஆண்மையுடன் எதிர்கொள்ளுங்கள். என்றாலும் ‘இஸ்லாம் அமைதிமார்க்கமாகும். கருணையும் பரிவும் நிறைந்த மார்க்கமாகும். உலக மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்கின்ற மார்க்கமாகும்’ என்கிற செய்தியை சொல்லாலும் செயலாலும் உலக மக்களுக்கு எடுத்துரைப்பது உங்களின் - என்னுடைய இந்த இளவல்களின் - பொறுப்பாகும். இந்தப் பணியை உங்களைப் போன்ற மாணவர்களால்தான் செய்ய இயலும். ‘நீங்கள் சித்திரிப்பதைப் போன்றதல்ல இஸ்லாம். அதற்கு மாறாக உங்களுக்கும் எங்களுக்கும் ஒட்டுமொத்த உலக மக்களின் நலனுக்கும் அமைதிக்கும் துணை நிற்பதுதான் இஸ்லாம்’ என உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

‘அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்தின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது). தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்.’ (அத்தியாயம் 10 யூனுஸ் 25)

அல்லாஹ் உங்களை சுவனத்தின் பக்கம் அழைக்கின்றான். நரகத்திலிருந்து காப்பாற்றவே விரும்புகின்றான். இந்தச் செய்தியை மக்களுக்கு எடுத்துரையுங்கள். நீங்கள் மாணவர்களாய் - பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் - இருக்கின்றீர்கள். உங்களால்தான் இந்தச் செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியும். இதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக இருக்கின்றன. அல்லாஹ்வின் மார்க்கம் உலகம் முழுவதும் பரவுவதற்காகவே வந்துள்ளது. பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு நிலைமைகளைக் கடந்து இந்த மார்க்கம் உங்களிடமும் என்னிடமும் வந்துள்ளது. இதனை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது, இதன் பக்கம் மக்களை அழைப்பது இப்போது நம்முடைய கடமையாகும்.

இறுதி ஹஜ்ஜின்போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களைப் பார்த்து அன்பு நபிகளார்(ஸல்), ‘இங்கு இருப்பவர்கள்  இங்கு இல்லாதவர்களிடம் இறைவனின் இந்தச் செய்தியை எடுத்துரையுங்கள்’ என்று அறிவுறுத்தினார்கள். இஸ்லாத்தின் மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்ட பிறகு அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ‘அதுதான் நபிகளாரின் இந்த உம்மத்துக்கான இறுதி வசிய்யத்’ என்கின்றார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி). இந்த வசிய்யத்தின் படி நீங்கள் செயல்பட்டாக வேண்டும்.

இந்த மார்க்கம் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமானது. உலக மக்களுக்கான வழிகாட்டுதல்தான் இது. உலக மக்கள் அனைவருக்கும் பாதையைக் காண்பிப்பது உங்களின் பணியாகும். இதற்காகத் தான் குர்ஆன் அருளப்பட்டது. நண்பர்களே!  இந்தப் பணிக்காக நீங்கள் கச்சை கட்டிக் கொண்டு ஆயத்தமாகிவிடுங்கள். அதன் பிறகு பாருங்கள். உலகின் வரைபடமே மாறிவிடும். நீங்கள் மாறிவிட்டீர்களெனில் திண்ணமாக உலகமும் மாறிவிடும். இதற்காக அசாதாரணமான தியாகத்தை நீங்கள் தர வேண்டியிருக்கும்.

இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கின்றேன். இரவு பத்து மணியைத் தாண்டிய பிறகும் பொறுமையுடன் என்னுடைய பேச்சைக் கேட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் சொன்னதன்படி நடப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. இதன் படி நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணர்த்துகின்ற செய்தியை நான் எதிர்பார்த்து இருப்பேன்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

- எஸ்.ஐ.ஓ மாநாட்டில் பிப்ரவரி 24 அன்று இரவு அமீரே ஜமாஅத் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...