Pages

Sunday, November 13, 2011

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரியின் ஆதங்கம்


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடங்கி அறுப-தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அறிவு, சிந்தனை, செயல் என பல்வேறு களங்களில் அது நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளது. இந்த நீண்ட பயணம் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி: சித்தாந்தக் களத்தில் ஜமாஅத் ஊழியர்கள் அடைய வேண்டிய படித்தரத்தை இன்று வரை எட்டவேயில்லை.

ஜமாஅத் ஊழியர்களில் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதரர்கள் மத்தியில் அழைப்புப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஊழியர்களும் சரி, முஸ்லிம் சமுதாயத்தின் சீர்திருத்தத்திலும் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டிருக்கின்ற ஊழியர்களும் சரி,  சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயலாற்றுகின்ற ஊழியர்களும் சரி, நாட்டு நடப்பு, தேசப் பிரச்னைகள் தொடர்பான விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கின்ற ஊழியர்களும் சரி - எல்லாருமே அறிவுக்களத்தில் பின்தங்கியவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

நாட்டுநடப்பிலும் அன்றாட பிரச்னைகளிலும் நல்ல விஷய ஞானத்தைக் கொண்டிருக்கின்றவருக்கு இந்திய மதங்கள் பற்றிய ஞானம் இல்லை. ஏதாவதொரு துறையில் நல்ல தேர்ச்சி பெற்றவருக்கோ மார்க்கப் புலமை இல்லை.

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பணியாற்றுகின்றவர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு விதங்களில் பயிற்சி தரப்படுவதால் சித்தாந்த பயிற்சி முகாம், சிந்தனைப் பட்டறை என பல்வேறு நிலைகளை அவர்கள் கடந்து வந்திருப்பதால் அவர்களுக்கு இந்திய மதங்களில் சிலவற்றைக் குறித்து சுருக்கமான அறிமுகம் கிடைத்துவிடுகின்றது. ஆனால் அவர்களில் எவருக்குமே எந்தவொரு மதத்தைக் குறித்தும் விரிவான, ஆழமான ஞானம் இல்லை.

இன்ன மதத்தைக் குறித்து இன்னாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதனைக் குறித்து வேறு எவரிடமும் விசாரிக்க வேண்டிய தேவை இருக்காது எனச் சொல்கின்ற அளவுக்கு நம்மில் எத்தனை வல்லுநர்கள் உருவாகி இருக்கின்றார்கள்?

உண்மையென்னவெனில் சிந்தனைப் பட்டறைகளிலும் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றதால் இவர்களுக்கு இந்திய மதங்களைக் குறித்து ஒரளவுக்கு அறிமுகம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், இந்த மதங்களின் நூல்களை வாசிப்பதற்கும், வரலாற்றை அறிந்துக் கொள்வதற்கும் இவர்கள் மெனக்கெடுவதில்லை. அந்தச் சுருக்கமான அறிமுகத்தை வைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிவிடுகின்றார்கள். அவற்றைக் குறித்து அறிவதற்கும் நூல்களை வாசிப்பதற்கும் நேரமும் ஒதுக்குவதில்லை; அவகாசமும் கிடைப்பதில்லை.

நாம் வாழ்கின்ற நாடு எந்த அளவுக்குப் பரந்து விரிந்த நாடு. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் வல்லுநர்களும்  தேர்ச்சி பெற்ற திறமையாளர்களும் கொட்டிக் கிடக்கின்ற நாடு இது.
எல்லாத் துறைகளிலும் பெரும் பெரும் படிப்பாளிகளும் சூரப்புலிகளும் நிறைந்துள்ள நாடு இது. 

இந்தப் பின்னணியில் நம்முடைய இயக்கத்திலும் வல்லுநர்களும் ஆற்றல்வாய்ந்தவர்களும் நிறைந்திருக்க வேண்டாமா என்கிற கவலை எனக்குள் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு. சிலசமயம் பேருருவம் எடுத்து என்னுடைய தூக்கத்தைப் பறிப்பதுமுண்டு.

நம்மில் சிலராவது வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்த வல்லுநர்களாக மலர வேண்டாமா?

நம்மில் சிலராவது புத்த மதத்திற்கு அத்தாரிட்டி இவர் எனச் சொல்கின்ற அளவுக்கு புத்த மதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டாமா?

நம்மில் சிலராவது சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டாமா?

பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம், உபநிஷத்துகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

இவ்வாறு இந்த மதங்களில் ஆழ்ந்த புலமை பெற்று குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் ஒளியில் அவற்றை விமர்சனமும் ஆய்வும் செய்கின்ற அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் நம்மில் உருவாக வேண்டாமா?

இஸ்லாமிய இயக்கத்தின் தற்போதைய நூல்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நூல்களில் மேற்கத்திய சிந்தனைகள், சித்தாந்தங்கள் மீதான விமர்சனத்தைப் பார்க்க முடியும். நாத்திகம், கம்யூனிஸம், முதலாளித்துவம் போன்றவை பற்றிய விவாதங்களைப் பார்க்க முடியும். ஜனநாயகம், மதச்சார்பின்மை குறித்தும் இந்த நூல்கள் பேசுகின்றன.
ஆனால் இந்தியாவில் இருக்கின்ற மதங்கள், இந்தியப் பாரம்பர்யங்கள், பழக்கவழக்கங்கள், மாண்புகள் பற்றி இந்த நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளதா?

எங்காவது ஏதாவதொரு பொருளில் இவற்றைப் பற்றிய மேலோட்டமான விவாதத்தை மட்டுமே பார்க்க முடியும். மௌலானா அவர்களின் ‘இஸ்லாமிய பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளும் உட்கூறுகளும்’ என்கிற நூலில் இந்து மதத்தின் சில நம்பிக்கைகள் குறித்து மேலோட்டமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. ‘அல்ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூலில் போர் தொடர்பாக இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள நடைமுறைகள், நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் பணியாற்றுவதுதான் நம்முடைய நோக்கமெனில் இந்து மதம் குறித்து நல்ல முறையிலும் ஆழமாகவும் வாசித்து விளங்கியிருப்பது இன்றியமையாத-தாகும். இந்து மதம் மட்டுமல்லாமல் சீக்கிய மதம், புத்த மதம், ஜைன மதம் போன்றவற்றையும் நல்ல முறையில் ஆய்வு செய்திருப்பது அவசியமாகும்.

‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ விரிவுரையில் கிறிஸ்துவ மதம் குறித்து எழுதப்பட்டிருக்கின்ற குறிப்புகள் அனைத்துமே மத்தியக் காலத்திலும், நவீனக் காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள், என்ஸைக்ளோபிடியா பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவையே.

சென்ற நூற்றாண்டில் கிறிஸ்துவ அறிஞர்களும் யூத அறிஞர்களும் பைபிள் மீது செய்துள்ள விமர்சனங்களிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் கிறிஸ்துவ, யூத வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்தும் பயனீட்டப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிஞர் என்னதான் மிகப்பெரும் மார்க்க மறுமலர்ச்சியாளராக, சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக முத்திரை பதித்து தனித்து நின்றாலும் எல்லாக் கலைகளிலும் தனித்-தேர்ச்சியையும் நுணுக்கமான விவரங்களையும் கவனித்து ஆய்கின்ற செயல்திறனையும் அவரிடம் எதிர்பார்க்க முடியாது அல்லவா?

இப்போது நமக்கு இருக்கின்ற மிகப் பெரும் தேவை என்னவெனில்  அறிவாற்றலும் ஆராய்ச்சித்திறனும் கொண்ட, இஸ்லாத்தின் கோட்பாடுகளிலும் ஆழமான புலமை கொண்ட சில இளவல்கள் இந்திய மதங்கள், அவற்-றின் வரலாறு, பாரம்பர்யங்கள், தற்போதைய சமூக விழைவுகள், சமூகச் செயல்பாடுகள் போன்றவற்றை ஆழ-மாக ஆராய வேண்டும்; இஸ்லாத்தை இந்தியப் பின்னணியில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பணி கனமான பணி. என்றாலும் மிகவும் அவசியமான பணி என்றே நான் கருதுகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன் அலிகரில் சென்டர் ஃபார் ரிலிஜியஸ் ஸ்டடீஸ் என்கிற பெயரில் கல்வி நிறுவனத்தை நான் தொடங்கியதற்குப் பின்புலமாக இருந்தது இந்தச் சிந்தனைதான்.

தில்லி திரும்பிய பிறகு பல்வேறு பணிகளில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அவற்றில் ஒன்றுதான் இந்த சென்டரும். 2005 ஆகஸ்டு மாதத்தில் இதனைத் தொடங்கினேன்.

இதிலிருந்து சில இளைஞர்கள் சொக்கத்தங்கங்களாக வெளியாகி இருக்கின்றார்கள். அவர்களிடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

உங்களுடைய கேள்விக்கு ஒரு கோணத்தில் இதுவரை பதிலளித்துவிட்டேன். இப்போது உங்களுடைய கேள்வி-யின் இன்னொரு பரிமாணத்திற்கு வருகின்றேன். அதாவது என்னுடைய பங்கு என்ன? நான் என்ன செய்திருக்கின்றேன்?

ஒரு மூன்று துறைகளில் எனக்குத் தனி ஈடுபாடு உண்டு. அதில் தொடக்கத்திலிருந்தே கவனம் செலுத்தி வருகின்றேன். முதலாவதாக மதங்களுக்கிடையே ஒப்பாய்வு, இரண்டாவதாக, சூஃபிஸம், மூன்றாவதாக ஒழுக்கக் கல்வி.

ஒழுக்கக் கல்வி தொடர்பாக நான் சில நூல்களை எழுதியிருக்கின்றேன். ஒழுக்க மாண்புகள் தொடர்பான கல்வியில் தனி முத்திரை பதித்த ஒழுக்கவியலாளரும் புகழ் பெற்ற அறிஞருமான முஸ்கவியா குறித்து நான் மேற்கொண்ட ஆய்வை (முனைவர் பட்டத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு அது) அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது.
ஒழுக்கவியல் குறித்து புகழ்பெற்ற தத்துவ அறிஞர் அபுன் னஸர் ஃபாராபி அவர்களின் சிந்தனைகள் என்கிற தலைப்பில் ஒரு நூல் எழுதி இருக்கின்றேன். இப்னு சீனா, முக்ஸில்லா போன்றோரின் ஒழுக்கவியல் போதனைகள் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன்.

சூஃபிஸம் குறித்து Sufism and Shariah என்கிற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் முஜத்தித் அல்ஃபெ ஸானி ஷேக் அஹ்மத் சர்ஹிந்தி அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள் தொடர்பான ஓர் ஆய்வு நூல் ஆகும். என்றாலும் அதில் இஸ்லாமிய சூஃபிஸத்தின் உட்கூறுகளை வரையறுப்பதற்கு முயன்றிருக்கின்றேன். உர்தூ மொழியிலும் இதன் மொழிபெயர்ப்பு வெளியாகி அறிவுக்களங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிறுவப்பட்டு 67 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்தியாவில் இஸ்லாமிய இயக்கத்தின் நிலைமை குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர்  டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி  அளித்த பேட்டியிலிருந்து

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...