அருமைச் சகோதரர் ஷேக் தாவூத் பாய் இறைவனிடம் மீண்டுவிட்டார் என்கிற செய்தி இன்று காலை (21 ஜூலை 2017) இடியாய் என்னைத் தாக்கியது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.
நான் இதனை இஸ்லாமிய இயக்கத்தின் மௌன உழைப்பாளிகளில் ஒருவரின் மரணமாக, அவ்வளவாகப் பேசப்படாத அப்பழுக்கில்லாத, உளத்தூய்மை நிறைந்த செயல் வீரரின் மரணமாகப் பார்க்கவில்லை. அதற்கு மாறாக இஸ்லாமிய இயக்கத்துக்காக விலைமதிப்பு மிக்க இரத்தினங்களையும் வைரங்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்த தொழிற்சாலை ஒன்று இழுத்து மூடப்பட்டதாகவே பார்க்கின்றேன்.
தமிழ்நாட்டில் திருச்சி மாநகரில் வாழ்ந்து வந்தவர்தாம் ஷேக் தாவூத். அவர் மெத்தப் படித்த படிப்பாளி அல்லர். அலட்டிக் கொள்ளாத, ஆரவாரம் இல்லாத இயக்க ஊழியராகத்தான் அவர் இருந்தார். எஸ்.ஐ.ஓவிலிருந்து ஒய்வு பெற்ற போது அந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சியில் ஜமாஅத்தும் முழுமையாக நிறுவப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் திருச்சியில் மிகவும் பின்தங்கிய வறுமையும் ஏழ்மையும் நிறைந்த பகுதியில் அவர் தம்முடைய பணியைத் தொடங்கினார். குடிசைகளில் வசித்து வந்த, கைவண்டிகளில் வணிகம் செய்து வந்த ஏழை எளிய மக்களின் பிள்ளைகளை இலக்காக்கி பாலர் சங்கத்தை உருவாக்கி பணியாற்றத் தொடங்கினார், அவர். அந்தப் பிள்ளைகளிடம் அவர் எந்த அளவுக்கு அளப்பரிய பாசத்தையும் அன்பையும் கொட்டினார் எனில் அவர்கள் அவரின் அன்புக்கு அடிமை ஆகிவிட்டார்கள். ஷேக் சாகிபும் அந்தப் பிள்ளைகளின் கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்தார். கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டார். மேலும் மார்க்கக் கல்வியையும் விழிப்பு உணர்வையும்கக ஊட்டிவிட்டு அந்த இளவல்களின் இதயங்களில் இஸ்லாமிய உணர்வுகளை மீட்டெடுத்தார்.
நான் எஸ்.ஐ.ஓவின் அகில இந்தியத் தலைவராகப் பொறுப்பேற்ற போது திருச்சிக்கு முதல் முறையாகச் சென்றேன். அந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சியில் ஷேக் சாகிப் நடத்தி வந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்டேன். ஏட்டறிவோ, பட்டறிவோ இல்லாத ஏழை பெற்றோரின் பிள்ளைகள் - அவருடைய சீடர்கள் - அப்போது முதுகலைப் பட்டப் படிப்பும், பொறியியலும் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் திருச்சி எஸ்.ஐ.ஓவை வெற்றிச் சிகரங்களில் ஏற்றி அமர்த்தி விட்டிருந்தார்கள். அவர்கள் அப்போது அங்கு செய்து வந்த பணிகளைப் பார்த்து விட்டு தில்லி திரும்பிய நான் ரஃபீக் மன்ஜில் இதழில் ‘இந்தியத் திருநாட்டின் முன்மாதிரி கிளையாக திருச்சி கிளை’ என்கிற தலைப்பில் அனைத்தையும் விரிவாக எழுதினேன். (இதன் மொழிபெயர்ப்பு சமரசத்திலும் வெளியானது).
இன்றைய நிலைமை என்னவெனில் ஷேக் தாவூத் பாயின் அந்தத் தொழிற்சாலையிலிருந்து ஒரு டஜனுக்கும் அதிகமான பிஹெச்டி பட்டம் பெற்ற முனைவர்கள் வெளியாகிவிட்டிருக்கின்றார்
ஒரு சாமானியராகத் தோற்றம் தருகின்ற இந்த ஒற்றை மனிதரின் தொலைநோக்கும் உயிரைக் கொடுத்துப் பணியாற்றும் வித்தையும் இன்று எத்தகைய அற்புதத்தை நிகழ்த்தி இருக்கின்றது எனில், இன்று இஸ்லாமிய இயக்க வானில் ஒளி வீசுகின்ற தாரகைகளைக் கொண்ட ஒரு நட்சத்திர மண்டலத்தையே தவழ விட்டு சாதனை படைத்திருக்கின்றார், அவர். இன்னும் எத்தனையெத்தனை ஏழை, எளிய குடும்பங்களின் சித்திரத்தை அவர் மாற்றியமைத்துவிட்டிருக்கின
எந்தவொரு மக்தபின் (பயிற்சிப் பாசறையின்) ஆசானும் உண்மையில் மனித ஆன்மாக்களைப் பண்படுத்தி வார்த்தெடுக்கின்ற தொழிற்சாலையாகத்தான் இருப்பார். இவ்வாறு மனித ஆன்மாக்களைப் பண்படுத்தி வார்த்தெடுக்கின்ற அழகான தொழிற்சாலையை நான் என்னுடைய வாழ்நாளில் ஷேக் பாயின் எளிமையும் இனிமையும் நிறைந்த அமர்வுகளில் கண்கூடாகப் பார்த்தேன். அவருடைய அவையும் அமர்வுகளும் எந்நேரமும் மாணவர்களாலும் இலட்சியக் கனலுடன் இயங்குகின்ற இளைஞர்களாலும்தாம் நிறைந்திருக்கும்.
எல்லாம் வல்ல இறைவன் ஷேக் பாயின் சேவைகளை ஏற்றுக்கொள்வானாக! டாக்டர் அஜீஸ், டாக்டர் இப்ராஹீம் மற்றும் அவர்களைப் போன்ற பிற சகோதரர்கள் ஆற்றுகின்ற சேவைகளை ஷேக் பாயின் கணக்கில் ஸதகாயே ஜாரியாவாக - நிலையாக நன்மைகளைத் தந்துகொண்டே இருப்பவையாய் ஆக்குவானாக!
ஆமீன்.
- சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி
துணைத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.
No comments:
Post a Comment