Pages

Saturday, January 23, 2016

சாதிய அமைப்பு குறித்து மௌலானா மௌதூதி(ரஹ்)



இந்தியாவின் இன்றைய சமூகக் கட்டமைப்பு எண்ணற்ற அடுக்குகளைக் கொண்டதாய்க் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சமூக அடுக்குகளும் எத்தகையதாய் அடுக்கப்பட்டிருக்கின்றனவெனில் இவற்றில் சில சமூகக் குழுக்கள் மேலோங்கி நிற்கின்றனர். வேறு சில சமூகக் குழுக்களோ அவர்களுக்கு அடங்கியவர்களாய் இருக்கின்றனர். இந்த சமூகப் பிரிவுகளுக்கு இடையில் பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு நிறுவனமயமாக்கப்பட்டிருக்கின்றது. பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு பற்றிய இந்தக் கருத்தோட்டம் மிக மிக ஆழமாக வேரூன்றியுள்ளது.

அதற்கும் மேலாக ‘மறுபிறப்பு’ பற்றிய தத்துவம் இந்த நம்பிக்கையை இன்னும் அதிகமாக வலுவூட்டியிருக்கின்றது. சமூகக் கட்டமைப்பில் கீழ் அடுக்குகளில் முடக்கப்பட்டவர்களிடம் ‘தாம் அடங்கியிருப்பதற்கே படைக்கப்பட்டவர்கள்; முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளின் தவிர்க்க முடியாத விளைவுதான் இது; எனவே இதனை எந்த நிலையிலும் சகித்துக்கொண்டே ஆக வேண்டும்; இந்த நிலையை மாற்றிவிட முயல்வது வீண்’ என்கிற அடிமை சிந்தனை ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது.

ஆதிக்க சமுதாயத்தரிடமோ, ‘தாம் பிறந்ததே இந்த அடிமைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத்தாம். உயர்வும், சிறப்பும் தமக்கு மட்டுமே உரித்தானவை. முந்தைய பிறவியில் தாம் செய்த நற்கருமங்களின் காரணத்தினால்தான் தங்களுக்கு இந்தச் சிறப்பும் உயர்வும் கிடைத்திருக்கின்றன; இவற்றை மாற்றவோ, திருத்தவோ முற்படுவது இறைச்சட்டங்களுக்கு எதிரானது ஆகும்’ என்கிற நம்பிக்கை அழுத்தமாகப் பதியப்பட்டிருக்கின்றது.

இவ்வாறாக, இந்த சமூகக் கட்டமைப்பில் உயர் அடுக்கில் இருக்கின்ற ஒவ்வொரு சமூகத்தாரும் கீழ் அடுக்கில் இருக்கின்ற சமூகத்தாரின் தலைமீது கால் வைத்தவாறு நின்றுக்கொண்டும் அதனைத் தேய்த்து நசுக்கிக் கொண்டும் இருக்கின்றார்கள். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பற்றிய இந்தச் சிந்தனையும் பாகுபாடுகளும் சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. கால் வைக்கின்ற இடங்களில் எல்லாம் அநீதியும் அக்கிரமும் கணக்குவழக்கின்றிக் காணப்படுகின்றன. நாகரிகத்தின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளிலும்கூட ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. உணவு உண்ணும் போதும் சரி, நீர் அருந்தும்போதும் சரி, நடையுடை பாவனைகளிலும் சரி, திருமணம், மரணம் போன்ற சுகதுக்கத்துக்கான சந்தர்ப்பங்களிலும் சரி அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் இந்தப் பாகுபாடுகள் நிறைந்திருக்கின்றன. அதற்கும் மேலாக இந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் பிறரை இழிவுபடுத்துகின்ற, கேவலமாகக் கருதுகின்ற போக்கும் நிலை பெற்று விட்டுள்ளது.

இந்த இழிவான போக்கு எந்த அளவுக்கு முற்றிப் போய் விட்டிருக்கின்றது எனில் தாம் உடுத்துவதைப் போன்ற ஆடைகளையும், தாம் அணிவதைப் போன்ற அணிகலன்களையும் தாழ்ந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உடுத்துவதையோ, அணிவதையோ உயர் அடுக்கில் இருக்கின்ற சமுதாயத்தாரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. சில நாள்களுக்கு முன்பு இராஜஸ்தானில் இதனைக் கண்கூடாகப் பார்த்தோம்.

அங்கு சம்மார் என்கிற கீழ்சாதியைச் சேர்ந்த மக்கள் போர் காரணமாக பணம் படைத்தவர்களாய் ஆகிவிட்டனர். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வந்துவிட்டிருந்தனர். இந்தச் செழிப்பான மக்கள் தங்களின் பெண்களுக்கு ஆடைகளையும் அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்த்தனர்.

இது ஜாட்களையும்(Jats) குஜ்ஜார்களையும்(Gujjars) உசுப்பிவிட்டது.

எங்களுடைய பெண்கள் அணிவதைப் போன்ற ஆடைகளையும் அணிகலன்களையும் இந்த சம்மார்கள் எப்படி தங்களின் பெண்களுக்கு அணிவிக்கலாம் என்று கொதித்தெழுந்து பெரும் ஆர்ப்பாட்டங்களைச் செய்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் இந்தக் குஜ்ஜார்களையும் ஜாட்களையும் இராஜ்புத்கள் என்கிற உயர் சாதியினர் இந்தக் காரணத்தைச் சொல்லியே கேவலப்படுத்தி வந்தார்கள் என்பது தனிக் கதை.

இராஜ்புத்களின் நடத்தை தருகின்ற கசப்பை அனுபவித்து வந்த நிலையிலும் இந்தக் குஜ்ஜார்களும் ஜாட்களும் சம்மார்களுடன் அதே போன்று நடந்துக்கொண்டார்கள். சமூகப் படிநிலைகளில் எங்களுக்கு இணையாக இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி வந்து அமர்ந்து விடலாம் என இவர்கள் ஆத்திரப்பட்டார்கள்.

இவ்வாறாக, எந்த இழிநிலையிலிருந்து மேலே எழுந்துவிட அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பினார்களோ அதே இழிநிலையில் மீண்டும் அவர்களைத் தள்ளிவிடவே இவர்கள் ஒன்றுசேர்ந்து ஓங்கிக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பொருளாதாரக் கட்டமைப்பும் பெரும் அளவில் மேற்படி சமூகக் கட்டமைப்பின் வரிசைமுறையில்தான் நிறுவப்பட்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அந்தச் சமூகக் கட்டமைப்பின் கொடூரமான அம்சங்களைக் கூர்மைப்படுத்துவதும் விதத்தில்தாம் நவீன முதலாளித்துவத்தின் தனித்தன்மைகள் கூட்டுச் சேர்ந்துவிட்டுள்ளன.

தொன்மையான சித்தாந்தங்கள், மெய்யியல் பேசும் தத்துவங்கள் ஆகியவற்றின் துணையுடன் எந்தச் சமூகக் குழுக்கள் சமூகப் படிநிலைகளின் மேல் அடுக்குகளில் நிலையாகக் குடியமர்ந்து விட்டிருந்தனவோ அவர்கள் நாட்டின் நாகரிக வாழ்வில் உயர்ந்த சிறப்பிடங்களையும் மேன்மையையும் தமதாக்கியவாறு தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதோடு நின்றுவிடவில்லை. அதற்கும் மேலாக, அதனுடன் நாட்டின் செல்வ வளங்கள், வசதி வாய்ப்புகள் ஆகியவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றைத் தமதாக்கிக் கொண்டார்கள்; சமூகப் படிநிலைகளின் கீழ் அடுக்குகளில் இருப்பவர்களையோ மேல் அடுக்குகளில் இருக்கின்ற மக்களுக்குத் தொண்டூழியம் செய்தும் கூலி வேலை செய்தும் பிழைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற கேவலமான நிலைமையில் தள்ளிவிட்டார்கள்.

இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏதிலிகள், பாட்டாளிகள் போன்றோர் மீது இழைக்கப்படுகின்ற அநியாயங்கள், அக்கிரமங்கள், உரிமைப் பறிப்புகள் போன்றவற்றைக் கணக்கிடுவதும் சிரமமானதே. அது மட்டுமல்ல மேல் அடுக்குகளில் வாழ்கின்ற மக்கள் தம்முடைய வட்டத்திற்குள்ளும் பல்வேறு விதமான அக்கிரங்களிலும் உரிமைப்பறிப்புகளிலும் கொடுமைகளிலும் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக செல்வச்செழிப்புமிக்கவர்களின் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டே போக, செல்வவளம் இல்லாமல் மோசமான நிலையில் வாழ்வை ஓட்டுகின்ற எளியவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போயிற்று.

இன்னும் சொல்லப்போனால் இவர்களிடம் நடைமுறையில் இருந்த வட்டிப் பணத்தை உண்ணுகின்ற பழக்கமும், குடும்பச் சொத்துகளைக் கூட்டாக நிர்வகிக்கின்ற கூட்டுக் குடும்ப வழிமுறையும் (Joint Family System) மூத்த மகனயே ஒட்டுமொத்த சொத்துக்கும் ஒரே வாரிசாக அறிவிக்கின்ற தலைப்பிள்ளைக்கான வாரிசு சட்டமும்(Law of Primogeniture) இன்னும் இவை போன்ற எண்ணற்ற பழக்கவழக்கங்களும் செல்வத்தையும் செல்வத்தை உண்டுபண்ணுகின்ற வழிவகைகளையும் ஒரு சிலரிடம் குவித்துவிடுபவையாயும், பெரும்பாலான மக்களுக்கு எத்தகைய வழிவகையையும் அளிக்காமல் தடுத்து மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைமைக்கு அவர்களைத் தள்ளிவிடுபவையாயும் இருக்கின்றன. இந்த நடைமுறைகளின் பயனாக எந்த மக்களிடம் செல்வவளம் குவிந்திருந்ததோ அவர்கள் இப்போது நவீன முதலாளித்துவ வழிமுறைகளை மேற்கொண்டு நாட்டின் தொழில், வணிகம், பொருளாதாரம் ஆகிய அனைத்தின் மீதும் தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டார்கள்; அந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.

இப்போது கட்டமைக்கப்படுகின்ற அரசியல் அமைப்பின் அடிப்படையான ஆவணத்தில் மக்களாட்சி, சமூக நீதி(Social Justice), சமத்துவம், எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகள்  (Equal Opportunities) போன்ற வானளாவியக் கருத்தோட்டங்கள் இம்மியளவுகூட அழுக்கு படியாத, மாசற்ற, மனத்தை மயக்குகின்ற சொற்களில் ஏட்டளவில் எழுதப்பட்டு வருகின்றன. இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.

ஆனால் இந்தக் கருத்தோட்டங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் இவற்றுக்கு மதிப்பே தவிர, இந்த வெற்று வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது வெளிப்படை.

நடைமுறை வாழ்வில் நாம் அன்றாடம் பார்ப்பது என்ன?

இந்த அரசியல் அமைப்பை உருவாக்குதல், வடிவமைத்தல், கட்டமைத்தல், நடைமுறைப்படுத்தல் ஆகிய அனைத்துப் பணிகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது யார்?

இன்றைய சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் உயர்வான படிக்கட்டுகளில் வீற்றிருக்கின்ற - இல்லை பிறந்திருக்கின்ற சமூகக் குழுவினர்தாம் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த சமூகக் குழுவினருக்கு அனைத்தையும் கொடுத்திருக்கின்றான். ஆனால் பெரிய மனத்தையும், விரிந்த பார்வையையும், அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற தீரத்தையும் ஏனோ இவர்களுக்குத் தரவே இல்லை. இவர்களின் குறுகிய மனப்பான்மை இன்று வரையிலும் இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்புகளையே தந்து வந்துள்ளது. இவர்களின் இந்த வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கின்ற போது இவர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்காகப் பயன்படுத்துவார்கள் என எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது.

ஆக, கசப்பு உணர்வும் கொடுமைக்காளான வலிகளும் நிறைந்ததாய்த்தான் இன்றைய இந்த நிலைமைகள் இருக்கின்றன. இந்த வலியையும் துன்பத்தையும் நாட்டின் சாமான்ய மனிதர்கள் மிகக் கடுமையாக உணர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது வரை இனவாத போதை இந்தக் கசப்புணர்வை பெரும் அளவில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. நாட்டின் நிர்வாகம் நம்முடைய கைகளில் வந்துவிடுமேயானால் இந்த அநீதிகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கையில்தான் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நாட்டின் ஆட்சியதிகாரம் உண்மையிலேயே நாட்டு மக்கள் வசம் மாற்றப்படுகின்ற போது அந்த அதிகாரங்களைக் கொண்டு நாட்டில் சமூக நீதி உண்மையிலேயே நிலைநிறுத்துகின்ற பணியை மேற்கொள்வது எப்படி என்கிற அடிப்படைக் கேள்வி பேருருவம் எடுப்பதை நீண்டக்காலத்திற்குத் தள்ளிப் போட முடியாது.

இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற கடிவாளங்கள் இன்று எந்த மக்களிடம் கைமாறிக்கொண்டிருக்கின்றனவோ அவர்கள் இந்துக் கலாச்சாரத்தின் முந்தையப் பாரம்பர்யங்களை மேற்கத்திய, அய்ரோப்பிய, அமெரிக்க வாழ்க்கை முறையுடன் கோத்துவிடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமேயானால் இவர்கள் ஒரு வகையான போலி மக்களாட்சியையும், ஒரு மேம்போக்கான சமத்துவத்தையும், நீதியை நிலைநாட்டுவது போன்ற மாயத் தோற்றத்தையும் நிலைநிறுத்துவதில் திண்ணமாக வெற்றி பெற்றுவிடுவார்கள்.

ஆனால் அந்தப் போலியான தோற்றங்களுக்குப் பின்னால் வழக்கம்போல அதே அநீதிகளும், அதே வஞ்சகங்களும், அதே பாகுபாடுகளும், அதே பிரிவுகளும் இன்று இருக்கின்ற அதே சூட்டுடனும் தகிப்புடனும் நிலைத்து நிற்கும்.

ஏனெனில் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கின்ற போக்கும், சமூகப் பாகுபாடுகளும் இந்துக் கலாச்சாரத்தின் இரத்த நாளங்களில் ஊறிப் போய்க் கிடக்கின்றவை ஆகும். அவை இரத்தத்தில் கலந்திருக்கின்ற நிலையில் உண்மையான மக்களாட்சியை நிலைநிறுத்துவது இயலாத காரியம் ஆகும். அதனுடன் மேற்கத்திய சித்தாந்தங்களைக் கோத்துவிடுவதால் மிதமிஞ்சி என்ன கிடைத்துவிடப் போகின்றது? மேல்தட்டு மக்களின் ஆதிக்கத்துக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் தேர்தல்கள் மூலமாகவும் அவற்றில் பெறப்படுகின்ற வாக்குகள் மூலமாகவும் சட்டரீதியான அங்கீகாரமும் அதிகாரப்பூர்வமான அனுமதியும்தாம் கிடைத்துவிடும் என்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் கிடைத்துவிடப் போவதில்லை.

இதனால்தான் இவர்களின் இந்தச் செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் சாமான்ய மக்கள் சொற்பக் காலத்திலேயே நிராசைக்கும் விரக்திக்கும் ஆளாகிவிடுவார்கள் என்பது உறுதி. இந்த ஆளும் வர்க்கத்தினரால் நீதியை நிலைநாட்ட முடியாமல் போகும்போது விவசாயிகள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், மேல்தட்டு மக்களிலேயே வறிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என ஒட்டுமொத்த இந்திய சாமான்ய மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் நீதமிக்க மாற்று அமைப்புக்காக ஏங்கத் தொடங்கிவிடுவார்கள்; அதற்கான தேடலில் இறங்கிவிடுவார்கள். அந்த நிலை வருவதற்கு நீண்ட நேரமும் பிடிக்காது.

- 26, ஏப்ரல், 1947 சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் தென்னிந்திய மாநாட்டில் அமீரே ஜமாஅத் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையிலிருந்து...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...