அன்புள்ள ரோஹித்..!
அந்த இருள் சூழ்ந்த இரவில் நீ உன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டு உன்னுடைய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ‘உயிரைக் குடிக்கின்ற விபத்தைப்’ (a fatal accident) போன்ற உன்னுடைய வாழ்வை முடித்துக்கொண்ட போது மனுவும் அவனுடைய அடிபொடிகளும் அரை டிரவுஸர்களும் கெக்கலித்துக் கைகொட்டி மகிழ்ந்திருப்பார்கள்.
ஆனாலும், என் சகோதரனே கவலைப்படாதே!
Azeez Luthfullah அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் என்கிற இந்திய முஸ்லிமாகிய நான் உறுதியளிக்கின்றேன்.
பிறப்பின் அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு கேவலப்படுத்துகின்ற கொடுமை இனி இந்த மண்ணில் அரங்கேறாது..!
அறிவுக்குச் சற்றும் பொருந்தாத, காட்டுமிராண்டித்தனமான அந்த நம்பிக்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் இனி இந்த மண்ணில் இடம் இருக்காது!
கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று குமுறிக் கேட்கும். ஏன்?
சாதியின் அடிப்படையில் இந்திய இளைஞன் ஏன் ஒதுக்கப்பட வேண்டும்? ஏன்? ஏன்?
கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று உரத்துக் கேட்கும். எது?
இரத்தமும் சதையுமாக ஒரே மாதிரியாகப் பிறக்கின்ற மனிதர்களை உயர்சாதி என்றும் கீழ்சாதி என்றும் வெவ்வேறு அடுக்குகளில் அமர்த்தி பக்கச்சார்புடன் நடப்பதற்கு அங்கீகாரம் அளிக்கின்ற மதம் எது? மனிதர்களைப் பிரிக்கின்ற அந்தக் கலாச்சாரம் எது? மனிதர்களை இழிவாகப் பார்க்கின்ற அந்த சித்தாந்தம் எது?
கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று ஆர்ப்பரித்துக் கேட்கும். எங்கே?
இந்தியர்களாகப் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையும் சமமான வாய்ப்பும் தரப்படும் என்கிற அரசியல் அமைப்புச் சட்டத்தின் உத்தரவாதம் எங்கே? எங்கே?
கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று கதறிக் கேட்கும். எப்படி?
நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டிய ஜனநாயகத் தூண்களே சாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பக்கச்சார்புடன் நடந்துக் கொள்ளத் தொடங்கியது எப்படி? எப்படி?
கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று நிமிர்ந்துக் கேட்கும். யார்?
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைக் கூறு போட்டு உயர்ந்த சாதி என்றும் தாழ்ந்த சாதி என்றும் வகைப்படுத்துகின்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? கீழ்வெண்மணியிலிருந்து ஹைதராபாத் வரை தொடர்கின்ற இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்துவது யார்? யார்?
கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று ஆசையுடன் கேட்கும். எப்போது?
அன்பு, இணக்கம், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், சமூக நீதி, பாரபட்சமற்ற நீதி ஆகியவற்றின் அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற கனவை நனவாக்குவது எப்போது? எப்போது?
கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! இந்தத் தேசம் மனுவுக்கும் அவனுடைய அடிபொடிகளுக்கும் சொந்தமானது அல்ல.
நம்முடைய தேசச் சிற்பிகள் அப்படி சொன்னதே இல்லை. நம்முடைய தேசத் தந்தை அதனை எந்த நாளிலும் ஏற்றுக்கொண்டதே இல்லை.
இந்தத் தேசம் நம்முடையது. - உன்னுடையது. என்னுடையது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு இந்துவுக்கும் முஸ்லிமுக்கும் கிறித்துவருக்கும் தலித்துக்கும் சீக்கியருக்கும் ஜெயினுக்கும், மார்வாடிக்கும் நாத்திகருக்கும் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது.
இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிளவுபடுத்துகின்ற ஈனர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை.
தலித்கள் என்றும் பிராமணர்கள் என்றும் இந்த சாதி என்றும் அந்த சாதி என்றும் கூறு போட்டு பார்க்கின்ற அற்பர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை.
இது எங்களுடைய தேசம்.
இதனை தீயவர்களிடம் பறிகொடுக்க மாட்டோம்.
டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
No comments:
Post a Comment