Dr Abdul Huq Ansari |
The following is the translation of the article written by Parvaz Rahmani in Dawat dated 8-10 October2012 issue. It conveys an inspiring insight.
டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி(ரஹ்)
டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். மார்ககப் பற்றும் சமூகத் தொண்டார்வமும் நிறைந்தவராய் மிளிர்ந்தார். இதனால் மாணவப் பருவத்திலேயே இஸ்லாமிய இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் கல்லூரிப் படிப்பை முடித்தார். மேலும் படித்தார். முன்னேறிக் கொண்டே போனார். தர்ஸ்காஹ் இஸ்லாமியில் ஆலிம் பட்டம் பெற்றார். தொடர்ந்து அரபி மொழியில் இளங்கலைப் பட்டமும் ஃபிலாஸஃபியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து அதே துறையில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றார். அதற்கடுத்து அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.டி.எஸ் பட்டமும் பெற்றார். எந்த மார்க்கப் பற்றுடனும் சமூகத்தொண்டார்வத்துடனும் அவர் மாணவப் பருவத்தில் தன்னை இஸ்லாமிய இயக்கத்தில் இணைத்துக் கொண்டாரோ அந்த பற்றும் ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே போனது. அவர் சார்ந்த இயக்கமும் வளர்ந்து கொண்டே போனது. இறுதியில் அவர் அந்த இயக்கத்தின் அகில இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்றார். நான்காண்டுகள் அந்தப் பொறுப்பை வகித்த பிறகு அவர் 2007-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகும் இயக்கத்திற்கான நூல்களை எழுதி வெளியிடுகின்ற பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதே நிலையில் அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் 2012 அக்டோபர் 13 ஆம் தேதியன்று தான் வாழ்நாள் முழுவதும் ஏற்று வந்த நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான திருப்தி உள்ள நிலையில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவருடைய தோழர்களும் உறவினர்களும் அளவற்ற அன்புடனும் வாஞ்சையுடனும் அவரை நல்லடக்கம் செய்தனர்.
மற்றும் கே.எஸ். சுதர்ஸன்
கே.எஸ். சுதர்ஸனும் 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் படிப்பில் முன்னேறிக் கொண்டே போனார். நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற உணர்வு அவருக்குள் மிகைத்திருந்தது. இதனால் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசபக்தி முழக்கங்களால் கவரப்பட்டு அதன் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். படிப்பும் தொடர்ந்தது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பி.ஈ பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றார். நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர் எந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாரோ அந்த அமைப்பின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் நடை முறைப்படுத்துவதில் முனைப்புடன் மும்முரமாகச் செயலாற்றி வந்தார்.ஒரு கட்டத்தில் அதன் உச்சக்கட்ட பொறுப்பை சர்சங்சாலக் - அகில இந்தியத் தலைவர் பொறுப்பையும் ஏற்றார். ஒன்பது ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு 2009-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் பதவி விலகியதிலிருந்து எந்த இயக்கப் பணியிலும் ஈடுபடாமல் வாசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 15 செப்டம்பர், 2012 அன்று அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் தன்னுடைய இறப்புக்கு இருபத்தேழு நாள்களுக்கு முன்பு அவர் தொடர்பாக வெளியான செய்தி ஒன்று பல்வேறு ஊகங்களுக்கும் எண்ணங்களுக்கும் வித்திட்டது. 20 ஆகஸ்ட் 2012 அன்று பெருநாள் பண்டிகையின் போது போபாலில் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவோ (அல்லது முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கோ) அவர் தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குப் போக விரும்பினார்.
இருவருக்குமிடையில் இருக்கின்ற ஒற்றுமை சுவையானது...! இருவரும் சந்தித்த முடிவோ முற்றிலும் மாறுபட்டது..!
இவ்விரு தலைவர்களின் வாழ்வில் சில விஷயங்களில் காணப்படுகின்ற ஒற்றுமை சுவையானவை. இவ்விருவருமே முற்றிலும் மாறுபட்ட நேர் எதிரான இயக்கங்களில் தம்மை வாழ்நாள் முழுவதும் இணைத்துக் கொண்டிருந்தனர். இருவருமே தாம் சார்ந்திருந்த இயக்கத்தின் அகில இந்தியத் தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற அளவுக்கு வளர்ந்தனர். ஆனால் இருவரின் இறுதி முடிவில் அடிப்படையான வேற்றுமையைப் பார்க்க முடிகின்றது. டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி அவர்களுக்கு தம்முடைய நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான மனநிறைவு இருந்தது. அவை தொடர்பான எண்ணத் தெளிவுடனும் முழுமையான திருப்தியுடனுமே அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்திருக்க வேண்டும். இயக்கத்திற்கான நூல்களை எழுதித் தர வேண்டும் என்கிற தன்னுடைய நாட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாத குறை மட்டுமே அவரை வாட்டியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, சுதர்ஸன் அவர்கள் தம்முடைய கடைசி காலத்தில் ஒருவிதமான வேதனைக்கும் கவலைக்கும் ஆளாகி இருந்தார். குறைந்தபட்சம் இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்களைக் குறித்தும் தான் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்து அவர் பெரிதும் அதிருப்தியுற்றவராய், அதனை மீள்பார்வை செய்கின்றவராய் இருந்துவந்திருக்கின்றார். அவருடைய தோழர்கள் சொல்வதைப் போல் அவருடைய மனநிலை சரியில்லாமல் போய்விட்டது என்பதை சரி என எடுத்துக் கொண்டாலும் அவருடைய உள்மனத்துக்குள் ஏதோவொன்று நடந்திருக்க வேண்டும். அதுதான் அவரை தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லத் தூண்டியிருக்க வேண்டும். 16 செப்டம்பர், 2012 தேதிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியில் அவர் திருக்குர்ஆனை ஆழ்ந்து வாசித்து வந்தார் என்கிற தகவல் இடம் பெற்றுள்ளது.
எது எப்படியோ இந்த இரண்டு ஆளுமைகளின் வாழ்வில் எது நடக்க வேண்டுமோ அது நடந்து முடிந்துவிட்டது. இனி ஆகப் போவதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனின் கையில்..!
பர்வேஸ் ரஹ்மானி
தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
தஅவத் 8-10 அக்டோபர் 2012 இதழ்
No comments:
Post a Comment