Pages

Tuesday, February 15, 2011

உறுப்பினர் மாநாட்டு நினைவுகள்...!


சிந்திக்கச் செய்த கேள்வி!
"ஒரு மூதாட்டியின் சுமையை சுமந்து அவளை வீடு வரை கொண்டு சேர்க்கின்ற திராணி இல்லாதவரால் கடினமான வாக்காக இருக்கின்ற வேதத்தின் அழைப்பை சுமக்கின்ற தகுதி எங்கிருந்து வரும்?"
- மக்கள் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தி ஜமாஅத் அகில இந்தியத் துணைத் தலைவர் பேராசிரியர் சித்தீக் ஹஸன்எழுப்பியக் கேள்வி இன்றும் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது.


பயமுறுத்திய டாக்டர்!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்திலும் அரசியல் தரகர்கள் ஊடுருவி விடுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஜமாஅத்தின் உள்ளேயும் அரசியல் தரகர்கள் உருவாகி விட்டாலும் வியப்பில்லை."
- ஆட்சியதிகார அரசியலில் ஜமாஅத் ஈடுபடக் கூடாது என வாதிட்டபோது ஜார்க்கண்ட் மாநிலத் தலைவர் டாக்டர் ஹஸன் ரஜாசொன்ன போது பயம் அடிவயிற்றைக் கலக்கியது.

தொற்றிக் கொண்ட கவலை!
மாநாட்டில் ஏழாயிரம் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தனர். திரும்பும் திசையெங்கும் வெண்தாடி வேந்தர்கள்தாம்! கருந்தாடி இளவல்கள் குறைவாகத்தான் தென்பட்டனர். அதிலும் சிலர் அட்டக்கருப்பான தாடி கொண்டிருந்தது வேறு விஷயம்! முந்நூறு நானூறு உறுப்பினர்கள்தாம் முப்பது வயதுக்குட்பட்டவர்கள் என்று பொதுச்செயலாளர் தமது அறிக்கையில் சொன்ன தகவல் மனத்துக்குள் சிவப்பு விளக்கை எரியச் செய்து விட்டது.
இது எதனைக் காட்டுகின்றது? இளைஞர்கள் எங்கே போனார்கள்? இந்தக் கவலை சென்னைக்குத் திரும்பிய பிறகும் மீண்டும் மீண்டும் மனத்தை அரித்துக கொண்டே இருக்கின்றது.


அசத்தினார் அத்தியா சித்திகா!
ஆயிரக்கணக்கான ஆண்கள் மத்தியில் எழுச்சி உரை ஆற்றி அசத்தினார் அத்தியா சித்திகா. மகளிர் அணி அகில இந்தியத் தலைவி. அவருடைய உரையை அதே வீச்சில் மலையாளத்தில் மொழிபெயர்த்து மொழி தெரியாதவர்களையும் கட்டிப் போட்டுவிட்டார் ஜொஹ்ரா ஃபாத்திமா.இருவருக்கும் முதுபெரும் இஸ்லாமிய அறிஞரும் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி புத்தகங்களை பரிசுகளாக வழங்கி ஊக்குவித்தார்.
ஆயிரத்து ஐநூறு பெண் உறுப்பினர்கள் பங்கேற்றது இயக்க வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். கேரளத்திலும் ஆந்திரத்திலும்தான் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் ஆண்-பெண் விகிதத்தின் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழகத்துக்கு முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்யப் போகின்றோம்?
அடித்தட்டு மக்கள் மத்தியில் செய்தியைச் சமர்ப்பிக்கின்ற திறனும் ஆர்வமும் கொண்ட ஊழியர்கள் நிறைய இருக்கின்றார்கள். ஆனால், உயர் அதிகாரிகள், படித்தவர்கள், வல்லுநர்கள் மத்தியில் அழைப்பை விடுக்கின்ற திறமையும் வல்லமையும் கொண்ட ஊழியர்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றார்கள். இத்தகைய ஊழியர்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். " -
அகில இந்திய அழைப்பியல் துறைச் செயலாளர் மௌலானா முஹம்மத் இக்பால் முல்லாஹ் தம்முடைய உரையில் வெளிப்படுத்திய கவலை இது. உண்மையிலேயே மிகப் பெரிய சவால்தான். இயக்கம் எப்படி எதிர்கொள்ளப் போகின்றது? என்ன செய்யப் போகின்றோம்?


நினைவில் நின்ற காட்சி!
மாநாடு முடிந்த பிறகு நான்காம் நாள் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவித்திருந்தார்கள். முதல் வரிசையில் இடம் பிடித்து அமர வேண்டும் என்பதற்காக எட்டரை மணிக்கே மாநாட்டுத் திடலில் ஆஜராகிவிட்டோம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு சரியாக எட்டு ஐம்பத்தைந்துக்கு இரண்டு பேரின் தோள்களில் கைகளை ஊன்றிக் கொண்டு மேடையில் வந்து அமர்ந்துவிட்டார் மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ். 94 வயது முதியவர் அவர். அறுபதாண்டுகளுக்கும் மேலாக இயக்கப் பணிகளில் ஊறித் திளைத்தவர். அவருடைய ஆர்வத்தைக் கண்டு கண்கள் பனிக்க திரும்பிப் பார்க்கின்றேன். பாதி அரங்கம் காலியாக இருந்தது
நிகழ்ச்சி ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக நீடிக்க தம்முடைய இருக்கையிலிருந்து எழாமல் கடைசி வரை பங்கேற்ற அவர் எங்கே? நாம் எங்கே? நேரந்தவறாமையும் ஒழுங்கும் கட்டுப்பாடும் மிக்க அத்தகைய ஊழியர்களை எங்கிருந்து கொண்டு வரப் போகின்றோம்?

மறக்க முடியாத அனுபவம்!
மாநாட்டின் இறுதி நாளில் உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொள்கின்ற வித்தியாசமான நிகழ்ச்சி நடந்தது. இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்கின்ற போது உறுப்பினர் படிவத்தில் இடம் பெறுகின்ற வாசகங்கள்தாம். அதனை ஒவ்வொரு வாக்கியமாக அமீரே ஜமாஅத் வாசிக்க, அவரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அவற்றை உரத்து முழங்கி உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொண்டனர். மறக்க முடியாத அனுபவமாக இது அமைந்து விட்டது
உறுதிமொழியை ஏற்கின்ற போது உறுப்பினர்களில் பலரும் கண் கலங்கினர். சிலர் தேம்பித் தேம்பி அழுதனர். உணர்வுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு குரலில் தோய்த்தெடுத்து உறுதியுடனும் நிதானத்துடனும் அகில இந்தியத் தலைவர் உறுதிமொழி எடுத்தது தலைமையின் கம்பீரத்தைப் பறைசாற்றியது.


இணை அமர்வுகள் தந்த செய்தி
பஞ்சாயத்துத் தேர்தல்கள், இஸ்லாமியப் பொருளாதாரம், சிவில் உரிமைகள், உலமாப் பெருமக்களும் இஸ்லாமிய இயக்கமும், இலக்கியமும் இயக்கமும், பெண்கள் மத்தியில் இயக்கப் பணி என ஒரே நேரத்தில் பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. அனைத்தையும் விட பஞ்சாயத்துத் தேர்தல்கள் பற்றிய அமர்வில்தான் மூவாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனை அடுத்து இஸ்லாமிய வங்கியியல் பற்றிய அமர்வில் அதிக எண்ணிக்கையில் (ஆயிரத்து ஐநூறு) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இலக்கியமும் இயக்கமும் அமர்வில்தான் மிகக் குறைவான அளவில் (நூறு) உறுப்பினர்கள் இருந்தனர்.
- இலக்கியத்தை விட அரசியலுக்கு ஈர்ப்பு அதிகம் என்பதா? மக்களின் முன்னுரிமைகள் மாறிவிட்டன என்பதா? இது ஜமாஅத் எந்தத் திசையில் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.

யோசிக்க வைத்த கவிதை!
எங்காவது இறைவனின் இல்லத்தை மூன்றாகப் பகுக்கப்படுவதைப் பார்த்திருக்கின்றீர்களா? வரலாற்றில் இத்தகைய கொடுமை எங்காவது நடந்ததுண்டா?இதுவும் உண்மைதான்; அதுவும் உண்மைதான் இப்படி எங்காவது நடப்பதுண்டா?" 
- பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து இன்திஸார் நயீம் பாடிய கவிதைகளின் வரிகள் இவை. ஒவ்வொரு அடியாக அவர் தொடுக்க மனத்தில் பரவசமும் சோகமும் சிரிப்பும் கண்ணீரும் மாறி மாறி வந்தன. பின்னிட்டார் இன்திஸார்!

2 comments:

Roomil said...

masha allah
arumaiyana oru kootta arikkai paditha niraivu 4 naatkal ijthimaavil irunthathu poal unarvu
nanri sakotharare

Medical Service said...

Great information! I appreciate that you have put it in this simple and more understandable form. Honestly, my head hurts from all the technical terms that the government and insurance companies put in print.

Related Posts Plugin for WordPress, Blogger...