தமிழகத்தில் சில நாள்களாக சாதிக் கலவரங்களும் சாதி உணர்வால் உந்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களும் வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
தென் தமிழகத்தில் வெடித்த தீ இன்று வட தமிழகத்திலும் பரவியிருக்கின்றது. தர்மபுரியில் 200 ஏழைகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு கிராமமே காலியாகி இருக்கின்றது.
இதில் வேதனையான முரண்பாடு என்னவெனில் இன்று ஒருவர் மற்றவரை வெட்டிச் சாய்க்கத் துடிக்கின்ற இரு தரப்பினருமே சாதிக் கட்டமைப்பில் அடித்தட்டு நிலையில் நிற்பவர்களே. மனுதர்மத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சாதிக் கட்டமைப்பில் கடைகோடியில் நிற்கின்ற மக்களே ஒருவர் மற்றவரைத் தாக்கிக் கொண்டிருப்பதும் திட்டிக் கொண்டிருப்பதும் வேதனையான முரண் ஆகும். சமூக விடுதலைக்கான போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மோசமான பின்னடைவாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளால், இதயத்தைக் கிழிக்கின்ற சுடுசொற்களால் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் பிற சாதியினரைத் திட்டுகின்ற போக்கும் அதிகரித்துவிட்டுள்ளது.
இவர்கள் அவர்களைத் திட்டுகின்றார்கள். அவர்கள் இவர்களைத் திட்டுகின்றார்கள். அதே சமயத்தில் சாதிய சிந்தனை முற்றாக ஒழிக்கப் பட வேண்டும் என்று விரும்புகின்றவர்களும் ஏராளமானோர் இருக்கின்றார்கள். இவர்கள் சாதிக் கட்டமைப்பின் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபடவே விரும்புகின்றார்கள்.
சாதிக்கு எதிராக அரசாங்கமும் பலவாறு முயன்று வருகின்றது. பெரியார் முதல் பாரதியார் வரை, காந்தி முதல் அம்பேத்கர் வரை சாதி வேறுபாடுகள் ஒழிக்கப் பட வேண்டும் என்றே விரும்பி வந்துள்ளார்கள். தமிழகத்தில் சாதி ஒழிப்புக்காக மக்கள் இயக்கங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
- என்றாலும் சாதி ஏன் ஒழியவில்லை?
- மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் கூறு போடுகின்ற கொடுமை ஏன் அகலவில்லை?
- மற்ற சாதிக்காரனைத் தாழ்வாகப் பார்க்கின்ற அவலம் ஏன் களையப்படவில்லை?
- இந்தச் சூழல் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன?
- முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
பிளவுபட்டுக் கிடக்கின்ற மக்களை ஒன்றிணைக்க எத்தகைய வழிமுறை கையாளப்பட வேண்டும்?இணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவது எப்படி?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடை தருவதாய் சாதி ஒழிய.. சமத்துவம் மலர..! என்கிற நூல் ஜொலிக்கின்றது.
இந்த நூலை நாம் அதிகமதிகமாய் பரவலாக்க வேண்டும். நம்முடைய நண்பர்களுக்கு, தோழர்களுக்கும் தர வேண்டும். அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோருக்கும் இந்த நூல் தரப்பட வேண்டும்.
சாதி ஒழிய.. சமத்துவம் மலர.. என்கிற தலைப்பில் எல்லாத் தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டும்.
சாதிப் பேயை ஒழிப்போம். சமத்துவம் சமைப்போம். இணக்கம் காப்போம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
This book can be purchased online Here
No comments:
Post a Comment