Pages

Wednesday, October 19, 2011

மாற்றம் மலர முத்தான குறிப்புகள்..!


நாம் எல்லாருமே மாற்றத்தை  விரும்புகின்றோம். சமூக சீர்திருத்தம், தனிநபர் சீர்திருத்தம், குடும்பங்களின் சீர்திருத்தம் என்று அதிகமாகப் பேசவும் செய்கின்றோம். மாற்றத்தை விரும்பாதவர் இல்லை.

மனித மனங்களை ஈர்ப்பதில் மாற்றத்துக்கு இணையானது வேறெதுவுமில்லை. நடையுடை, சிகை அலங்காரம், பாவனை, பேஷன் போன்றவற்றில் மாற்றம் அறிமுகப்படுத்தப் படும்போது அது  கூட பெரும்பாலான மக்களால் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
ஸ்டெப் கட் புகழ்பெற்று இருந்த காலம் போய் ஸிஸர்ஸ் கட் மீண்டும் மக்கள் ஆதரவு பெற்று விட்டது போன்ற அற்ப மாற்றங்களை விடுங்கள்.

நாம் ஒரு பேரியக்கத்தைச் சார்ந்திருக்கின்றோம். சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவது தான் நம்முடைய இலட்சியம் என்று ஓங்கி முழங்குகின்றோம். குடும்பம், அரசியல், சமூகம், பொருளாதாரம், சந்தை, கலை, இலக்கியம் என வாழ்வின் எல்லா துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என ஓயாமல் பேசுகின்றோம்.

“நான் மாற வேண்டும்; இந்த உலகத்தை மாற்ற வேண்டும்” என கேட்டாலே மெய்சிலிர்க்கச் செய்கின்ற, ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஊட்டுகின்ற முழக்கங்களை உரத்து முழங்குவதில் நாம் என்றைக்குமே சளைத்தது கிடையாது.

என்றாலும் நாம் அடைய விரும்புகின்ற மாற்றம் தூரத்து வானவில்லாக போக்கு காட்டிக் கொண்டே இருக்கின்றதே என்கிற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம்.

இல்லை. அந்த அளவுக்கு நான் நிராசை அடையவில்லை. மாற்றம் படிப்படியாக மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றது என்று சொல்பவரும் உங்களில் இருக்கலாம்.

மாற்றம் காண்பதில் வெற்றி கிட்ட நாம் என்ன செய்ய வேண்டும்? எங்கு தவறிழைக்கின்றோம்? எதில் கவனம் செலுத்த வேண்டும்?

மாற்றத்தை விரும்புகின்றவர்களுக்கு அழகிய நினைவூட்டலாக இங்கே சில குறிப்புகள் தரப்படுகின்றன.
இளகிய மனம் வேண்டும்
முதல் தேவை இளகிய மனமும் மென்மையான அணுகுமுறையும் தான்.
இளகிய மனம் இல்லாமல் மாற்றத்தைக் கொண்டு வரவே முடியாது. பூட்டிக் கிடக்கின்ற இதயங்களைத் திறக்கின்ற திறவுகோல் என்ன தெரியுமா?

மென்மை, கனிவு, நலம் நாடுகின்ற உணர்வு போன்றவைதான். அன்பு தான் மாபெரும் திறவுகோல். அதன் மூலம் எத்தகைய பூட்டையும் திறந்து விட முடியும். அன்பும் கனிவும் மிக்க அணுகுமுறையால் இதயத்தில் படிந்துள்ள துருவைக் கழுவி அகற்றி விட முடியும்.

எனக்கு ஐந்து குழந்தைகள். பத்து வயதிலிருந்து ஒரு மாதம் வரை வயதுள்ள குழந்தைகள். அதட்டினால் வேலை நடக்காது. அன்பாகச் சொன்னால் தான். என்னுடைய குழந்தைகள் எனக்குக் கற்றுத் தந்த பாடம் இது.

உங்களுடைய அறிவுரையை பிறர் ஏற்று நடக்க வேண்டுமா? முதலில் யாரிடம் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றீர்களோ, அவரை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அன்புக்கு அடிமையாகாதவர் எவரும் இல்லை.

மனித மனம் பூ போன்றது. அதனைத் தென்றல் வந்து தொட்டுச் சென்றால்தான் அது மலரும். பூவின் மீது எவராவது வெந்நீர் கொட்டுவார்களா?  மனித மனம் கண்ணாடி போன்றது. எளிதில் உடைந்துவிடும். கண்ணாடியை ஓங்கிக் குத்தினால் யாருக்கு என்ன இலாபம்?

மௌலானா சிராஜுல் ஹஸன் அவர்களைக் குறித்து உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவராகப் பல்லாண்டுகள் சேவையாற்றியவர். அவர் அடிக்கடி ஒன்றைச் சொல்வார். கனிவோடும் மென்மையாகவும் இடையே நீண்ட பெருமூச்சு விட்டும் இதயத்தைத் தொடுகின்ற வகையில் அவர் சொன்ன வாசகங்கள் இன்றும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

“பாவங்களை வெறுக்க வேண்டும். பாவிகளை வெறுக்கக் கூடாது. ஒரு மருத்துவரைப் போன்றே நாம் நடந்து கொள்ள வேண்டும். மருத்துவர் நோயை வெறுப்பாரே தவிர, நோயாளியை வெறுக்க மாட்டார். நோயாளியின் உடலில் சீழ் வடிகின்ற, துர்நாற்றம் வீசுகின்ற புண் இருந்தாலும் நோயாளியை கடிந்து கொள்ள மாட்டார். அதனைத் துடைத்து மருந்திட்டு குணப்படுத்துவதில் தான் முனைப்பாக இருப்பார்.”

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் அவை..! பல்லாண்டு கால இயக்க வாழ்வின் அனுபவங்களின் சாரமாக அதனைச் சொல்ல முடியும்.

மற்றவர்களின் குறைகளை, மற்றவர்கள் செய்கின்ற பிழைகளைப் பார்த்து பதற்றப்படுவதால், கோபம் தலைக்கேற வெடித்து திட்டித் தீர்ப்பதால் என்ன ஆகி விடப் போகின்றது? கோபம், எரிச்சல், குரோதம், வெறுப்பு போன்ற
எதிர்மறையான உணர்வுகளுக்கு இம்மியளவு கூட இடம் தராதீர்கள். இவை ஆளுமையையே எரித்தழிக்கின்ற ஆற்றல் படைத்தவை.

அன்பு, மென்மை, கனிவு, பாசம், நேசம் போன்ற இலகுவான உணர்வுகளால் தான் இதயங்களை வெல்ல முடியும்.

அண்ணல் நபிகளாரின் அழகிய முன்மாதிரி என்றென்றும் நம் கண் முன்னால் இருக்க வேண்டும். அண்ணல் நபிகளார்(ஸல்) எந்தக் காலத்திலும் எவருக்கு எதிராகவும் வெறுப்பையோ, குரோதத்தையோ வளர்த்துக் கொண்டதே கிடையாது. கோபப்பட்டதும் கிடையாது. வார்த்தைகள் தடித்துப் பேசியது கிடையாது. சுடுசொற்களை சொன்னது கிடையாது.

அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக, கனிவும் கிருபையும் நிறைந்தவராக, இளகிய உள்ளம் கொண்டவராக, வறட்டுத்தனமான வாதவிவாதங்களுக்கு அப்பாற்பட்டவராகத் தான் அண்ணல் நபிகளார்(ஸல்) ஜொலித்தார். 
பகைவர்களையும் மன்னித்தார். பரந்த மனப்பான்மையும் ஈகைப் பண்பும் கொண்டவராக, மற்றவர்களின் பிழைகளைப் பொறுப்பவராக இருந்தார். தீங்கிழைத்தவர்களுக்கும் நன்மை செய்தார். இதனால் தான் மக்களின் மனங்களை அண்ணல் நபிகளாரால் வெல்ல முடிந்தது.
இலகுவை ஏற்படுத்துங்கள்.

இலகுவை ஏற்படுத்த வேண்டும். மக்களை சிரமத்திலாழ்த்தக் கூடாது.
‘மார்க்கம் எளிதானது. இலகுவை ஏற்படுத்துவதற்காகத் தான் நீர் அனுப்பப்பட்டீர். சிரமத்தைக் கொடுப்பதற்காக அல்ல’ என்றெல்லாம் அண்ணல் நபிகளார்(ஸல்) அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

ஐவேளை தொழுகின்ற பழக்கம் கூட நிலைபெற்றிருக்காத ஒருவரை தஹஜ்ஜுத் தொழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தகுமா?
கணப்பொழுதில் மாற்றம் வந்துவிடாது. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டியெழுப்பப்படவில்லை என்கிற பொருளில் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

இந்த உலகில் யாதொன்றும் உடனுக்குடன் நிகழ்ந்து விடுவதில்லை. மா, பலா, மாதுளம் என எந்தவொரு பழத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இன்று விதையை விதைத்து நாளை பழம் கிடைத்து விடுவதில்லை. முளை விட்டு வளர்ந்து வேர் விட்டுப் படர்ந்து இலை, கிளைகளைப் பரப்பி மரமாகி, பூத்துக் காய்த்து கனிந்து பிறகே பழமாக உதிர்கின்றன. சிறுகீரை சாப்பிட வேண்டுமானாலும் முருங்கைக்காய் குழம்பு வைக்க வேண்டுமானாலும் கூட குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். படிப்படியாக தான் எதுவுமே நடக்கும். படிப்படியாகத் தான் மாற்றம் மலரும்.

கணப்பொழுதில் மாற்றத்தைக் கொண்டு வருவது அணுகுண்டு மட்டுமே. அது அழிவை மட்டுமே ஏற்படுத்தும்.

மார்க்கம் எளிதானது என்பதில் இந்த அம்சமும் அடங்கும். படிப்படியாக தான் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். வர முடியும்.

முதலில் ஒத்த கருத்துள்ள விஷயங்களை பேச வேண்டும். பிறகு மோதலும் கருத்து வேறுபாடும் வெடிப்பதற்கு வாய்ப்பிருக்கின்ற விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் நம்பிக்கை வலுப்பட வேண்டும். பிறகு தான் தொழுகை, மக்கள் சேவை போன்றவற்றின் பக்கம் பார்வை திரும்ப வேண்டும். அதன் பிறகு மார்க்கத்தின் மற்ற கட்டளைகளின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் ஒருவரால் எந்தளவுக்கு சுமக்க முடியுமோ அந்த அளவுக்கே அவர் மீது சுமையை ஏற்ற வேண்டும்.

படிப்படியாக தான் மாற்றம் வரும். அது தான் நிலைத்து இருக்கும்.

நலம் நாடுங்கள்
மற்றவர்களின் நலன் நாட வேண்டும். மற்றவர்களின் பிரச்னைகள், நெருக்கடிகள், பலவீனங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே எதனையும் செய்ய வேண்டும். சொல்ல வேண்டும். இதே போன்று மற்றவர்களின் ஆர்வங்கள், விழைவுகள் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அண்ணல் நபிகளார்(ஸல்) ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த போது குழந்தையின் சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் கிராஅத்தைச் சுருக்கிக் கொள்ளவில்லையா? அந்த நிகழ்வு குறித்து நாம் அதிகமாக பேசத் தானே செய்கின்றோம்.

ஒவ்வொருவருக்கும் அவரவரின் அறிவாற்றல், செயல்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே எந்தவொரு அறிவுரையையும் சொல்ல வேண்டும். செய் என்று ஆர்வமூட்ட  வேண்டும். செய்வார் என்று எதிர்பார்க்க வேண்டும்.

அண்ணல் நபிகளாரின் அழகிய நடைமுறையைப் பார்த்தீர்களா? அண்ணல் நபிகளார்(ஸல்) உமர் பின் கத்தாப்பிடம் வாங்கிய வேலையை அபூ ஹூரைராவிடம் வாங்கியதில்லை. ஜைத் பின் ஸாபித்துக்குக் கொடுத்த பணியில் உஸ்மான் பின் அஃபானை ஈடுபடுத்தியதில்லை. எத்தனையோ கிராமப்புற அரபிகளுக்கு ஒரு சில கட்டளைகளை இட்டதோடு அண்ணல் நபிகளார்(ஸல்) நிறுத்திக் கொள்ளவில்லையா?

எந்நேரமும் அறிவுரை, பயான், சொற்பொழிவு என்று இருத்தலும் கூடாது. வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான கருத்தை எடுத்துரைக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் பேசிப் பேசி வறுத்து எடுத்து விடக் கூடாது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் வியாழக் கிழமை தோறும் மக்களுக்கு அறிவுரை கூறி வந்தார். நாள்தோறும் நல்லவற்றை எடுத்துரையுங்கள் என மக்கள் ஆசைப்பட்டார்கள். “மாட்டேன்” என்று மறுத்துவிட்டார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி). “அறிவுரை பாரமாக ஆகி விடக் கூடாது. அதனால் தான் இடைவெளி விட்டு அறிவுரை கூறுகின்றேன். அண்ணல் நபிகளாரும் இப்படித் தான் எங்களைக் கற்பித்தார்கள். நாங்கள் சடைவு அடைந்து விடக் கூடாது என்பதில் அண்ணல் நபிகளார்(ஸல்) கவனமாக இருந்தார்கள்.” சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்ற வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சின்னச் சின்னப் பிரச்னைகளில் சிக்குண்டுவிடக் கூடாது. கருத்து வேறுபாடுகள் இருக்கின்ற விவகாரங்களில் நம்முடைய கருத்தைத் திணிக்க முயலக் கூடாது. இந்த நோக்கத்துடன் விவாதங்களில் ஈடுபடுவது குற்றம் ஆகும்.

உலகில் குறைகளே இல்லாத மனிதர்களும் இல்லை. நிறைகள் மட்டுமே கொண்ட மனிதர்களும் இல்லை. எல்லாரிடமும் குறைகளும் உண்டு. நிறைகளும் உண்டு. இதனை மறந்து விடக் கூடாது.

குறைகளை மட்டும் பார்த்து, குறைகளை மட்டும் குத்திப் பேசி விமர்சித்து வந்தோமேயானால் எச்சரிக்கை..! நீங்கள் விரும்புகின்ற மாற்றம் வராது. நிறைகளைக் கவனித்து நிறைகளை எடுத்துரைத்து புகழ்ந்து வந்தீர்களானால் குறைகளும் காலப் போக்கில் குறைந்து போவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

இதே போன்று ஒருவர் நல்லவராகவும் இருக்கலாம். கெட்டவராகவும் இருக்கலாம். நல்ல குணங்களின் தொகுப்பாக ஆவதும் எல்லாரையும் ஆக்குவதுதான் நம்முடைய இலக்கு எனில் நம்முடைய வழிமுறையும் நன்மையளிப்பதாக, இதயத்துக்கு ஒத்தடம் அளிப்பதாக இருக்க வேண்டும்.
எல்லாமே இறைவனுக்காக..!
எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றை மறந்து விடக் கூடாது.

மக்களைச் சீர்திருத்துவதற்காக நீங்கள் எதனைச் செய்தாலும், சொற்பொழிவு நிகழ்த்தினாலும், தொடர்புகளை வளர்த்துக் கொண்டாலும், அநீதி, அக்கிரமம் ஆகியவற்றுக்கு எதிராக போராடினாலும், மக்கள் சேவையில் ஈடுபட்டாலும் எல்லாவற்றையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும்.

இறைவனின் நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி என்கிற தவிப்போடு செய்ய வேண்டும். அவனுடைய சுவனம் கிடைக்கும்; பிரம்மாண்டமான மாளிகையும் தோட்டங்களும் நாணும் விழிகளைக் கொண்ட நங்கைகளும் இன்னும் பிற சொகுசு வசதிகளும் கிடைக்கும் என்கிற பேராசை தான் உங்களை இயக்க வேண்டும்.

எந்தவொரு வேலையைச் செய்தாலும் உங்களுடைய பார்வை மனித முகங்களின் மீது குவிந்திருக்கக் கூடாது. கருணையும் கிருபையும் கனிவும் மிக்க இறைவனின் முகத்தின் மீது குவிந்திருக்க வேண்டும். அதில் இனிமை காண வேண்டும். அதற்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
வெளிப் பகட்டு, விளம்பரம், புகழ், பிறர் பாராட்டுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவராக தனித்து நிற்பதற்கு இந்த சிந்தனையும் தெளிவும் உதவும்.

இன்னும் ஒரு படி மேலே சென்று அறிஞர் குர்ரம் முராத் என்ன சொல்கின்றார் தெரியுமா? “நான் புகழ் பெற வேண்டும்; என்னுடைய ஜமாஅத்தின் பணிகள் பேசப்பட வேண்டும்; உலகில் நான் மேற்கொள்கின்ற சீர்திருத்தப் பணி வெற்றி பெற வேண்டும் போன்ற இலக்குகளின் மீது கூட உங்கள் பார்வை குவிந்திருக்கக் கூடாது. அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு இறைவன் மீது உங்களின் பார்வை குவிந்திருக்க வேண்டும்.

இந்த உலகில் எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாமே அழிந்து போகக் கூடியவை. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுகாலம் உண்டு. முடிந்து போகின்ற, அழிந்து போகின்ற பொருள்கள் மீதான மோகத்திலிருந்தும் பற்றுதலிலிருந்தும் விடுபட்டு மேலெழுந்து நின்று அல்லாஹ்வின் மீது பார்வையைக் குவிக்க வேண்டும்.

இந்த பண்பு இல்லாத வரை இறைவன் உங்கள் உழைப்பை ஏற்றுக் கொள்ள மாட்டான். இந்தக் கடினமான பணியில் இடைவிடாமல் ஓயாமல் ஒழியாமல் உங்களால் தொடர்ந்து ஈடுபட முடியாது. போதும் போ! என்று எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு நடையைக் கட்டுகின்ற ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாது. இந்தப் பணியின் சுவையை, உழைப்பின் இனிமையை நுகர முடியாது” என்கிறார் குர்ரம் முராத்.

ஆக, எல்லாமே இறைவனுக்காக...! என்கிற தெளிவு வேண்டும். இறைவனின் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.
கூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” (6 : 165)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...