Pages

Saturday, April 9, 2011

மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ் சாஹிப் மறைவு



முதுபெரும் இஸ்லாமிய இயக்கத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லபாமி ஹிந்த் பேரியக்கத்தின் முன்னாள் அகில இந்தியத் துணைத் தலைவருமான மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ் சாஹிப் 6 ஏப்ரல் 2011 அன்று காலமானார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அவருக்கு வயது 94. மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி காலத்தில் இயக்கத்தில் இணைத்துக் கொண்ட மூத்த இயக்கத் தலைவர் அவர். அவருடைய மறைவுடன் ஒரு யுகம் நிறைவு பெற்றுவிட்டது எனலாம். இயக்கத்தின் தொடக்கக்காலத்திலிருந்து அதன் ஏற்றஇறக்கங்களுடனும் வெற்றி தோல்விகளுடனும் பின்னிப் பிணைந்திருந்தவர் மௌலானா ஷஃபி மூனிஸ்.

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினமே என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தம்முடைய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


உத்திரப் பிரதேசத்தில் ஒரு  கிராமத்தில் பிறந்தவர் அவர். தொடக்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்திருந்தார். அதிலும் சோஷலிஸ கொள்கைகளைப் பேசி வந்த காங்கிரஸ் குழுவினருடன் தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு ஸலஃபி ஆலிமுடன் பழக்கம் ஏற்பட்டது. இவருடைய அறிவுக்கூர்மையையும் சமுதாயச் சிந்தனையையும் உளத்தூய்மையையும் பார்த்த அந்த ஸலஃபி அறிஞர் இந்த இளைஞரை எப்படியாவது கவர வேண்டும் என்கிற எண்ணத்துடன் நெருங்கிப் பழகினார். ஆனாலும் ஷஃபி மூனிஸ் படிகின்ற மாதிரி தெரியாததால் நூல்களைக் கொடுக்கத் தொடங்கினார். அவ்வாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட நூல்களில் ஒன்றுதான் ‘இஸ்லாம் அவ்ர் மௌஜுதா ஸியாஸி கஷ்மகஷ் . இஸ்லாமும் தற்போதைய அரசியல் போராட்டமும்’ என்கிற நூல். மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் எழுதிய நூல் அது. இளைஞர் ஷஃபி மூனிஸின் பார்வையையும் சிந்திக்கும் கோணத்தையும் முற்றாக மாற்றி அமைத்துவிட்டது அந்நூல்.

அந்நூல் படித்து இயக்கப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய ஷஃபி மூனிஸ் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. காஜியாபாத் மாநகர ஜமாஅத் கிளைத்தலைவர், தில்லி மாநகர ஜமாஅத் தலைவர், தில்லி மாநிலத் தலைவர், அந்தக் காலத்து ஹைதராபாத் மாகாணத் தலைவர், மேற்கு உத்திரப்பிரதேச மாநிலத் தலைவர் என அடுத்தடுத்து பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும் அவர் சில காலம் செயலாற்றியிருக்கின்றார். ஜமாஅத்தின் மத்தியப் பிரதிநிதிகள் சபை, மத்திய ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராக பல்லாண்டுகளாக மீண்டும் மீண்டும் தேர்வாகி வந்துள்ளார். தற்போதைய மத்தியப் பிரதிநிதிகள் சபையிலும் அவர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

மௌலானாவுக்கு வயது 94. இறுதி மூச்சு வரை இயக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சத்தியப் போராளிதான் அவர். அவர் ஓர் அறப் போராளியாக, நிர்வாகியாக, இயக்கச் சிந்தனையாளராக, வழிகாட்டியாக தம்முடைய முழு வாழ்வையும் அர்ப்பணித்துவிட்டவர் அவர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத், ஃபாரம் ஃபார் டெமாக்ரஸி அண்டு கம்யூனல் அமிட்டி, தி ஸ்காலர் ஸ்கூல் உட்பட ஏராளமான அமைப்புகளின் உருவாக்கத்தில் அவரும் பெரும் பங்கு வகித்திருக்கின்றார். மௌலானா ஷஃபி மூனிஸ் அவர்களின் நேர்காணல்களை அபூர்வமாகத்தான் படித்திருப்பீர்கள். சமரசத்தில் ஃபாரம் தொடர்பாக நேர்காணல் ஒன்று வந்திருக்கின்றது. அவருடைய செயல்பாடுகள் பற்றிய அறிக்கைகளும் அதிகமாக வெளி உலகுக்குத் தெரிவதில்லை. அவருடைய புகைப்படமும் அதிகமாக பதிவாவதில்லை. என்றாலும் மௌன உழைப்பாளியாக இயக்கப் பணிகளில் இரண்டறக் கலந்துவிட்டிருந்தார் அவர். இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து அதனுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர். ஷஃபி மூனிஸ் என்றால் ஜமாஅத்தே இஸ்லாமி என்கிற அளவுக்கு இயக்கத்தையும் தன்னையும் பின்னிப் பிணைத்துக் கொண்டவர்.
6 ஏப்ரல் அன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு தில்லியில் பட்லா ஹவுஸ் அடக்கத்தலத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்தியப் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்ததால் ஜமாஅத்தின் முக்கியமான மனிதர்கள் அனைவரும் அங்கு திரண்டுவிட்டிருந்தனர். அகில இந்தியத் தலைவர், பொதுச் செயலாளர், அகில இந்தியச் செயலாளர்கள், மத்தியத் தலைமையகப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், ஊழியர்கள் என ஜமாஅத்தின் ஒட்டுமொத்த பட்டாளமே அங்குத் திரண்டுவிட்டிருந்தது. ஆக, மௌலானா ஷஃபி மூனிஸ் எந்த மனிதர்களை தனது அன்புக்குரியவர்களாக மதிப்புக்குரியவர்களாக நேசித்து வந்தாரோ, எவர்களுக்கு தன்னுடைய வாழ்வில் மற்றெல்லாரை விடவும்மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தாரோ அவர்கள் எல்லாருமே அங்கு குழுமி விட்டிருந்தனர்.

மௌலானாவுக்கு இயக்கம்தான் எல்லாமே. இயக்கம், இயக்கம், இயக்கம் என்று ஓயாமல் ஒழியாமல் பாடுபட்டார் அவர். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது அந்த இயக்கமே - ஒட்டுமொத்த இயக்கமே- அவரை வழியனுப்பத் திரண்டுவிட்டது. அந்தக் காட்சி நெஞ்சை நெகிழச் செய்வதாக இருந்திருக்க வேண்டும்.

ஸஆதத்துல்லாஹ் ஹுஸைனி எழுதுகின்றார்:

கடந்த ஏப்ரல் 3 முதல் 7 வரை நடந்த மத்தியப் பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மௌலானா ஷஃபி மூனிஸ் தள்ளாத வயதிலும், உடல் நலம் குன்றிய நிலையிலும் மத்தியப் பிரதிநிதிகள் சபையின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடப்பதற்கு முன்பு ஏப்ரல் 2 அன்று நடந்த மத்திய ஆலோசனைக் குழுவின் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அவர் எனக்கு எதிரில்தான் அமர்ந்திருந்தார். புன்னகை ததும்ப அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த காட்சி இன்றும் என்னுடைய மனத்திரையில் பதிந்திருக்கின்றது.
அவர் எங்களுடம் ஏப்ரல் 5 மாலை வரை இருந்தார். மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டில் தன்னுடைய வாக்குகளைப் பதிவு செய்து, கையெழுத்திட்டு, பொறுப்பாளர்களிடம் கொடுத்துவிட்டுத்தான் போனார். அவர் போகும் போது நண்பர்கள் பலரையும் சந்தித்து கைகுலுக்கிவிட்டே சென்றார். நானும் அவருடன் கூடவே பேசிக்கொண்டே நடந்து சென்று வழியனுப்பிவிட்டுத்தான் வந்தேன். அடுத்த நாள் அவர் வர மாட்டார் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அடுத்த நாள் காலை அமர்வில்தான் அந்தச் செய்தி வந்தது. மௌலானா அவர்கள் இரவு படுத்துக் கொண்டிருந்த நிலையில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி. அன்று மதியமே அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. நாங்கள் எல்லோருமே அவருடைய வீட்டுக்குப் போனோம். அவர் மிகவும் நிம்மதியாகப் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய அதரங்களில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. திடீரென்று கண் திறப்பார் :  “ஹதராபாதிலிருந்து ஏதாவது புதிய செய்தி இருக்கின்றதா? ஏதாவது நல்ல செய்தி உண்டா?” என விசாரிப்பாரோ என்றே தோன்றியது.

نشان  مرد   مومن   باتو   گویم 

  چوں مرگ آید تبسم بر لب اوست

“ஒரு நம்பிக்கையாளனின் அடையாளத்தைச் சொல்லட்டுமா? மரணம் வரும்போது அவருடைய முகத்தில் புன்னகை இருக்கும்” என்கிற பாரசீக கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
அன்று மாலை அவருடைய உடலை ஜமாஅத் தலைமையகத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.  அன்று இரவு இஷாவுக்குப் பிறகு நடந்த ஜனாஸா தொழுகையிலும் தொடர்ந்து நல்லடக்கத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றார்கள்.
அவர் ஜமாஅத்துக்காகவே வாழ்ந்தார். ஜமாஅத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுக்கு சாட்சியானார். ஜமாஅத்தின் முக்கியமான அகில இந்திய அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அவர் இறந்து போனார்.  

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...