Pages

Tuesday, June 11, 2013

தலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைகள்




“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள். 

அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் - வாழ்க்கை நெறியில் உங்க ளுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்க ளுக்கு ‘முஸ்லிம்கள்’ என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு அதே பெயர்தான்!) - தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக! எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள், மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன் தான் உங்களுடைய பாதுகாவலன், அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்! (திருக்குர்ஆன் 22 : 77,78)


அ) இயல்பான பாலியல் தேவையை நிறைவேற்றுதல்; மனத் திருப்தியயும் அமைதியையும் பெறுதல்..  
                                                                              (பார்க்க ; 7: 189)
ஆ) கண்ணியத்தையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி.                           (பார்க்க : 4 : 24)

இ) பரஸ்பர அன்பு நேசம் ஆகியவற்றின் அடிப்படையில் இனிமையான இல்லற வாழ்வுக்கான அடித் தளம் அமைத்தல்                                   (பார்க்க : 30 : 21)

ஈ) மனித இனத்தின் பாதுகாப்பு மற்றும் சந்ததி களைப் பெருக்கிக் கொள்ளுதல்                (பார்க்க 42 : 11)

மணமகனையோ அல்லது மணமகளையோ தேர்ந்தெடுக்கும் போது செல்வ வளம், அழகு, இனம், கோத் திரம், படிப்பு போன்றவற்றை அளவுகோலாக வைத்துக்கொள்வதற்குப் பதிலாக நடத்தை மார்க்கப் பற்று, போன்றவற்றுக்கே முதன்மை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அ) மணமகன், மணமகள் என இருவருடைய ஒப்புதலும் இருக்க வேண்டும்.

ஆ) மஹர்: பெண்ணை மணமுடித்துக் கொள்வதற்காக மணமகன் மஹர் என்கிற மணக்கொடையைக் கொடுக்க வேண்டும்.

இ) பெண்ணின் வக்காலத்து செய்யக் கூடியவரும் இரண்டு சாட்சிகளும் இருக்க வேண்டும்.

ஈ) திருமணம் பற்றிய அறிவிப்பு செய்யப்பட வேண்டும். ஊரார் அறிய திருமணம் நடக்க வேண்டும்.

 2.1 திருமணம்: கணவனுக்கும் மனைவிக்கும் இடையே செய்யப்படுகின்ற ஒப்பந்தம் (contract) தான் திருமணம்.

அ) இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் தமக்குள் பாலுறவை வைத்துக் கொள்வது அவர்களுக்கு ஆகுமானதாகும்.

ஆ) அவர்கள் மூலமாகப் பிறக்கின்ற குழந்தையின் பாரம்பர்யம் நிறுவப்படுகின்றது.

இ) அவர்கள் இருவர் மீதும் கடமைகளும் உரிமைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன.

2.2 இத்துணை நாட்களுக்குத்தான் அல்லது இத்துணை ஆண்டுகளுக்குத்தான் என திருமணத்தைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அடைத்து விடுவதை (timebound marriage) இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.

2.3 திருமணம் புரிந்து கொள்ளும் போது வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம் என்கிற எண்ணம் மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் இருக்க வேண் டும். ஆனால் இடைக்காலத்தில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதெனில், இருவரும் சேர்ந்து வாழவே முடியாத அளவுக்கு அந்தக் கருத்து வேறுபாடும் மனக் கசப்பும் முற்றிப் போய் விட்டதெனில் இந்த நிகாஹ் என்கிற திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம். இந்த மணமுறிவை தலாக், குளா, ஃபஸ்கே நிகாஹ் என்று வகைப்படுத்தலாம்.

3.1 திருமண ஒப்பந்தத்தை முறிக்கவோ துடைத் தழிக்கவோ கணவனுக்கு இருக்கின்ற அதிகாரத்திற்குப் பெயர் தான் தலாக். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் திருமணத்தை முறிக்கவோ துடைத்தொழிக்கவோ செய்வதற்காகப் பயன்படுத்துகின்ற சொல்லும் தலாக் தான்.

3.2  திருமண ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக மனைவிக்குத் தரப்பட்டுள்ள உரிமை தான் குளா. திருமண ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கணவனை இணங்கச் செய்வதற்காக, திருமணத்தின்போது கணவன் கொடுத்த மஹர் பணத்தையும் கணவன் கொடுத்த பொருளை அல்லது அவற்றின் ஒரு பகுதியையும் அவள் கணவனுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.

3.3 ஃபஸ்கே நிகாஹ் தஃப்ரீக்கே பைன சவ்ஜைன் : ஒரு தம்பதியின் திருமண உறவை ரத்து செய்வதற்கு சமூகத்தின் முதன்மை காஜி (நீதிபதி)க்கு இருக்கின்ற அதிகாரம் தான் ஃபஸ்கே நிகாஹ். தம்பதியினரை பிரிப்பதற்கு அவருக்கு இருக்கின்ற அதிகாரம்தான்  தஃப் ரீக்கே பைன சவ்ஜைன்.

4.1 அறிவுக்குப் பொருத்தமான நியாயமான காரணங்களின் அடிப்படையில் தலாக், குளா ஆகியவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆனால் இந்த விஷயத்தில் சட்டுபுட்டென்று காரியமாற்றாமல் நிதானத்துடனும் காலம் தாழ்த்தியும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். ஆற அமர எல்லாக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பிணக்குக்கு வித்திட்ட காரணங்களைக் களைவதற்காக, திருத்திக் கொள்வதற்காக கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. இவ்வாறு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகும் சிக்கல் நீடித்தால் மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கணவனோ அல்லது மனைவியோ மனநிலை பாதிக்கப்பட்டு விட்டால் அல்லது கணவன் ஆண்மையற்றவராக இருந்தால் சிகிச்சை செய்வதற்கு பொருத்தமான கால அவகாசத்தைத் தருவது அவசியம் ஆகும்.

4.2 பிரிந்து போவதற்கான நியாயமான, ஆகுமான காரணம் இருந்தாலும் பிரிவை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மாற்றுத் தீர்வைத் தேடியடைவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. எடுத்துக்காட்டாக, கணவனின் பாலியல் தேவையை நோய் அல்லது உடல் பலவீனம் காரணமாக மனைவியால் நிறைவேற்ற முடியாமல் போகும் போது அவளை கைவிடுவதற்குப் பதிலாக இன்னொரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ளலாம்.

4.3 ஒருவர் மற்றவரின் தவறுகளையும் பிழைகளையும் மன்னிக்காமல் அவற்றையே எண்ணி எண்ணி குமைந்து கொண்டிருப்பதன் காரணமாகத் தான் கருத்து வேறுபாடும் மோதலும் வளர்வதற்கு அடிப்படையான, முதன்மையான காரணமாகும். ஒருவர் மற்றவரின் தவறுகளை மன்னித்துவிடுமாறு இறைநம்பிக்கையாளர்களுக்குக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது. (பார்க்க 3 : 134)

4.4 வேறுபாடுகளையும் மனத்தாங்கல்களையும் ஊட்டி வளர்ப்பது கோபம்தான். இறைநம்பிக்கையாளர் களின் முக்கியமான பண்பு கோபத்தை விழுங்கிக் கொள்ளுதல் என குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க : 3:134)

 4.5 கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவரு டைய சில குணங்கள் மற்றவருக்கு பிடிக்காமல் போகும் போது அந்த அதிருப்தி வெறுப்பாக வளர்ந்து பிளவு வரை கொண்டு சென்றுவிடுகின்றது. இது தொடர்பாக குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்குக் கூறுகின்ற அறிவுரை என்ன தெரியுமா? ‘அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைகொள்ளுங்கள். ஏனெ னில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகள் வைத்திருக்கக் கூடும்.’ (பார்க்க 4 : 19) ஒருவர் மற்றவரின் எதிர்மறையான அம்சங்களில் மட்டும் தம்முடைய பார்வைகளைக் குவித்து வைக்காமல் நேர்மறையான அம்சங்களை மதித்து வாழ வேண்டும்.

4.6 கணவனாகட்டும், மனைவியாகட்டும் தம்முடைய உரிமைகள் மீது காட்டுகின்ற அக்கறையை தம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடமை கள் மீது செலுத்தத் தவறினாலும் அது மனக் கசப்புக்கும் கருத்து வேறுபாட்டுக்கும் பிளவுக்கும் வித்திடும். இந்த விஷயத்தில் குர்ஆன் மிகப் பெரும் எச்சரிக்கையை விடுத்து பிளவுக்கான இந்தப் பாதையையும் அடைத்து விடுகின்றது. “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும்.” (பார்க்க 61 : 2,3)

Related Posts Plugin for WordPress, Blogger...