Pages

Wednesday, August 29, 2012

ஆட்டோவில் இஸ்லாமிய அழைப்பு!

நில்... கவனி... படி...! 
ஆட்டோவில்    
இஸ்லாமிய அழைப்பு!’

பெங்களுர் ஸலாம் சென்டரின் மற்றுமோர் மகுடம் என்று அதனைச் சொல்லலாம்.

விளம்பரப் பதாகைகளில் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் சொன்னவர்கள்,
நீதி மன்றங்களில் குர்ஆன் ஓசையை முழங்க விட்டவர்கள்,
நீதியரசர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இறைவேதத்தைத் தந்து மனம் நிறைந்தவர்கள்,
மூத்த காவல்துறை அலுவலர்களுக்கு குர்ஆன் பிரதிகளைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள்,
இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஏடுகளை தரமான தாளில், கலை எழில் மிளிர, அறிவமுதம் சொட்டச் சொட்ட அழகிய ஆக்கங்களை இலவசமாக விநியோகித்து மகிழ்ந்தவர்கள்,
இப்போது மற்றுமோர் வெற்றிகரமான பணியைத் தொடங்கியிருக்கின்றார்கள்.




எந்நேரமும் எப்போதும் இறைவனின் செய்தியைச் சமர்ப்பிக்க வேண்டுமே என்கிற ஓயாத எண்ணத்திலும் கவலையிலும் முகிழ்ந்த அருமையான திட்டம் என்று அதனைச் சொல்லலாம்.

ஆம்.

இன்று மாநகர மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற ஆட்டோக்களில் இஸ்லாமிய நூல்களை வைத்து ஆட்டோக்களை நடமாடும் இஸ்லாமியப் படிப்பகங்களாய் மாற்றி இருக்கின்ற திட்டம்தான் அது.

ஆட்டோவில் ஒட்டுநரின் முதுகுக்குப் பின்னால் மீட்டர் பொருத்தப்படுகின்ற இடத்தில் விஞ்ஞான முறையில் வடிவமைக்கப்பட்ட பேழைகளில் இஸ்லாமிய நூல்கள் வைக்கப் பட்டிருக்க,
கண்கவர் முகப்புகளுடன் கொள்ளை அழகுடன் புத்தகங்கள் ‘படி.. படி..’ என மௌனமாய் அழைக்க,
‘உலகப் பொதுமறை குர்ஆன்’, ‘அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை அண்ணல் நபி-களார்(ஸல்)’, ‘இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளும் சரியான விளக்கங்களும்’ , ‘மறுமைச் சிந்தனை’, ‘ஹிஜாப்‘, ‘இஸ்லாமும் பயங்கரவாதமும்’ என நூல்களின் தலைப்புகள் பார்ப்போரின் கவனத்தைச் சுண்டியிழுக்க,
இந்தத் திட்டம் அறிமுகமான சில நாள்களிலேயே பெங்களுர் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேன்மேலும் படிக்க விரும்புகின்ற பயணிகளுக்கு இலவச நூல்களும் தரப்படுகின்றன. 

முதற்கட்டமாக ஐம்பது ஆட்டோக்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்-தியுள்ளனர். இதற்கென முதன்மை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு ஐவர் அடங்கிய குழு ஒன்று சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது.

ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சிறப்புப் பயிற்சி

ஐம்பது ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் விதத்தில் சிந்தனைப் பட்டறையும் நடத்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஒட்டுநர்கள் மனமுவந்து இந்தத் திட்டத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அறிமுகப்படுத்தப்பட்ட சில நாள்களுக்குள்ளாகவே இவர்கள் சந்தித்த அனுபவங்களும் எதிர்கொண்ட மக்களின் அணுகுமுறைகளும் இவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளன.

நிஸார் அஹ்மத் என்கிற ஆட்டோ ஒட்டுநர்தான் இந்தத் திட்டத்தில் சேர்ந்த முதல் ஆட்டோ ஒட்டுநர். இஸ்லாத்தின் செய்தியை மக்கள் வரை கொண்டு சேர்க்கின்ற மன நிறைவு என்னை ஆட்டோவிலிருந்து கீழே இறங்கவிடுவதில்லை. முன்பெல்லாம் மாலை ஆறு மணிக்கெல்லாம் வண்டியை வீட்டுக்குத் திருப்பிவிடுவேன். இப்போது இரவு பத்து, பத்தரை மணி வரை ஒட்டுகின்றேன் என்கிறார் அவர்.

காதர் பாஷா சொல்கின்றார்; ‘என்னுடை ஆட்டோவிலும் இஸ்லாமிய நூல்களை வைத்துள்ளேன். பயணிகளும் ஆர்வத்துடன் படிக்கின்றார்கள். பயணிகளை விட எனக்கு இது புது அனுபவம். அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றை இதற்கு முன்பு முழுமையாக நான் வாசித்ததே இல்லை. இப்போது வாசித்து விட்டேன். குர்ஆன் மொழிபெயர்ப்பையும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இது என்னுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.’

ஹாஃபிஸ் முஹம்மத் ஸாதிக் கூறுகின்றார்: ‘ஒரு முறை ஒரு இந்து புரோகிதர் என்னுடைய வண்டியில் ஏறினார். ஆர்வத்துடன் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அவர் போக வேண்டிய இடம் வந்த பிறகும் அவர் சிறிது நேரம் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருந்தார். இஸ்லாத்தின் செய்தியை சிறப்பாகப் பரப்புகின்றீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.’

பாஷா சொன்ன அனுபவம் நெஞ்சை நெகிழ வைப்பதாகும். அவர் சொல்கின்றார்: ‘ஒரு முறை ஒருவர் மிகவும் பரபரப்புடன் கைப்பேசியும் கையுமாக என்னுடைய வண்டியில் ஏறினார். ஏதோ ஒரு பிரச்னை போலும்! காரசாரமாக உரத்த குரலில் பேசி வந்தவர், ‘பிறகு பேசுகின்றேன்‘ எனச் சொல்லி கைப்பேசியை அணைத்துவிட்டார். பேழையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார். கன்னட மொழியில் குர்ஆன் கிடைக்குமா? எனக் கேட்டார்.

நானும் அவருடைய முகவரியை வாங்கிக் கொண்டேன். அடுத்த நாளே ஸலாம் சென்டரில் குர்ஆன் பிரதியை வாங்கிக்கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்று கொடுத்தேன். குர்ஆனை வாங்கிக் கொண்ட அவர் ஆயிரம் ரூபாய்த்தாளைக் கொடுக்க முற்பட்டார். நான் வேண்டாம் என மறுத்தேன். மறுமையில் இதற்காக இறைவன் எனக்குத் தரவிருக்கின்ற நற்கூலியே போதும் என்று சொன்னேன். என்னுடைய பதிலைக் கேட்டு அவர் சற்றுநேரம் திகைத்துப் போய் நின்றுவிட்டார்.

செய்தி :  ஷுஐப் ஷேக்
தொகுப்பு : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
Source : Here
Related Posts Plugin for WordPress, Blogger...